Friday, March 29, 2024
Home » இஸ்ரேலில் இருப்பது ஆபத்தானால் இலங்கையரை அழைத்துவர தயார்

இஸ்ரேலில் இருப்பது ஆபத்தானால் இலங்கையரை அழைத்துவர தயார்

by mahesh
November 1, 2023 11:10 am 0 comment

இஸ்ரேலில் தொழில்புரியும் இலங்கையர் ஆபத்தான சூழலை எதிர்கொண்டால், அவர்களை நாட்டுக்கு அழைத்துவர அரசாங்கம் தயாராக இருப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

இஸ்ரேல் – ஹமாஸ் குழுவினருக்கிடையில் இடம்பெற்றுவரும் மோதலில் இஸ்ரேலில் உயிரிழந்த அனுலா வீரசிங்கவின் பூதவுடல் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டு அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அனுலா வீரசிங்கவுக்கு உரித்தான அனைத்து நட்டஈட்டு கொடுப்பனவுகளையும் செலுத்துவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

இஸ்ரேலில் பணி புரிந்துவரும் எமது தொழிலாளர்கள், அங்கு ஆபத்தான சூழலை எதிர்கொண்டால், அவர்களை நாட்டுக்கு அழைத்துவர தயாராக இருக்கிறோம். எனினும், அவ்வாறு நாட்டுக்கு அழைக்குமாறு இதுவரை யாரும் கோரிக்கை விடுக்கவில்லை.

அத்துடன் யுத்தம் இடம்பெறும் பிரதேசங்களில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களில் இருப்பதாக எமக்கு தகவல் கிடைக்கிறது.

இஸ்ரேலில் மாத்திரமல்ல, அண்மித்த நாடுகளில் பணிபுரியும் இலங்கையருக்கும் ஆபத்துக்கள் இருப்பதாக உணர்ந்தால், அவர்களை நாட்டுக்கு அழைத்துவர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தயார் செய்திருக்கிறோம்.

அத்துடன் எமது நாடு இஸ்ரேலுக்கோ பலஸ்தீனத்துக்கோ மாத்திரம் ஆதரவான நாடல்ல. நடுநிலையான கொள்கையின் அடிப்படையிலேயே நாடு செயற்பட்டு வருகிறது.

நாங்கள் யுத்தத்துக்கு ஆதரவில்லை. அதேநேரம் இஸ்ரேலில் விசா இல்லாமலுள்ள இலங்கையருக்கு விசா வழங்குவதை நான் அனுமதிக்கமாட்டேன். இவ்வாறு விசா வழங்குவதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருப்பதை நான் கண்டேன்.

இலங்கையில் வாழமுடியாதென தெரிவித்து இங்கிருந்து சென்று சட்டவிரோதமான முறையில் அந்நாட்டில் உள்ளவர்களுக்கு விசா வழங்குவது சட்டவிரோதமாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT