Thursday, March 28, 2024
Home » வட, கிழக்கு தமிழரின் அடையாளமாக சம்பந்தனை சர்வதேசமே ஏற்றிருக்கிறது

வட, கிழக்கு தமிழரின் அடையாளமாக சம்பந்தனை சர்வதேசமே ஏற்றிருக்கிறது

பதவி விலக்க துடிப்போருக்கு விக்கி MP பதிலடி

by mahesh
November 1, 2023 10:30 am 0 comment

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் ஓர் அடையாளம். அந்த அடையாளத்தை வெளியேற்றினால் அவரது இடத்துக்கு வரக்கூடியவர்கள் எவரும் இல்லையென தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்கினேஸ்வரன் ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இரா. சம்பந்தன் பதவி விலகத் தேவையில்லை. அவரைக் கட்டாயப்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை. சம்பந்தனின் பாராளுமன்றக் காலம் 2025 வரை என்று இருந்தாலும் பாராளுமன்றம் அதற்கு முன்னர் கலைக்கப்படக்கூடிய சந்தர்ப்பங்களே அதிகம். வடக்கு – கிழக்குத் தமிழ் பாராளுமன்ற அங்கத்தவர்கள் பாராளுமன்றத்தில் தமது குரலையும், உடலையும் வெளிக்காட்டுவதுதான் அவர்களின் கடமையென்று நினைப்பது தவறு. தமிழ் மக்களின் வருங்காலம், பாராளுமன்றத்தின் பெரும்பான்மை விருப்புடன் சுமுகமாக நிர்ணயிக்கப்படப் போவதில்லை. ஊரறிய, உலகறிய எமது அவலங்களை வெளிநாடுகளுக்குத் தெரியப்படுத்தினால்தான் ஏதாவது நடக்கும்.

தமிழ் மக்களின் தற்போதைய நிலையை சர்வதேசம் அறிந்து கொள்வதற்கு வெளிநாட்டுத் தூதரகங்களை நாடிய முக்கிய நபர் எமது இரா.சம்பந்தனே.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்கூட அண்மையில் அவரின் வாசஸ்தலம் சென்று அவரைச் சந்தித்தார். அவர் பேசுவது விளங்காவிட்டாலும் பக்கத்திலிருந்து அவற்றை அவர்களுக்கு விளங்கப்படுத்த சுமந்திரன் போன்றவர்கள் முன்வரவேண்டும். அவரைப் புறக்கணிக்கவோ – நீக்கவோ நடவடிக்கை எடுக்காமல் அவரின் பங்கை தமிழ் மக்களுக்கு நன்மை பயப்பதாக மாற்றுவதே – அவரின் பெயரைச் சொல்லி இதுவரை காலமும் அரசியல் நடத்தியோரின் கடமையாகும்.

ஒரு பக்கச்சார்பற்ற ஒரு நம்பகமான தமிழ்த் தலைவராக சம்பந்தனை வெளி உலகம் நினைக்கின்றது. அவரைப் புறக்கணிக்கவோ – நீக்கவோ முனைவது தமிழ் மக்களுக்கு இடையூறை விளைவிக்கும். இதனால்தான், இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஒரு கூட்டுத் தலைமை தேவை என்றேன். மாவை சேனாதிராஜா, சிறீதரன், சுமந்திரன் ஆகியோர் அந்தக் கூட்டுத் தலைமையில் இடம்பிடிக்க வேண்டும் என்றும் கூறினேன்.

யாழ். விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT