Friday, March 29, 2024
Home » நெருக்கடியிலிருந்து மீள்வது குறித்து வட்டமேசை மாநாடு
நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் ஸ்திரத்தன்மை முன்னேற்றம்

நெருக்கடியிலிருந்து மீள்வது குறித்து வட்டமேசை மாநாடு

IMF, WB, IFC, ADB, MIGA, UN என்பவற்றுடன் ஜனாதிபதி இரண்டாவது சந்திப்பு

by mahesh
November 1, 2023 6:05 am 0 comment

பொருளாதார மீட்சி மற்றும் ஸ்திரத்தன்மையின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில், நெருக்கடியிலிருந்து மீள்வது தொடர்பான இரண்டாவது உயர்மட்ட வட்டமேசை கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (31) கொழும்பில் நடைபெற்றது.

சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி (WB), சர்வதேச நிதி நிறுவனம் (IFC), பலதரப்பு முதலீட்டு உத்தரவாத நிறுவனம் (MIGA), ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB), ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIlB), ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் ( JISA), ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் நிறுவனம் (USAID), ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் ஐக்கிய நாடுகள் சபை (UN) மற்றும் தனியார் துறை மேம்பாட்டு பங்காளிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

2022 டிசம்பரில் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த உயர்மட்ட வட்டமேசைக் கலந்துரையாடல், பொருளாதார மற்றும் கட்டமைப்பு தொடர்பான முக்கிய பிரச்சினைகளை மையமாகக் கொண்டு அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் மறுசீரமைப்புத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராயும் நோக்கத்துடன் இக்கூட்டம் கூட்டப்பட்டது.

நெருக்கடி நிலையிலிருந்து நிலையான வளர்ச்சிப் பாதைக்கு பிரவேசித்தல், முதலீடுகளை ஈர்த்தல், தனியார் மூலதனத்தை ஈடுபடுத்துதல், வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் பசுமை அபிவிருத்திக்குத் தேவையான அர்ப்பணிப்பை பேணுதல் என்பன குறித்து இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

நாடு, எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதானால் பல் தரப்பு நிதி நிறுவனங்களின் உதவியுடன் ஒருங்கிணைந்த உதவித் திட்டம் அவசியமென 2022 டிசம்பரில் நடைபெற்ற அமர்வில், உலக வங்கி (WB), ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB), சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) ஆகியவற்றின் பிரதிநிதிகள் முடிவு செய்தனர்.

இதுவரை, இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மைக்கான ஆரம்ப அறிகுறிகளைக் காட்டியுள்ளதுடன், பணவீக்கத்தைக் குறைத்தல், அந்நியச் செலாவணி பணப்புழக்க அழுத்தங்களைத் தளர்த்துதல் மற்றும் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு மூலோபாயத் திட்டத்தை அங்கீகரித்தல் உள்ளிட்ட கடன் மறுசீரமைப்புச் செயல்பாட்டில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

இலங்கை அரசாங்கத்தின் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி (EFF) உதவியுடனும் ஏனைய அபிவிருத்தி பங்காளிகளின் ஆதரவுடன், அடிப்படை சட்டங்கள் இயற்றப்பட்டு, ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும், சர்வதேச நிதிச் சந்தைக்குள் மீண்டும் பிரவேசிக்கவும் கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன.

வரையறுக்கப்பட்ட நிதி மூலங்கள் மற்றும் வெளிப்புற இடையூறுகள் காரணமாக, இந்த மீட்சிக்கான பாதை இன்னும் விரிவுபடுத்தப்படவில்லை.

முன்னோக்கிச் செல்வதானால் நிரந்த அபிவிருத்திப் பாதையொன்றை மீளப் பெறுவதற்காக, விரைவானதும் போதுமானதுமான வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார நிர்வாகத்தை மேம்படுத்துவது அவசியம்.

நிலையான வளர்ச்சிப் பாதையை மீண்டும் பெறுவதற்கும்,

வறிய மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாப்பதற்கும் நுண் பொருளாதார கட்டமைப்பில் சீர்திருத்தங்களை செயல்படுத்துதல் அவசியம்.

அபிவிருத்தி பங்காளிகள் உட்பட இதனுடன் தொடர்புடைய பங்குதாரர்களை உள்ளடக்கி இந்த சீர்திருத்தங்களை ஒருங்கிணைக்க தெளிவான மற்றும் சுருக்கமான செயல்திட்டம் இருப்பது, அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்த சீர்திருத்த திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு பங்களிப்பு வழங்கும்.

மீட்சியிலிருந்து நிலையான வளர்ச்சிப் பாதையை நோக்கி நகரும் இலங்கைக்கான அபிவிருத்தியின் மூலோபாய திசைகள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இங்கு கருத்துத் தெரிவித்தார்.

சீர்திருத்த முன்னுரிமைகள், முன்னேற்றம், சவால்கள் மற்றும் வாய்ப்புகளை சுட்டிக்காட்டி , நிதி அமைச்சின் செயலாளர் கே. எம். மஹிந்த சிரிவர்த்தன, “2022 டிசம்பரில் நடைபெற்ற கடைசி வட்டமேசைக் கலந்துரையாடலிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்ட முக்கிய உறுதிப்படுத்தல் நடவடிக்கைகள் மற்றும் இதன் முன்னேற்றங்கள் குறித்து

கருத்துத் தெரிவித்தார். பலதரப்பு அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து செயல்படக்கூடிய அரசாங்கத்தின் சீர்திருத்த ஒருங்கிணைப்பு தளம் குறித்தும் அவர் கருத்து வெளியிட்டார்.

இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் அடைந்துள்ள முன்னேற்றங்களை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க விசேட விளக்கமொன்றை வழங்கினார்.

இந்தக் கருத்துக்களைத் தொடர்ந்து, சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி (WB), சர்வதேச நிதி நிறுவனம் (IFC), பலதரப்பு முதலீட்டு உத்தரவாத நிறுவனம் (MIGA), ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB), ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIlB) , ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம், ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் நிறுவனம் (USAID), ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் ஐக்கிய நாடுகள் சபை (UN) போன்ற சர்வதேச பங்காளிகள் மற்றும் தனியார் துறை அபிவிருத்திப் பங்காளிகள் போன்ற தரப்பினரால் இங்கு முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் உள்ளக செயற்பாட்டு அடிப்படையில் நீண்ட கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு இது தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT