Home » ‘நாம் 200’ மாபெரும் நிகழ்வு நாளை சுகததாச அரங்கில்
மலையக மக்கள் இலங்கைக்கு வந்த தினம்

‘நாம் 200’ மாபெரும் நிகழ்வு நாளை சுகததாச அரங்கில்

- சிறப்பதிதி ஜனாதிபதி; சீதாராமன் கௌரவ அதிதி

by mahesh
November 1, 2023 6:02 am 0 comment

இந்திய வம்சாவளி மக்கள் இலங்கையில் குடியேறி இருநூறு ஆண்டுகள் நிறைவடைவதை சிறப்பிக்கும் வகையில் அரசாங்கத்தின் பூரண அனுசரணையுடன் ‘நாம் 200’ நிகழ்வு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நாளை நடைபெறவுள்ளது.

அமைச்சர் ஜீவன் தொண்டமான், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோர் பங்கேற்கும் இந்நிகழ்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது. தொழிற்சங்க பேதமின்றி அனைவரையும் இந்நிகழ்வில் பங்கேற்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

இந்திய அரசாங்கத்தின் முழுமையான பங்களிப்புடன் நடைபெறும் இவ்விழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, மற்றும் அமைச்சர்கள் இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகள், தமிழக அரசியல் பிரமுகர்கள் மற்றும் வெளிநாட்டு ராஜதந்திரிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தரான பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை (02) இலங்கைக்கு வரவுள்ளார்.

அவரது இவ்விஜயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவர்களையும் சந்திக்க உள்ளார்.

அதேபோன்று திருகோணமலைக்கு விஜயம் செய்யும் இந்திய நிதி அமைச்சர் அங்கு State Bank of India வின் கிளையையும் திறந்துவைக்கவுள்ளார்.

அன்றைய தினம் மாலை கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘மலையகம் 200’ நிகழ்விலும் அவர் பங்கேற்க உள்ளார். இதன்போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளையும் இந்திய நிதி அமைச்சர் சந்திப்பாரென, அறிய முடிகிறது.

இலங்கையின் பொருளாதார மேம்பாட்டுக்கு பெரும் பலமாகவுள்ள மலையக மக்களின் 200 வருட கால வரலாற்றையும், நாட்டுக்காக அம்மக்கள் செய்த தியாகங்களையும் நினைவு கூரும் வகையிலேயே, இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் தலைமையில் இந்நிகழ்வு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நாளை (02) பிற்பகல் 3.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT