எமது வீரர்களது திறமைகளை ஒப்பிட்டால் இந்திய அணி கூட எமக்கு இரண்டாவதாகிவிடும் | தினகரன்

எமது வீரர்களது திறமைகளை ஒப்பிட்டால் இந்திய அணி கூட எமக்கு இரண்டாவதாகிவிடும்

அணியின் தலைவர் திஷர பெரேரா

எமது ஒவ்வொரு வீரர்களது திறமையையும் ஒப்பிட்டால் இந்திய அணி கூட எமக்கு இரண்டாவதாகிவிடும் என்று இலங்கை ஒரு நாள் மற்றும் ரி20 அணியின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் சகலதுறை வீரர் திஷர பெரேரா குறிப்பிட்டார்.

ஒரு நாள் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் ரி20 போட்டிகளுக்கே திஷர பெரேரா தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்திய அணியை எதிர்கொள்வது சவால் கொண்டது என்றபோதும் ஆரம்பத்தில் ஒரு போட்டியில் வென்று அதில் இருந்து அணியை வழிநடத்திச் செல்வதே தனது ஒரே இலக்கு என்று திஷர பெரேரா குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள இலங்கை கிரிக்கெட் தலைமையகத்தில் (29) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து இலங்கை ஒரு நாள் அணியின் தலைவராக திஷர பெரேரா நியமிக்கப்பட்டிருக்கும் விபரத்தை இலங்கை கிரிக்கெட் நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா அறிவித்தார். இதன் போது அவர் கூறியதாவது,

“அண்மையில் நடந்து முடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான ரி 20 தொடரில் தலைமை வகித்த திசரவிடம் சில சிறப்பம்சங்களைக் காணமுடிந்தது. தேர்வாளர்களும் அதனை அவதானித்தார்கள். எனவே இந்திய சுற்றுப்பயணத்திலும் அவருக்கு தலைமை பொறுப்பை வழங்க தேர்வாளர்கள் முடிவெடுத்தார்கள்.

பாகிஸ்தான் மற்றும் டுபாயில் நடந்த ரி20 போட்டிகளில் அவருக்கு அணி வீரர்களிடம் இருந்து அதிக ஆதரவு கிடைத்தது. அதே போன்று அவரது ஆக்ரோஷமான ஆட்டத்தையும் எம்மால் பார்க்க முடிந்தது. ஒருநாள், ரி 20 போட்டிகளில் எமக்கு அவ்வாறான ஆக்ரோஷ ஆட்டமே தேவைப்படுகிறது” என்று குறிப்பிட்டார்.

இலங்கை அணிக்காக இதுவரை 125 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கும் 28 வயதுடைய திசர பெரேரா 63 T20 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். கடந்த எட்டு ஆண்டுகளாக இலங்கை அணிக்காக விளையாடி வரும் அவர் தலைமை பொறுப்பை ஏற்றதன் மூலம் கனவு நிறைவேறியதாகக் குறிப்பிட்டார்.

“சிறு வயதில் இருந்து கிரிக்கெட் விளையாடுவதற்கே ஆசை இருந்தது. அந்த ஆசையை அடுத்து நாட்டுக்காக ஆடுவது எந்த ஒருவருக்கும் இருக்கும் அடுத்த ஆசையாகும். தேசிய அணிக்கு எப்போதாவது தலைமை வகிக்க வேண்டும் என்பது எனது அடுத்த இலக்காக இருந்தது. அது எந்த ஒரு வீரருக்கும் இருக்கும் கனவாகும்.

கடந்த மதம் நான் ரி20 தலைவராக செயற்பட்டேன். தற்போது ஒருநாள், ரி20 இரண்டிலும் தலைமை பொறுப்பை வகிக்கிறேன். என்னால் முடியுமானதை நுற்றுக்கு இரு நூறு மடங்கு நாட்டுக்காக செய்வேன்” என்று திசர பெரேரா இந்த ஊடக சந்திப்பில் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் திசர பெரேராவுக்கு இலங்கை அணியில் நிரந்த இடம் கிடைக்கவில்லை. இலங்கை அணி இந்த ஆண்டில் 26 ஒருநாள் போட்டிகளில் ஆடியபோதும் திசர பெரேராவுக்கு 11 போட்டிகளில் மாத்திரமே வாய்ப்பு கிடைத்தது. எனினும் இலங்கை அணி இந்த ஆண்டு விளையாடிய 12 ரி 20 போட்டிகளில் 9 போட்டிகளுக்கு திஷர பெரேரா அழைக்கப்பட்டுள்ளார். அவரது ஆட்டத் திறனும் போட்டிகளுக்கு போட்டி மாறுபட்டிருந்தது.

“தலைமை பொறுப்பு கிடைத்த பின் அணியின் நிரந்த வீரராக முடியும். அணித் தலைவருக்கு இருக்கும் ஒரே ஒரு நல்ல விடயம் அது மட்டும் தான். கடந்த காலத்தில் எனது திறமையில் பின்னடைவு இருந்தது, மீண்டும் அது உயர்வடைந்தது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் நான் அணிக்கு வருகின்ற, போகின்றவனாகவே இருந்தேன்.

அணித் தலைவர் என்ற வகையில் நான் அணியின் நிரந்தர வீரர் எனவே கடந்த காலங்களை விடவும் எதிர்காலத்தில் என்னால் சிறப்பாக செயற்பட முடியும் என்று நான் நம்புகிறேன்” என்று திசர பெரேரா குறிப்பிட்டார்.

திஷர பெரேரா ஒரு நாள் போட்டிகளில் 108 ஓட்ட வேகத்தை பெற்றபோதும் வெறுமனே 17 ஓட்ட சராசரியையே பதிவுசெய்துள்ளார். அதேபோன்று 133 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கும் திசர பெரேராவின் பந்துவீச்சு சராசரி 32.62 ஆகும்.

உலகின் முதல் நிலை அணியாக மாறியிருக்கும் இந்தியாவுடன் இலங்கை அணி இந்த ஆண்டு அறு ஒரு நாள் போட்டிகளில் ஆடியபோதும் அதில் ஒன்றில் மாத்திரமே வெல்ல முடிந்தது. எஞ்சிய ஐந்து போட்டிகளிலும் தோல்வியையே சந்தித்தது. ஒட்டு மொத்தமாக இந்திய அணி இந்த ஆண்டு ஆடிய 26 ஒரு நாள் போட்டிகளில் 19 இல் வெற்றி பெற்று ஆறு போட்டிகளில் மாத்திரமே தோல்வியை சந்தித்தது.

இலங்கை அணியும் இந்த ஆண்டில் இதுவரை 26 ஒரு நாள் போட்டிகளில் ஆடியபோதும் அதில் 4 போட்டிகளில் மாத்திரமே வெற்றி பெற முடிந்தது. 21 போட்டிகளில் தோல்வியையே சந்தித்தது.

“கடந்த காலங்களில் நாம் பின்னடைவை சந்தித்தோம். என்றாலும் இலங்கை என்பது கடந்த காலங்களில் தரவரிசையில் முதலாவது, இரண்டாவது இடத்தில் இருந்த அணி. எந்த ஓர் அணிக்கும், வீரர்களுக்கும் பின்னடைவு ஏற்படும். துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு என்பவை யாராலும் கட்டுப்படுத்த முடியாத ஒன்று.

கடந்த காலத்தில் நடந்தவற்றை நாம் மறப்போம். அப்படி பார்க்கப்போனால் நாம் உலகக் கிண்ணத்தை வென்றிருக்கிறோம். அதற்கு முன் நாம் முதலாமிடம், இரண்டாம் இடம் எல்லாவற்றையும் பெற்றிருக்கிறோம். இப்போது நாம் கீழே விழுந்திருக்கிறோம். இந்த அதலபாதாளத்தில் இருந்து எப்படியாவது மீண்டுவருவதற்காகவே திட்டமிட வேண்டும்” என்றார் திசர பெரேரா.

இலங்கை அணியின் பல வீரர்களும் அண்மைக்காலத்தில் காயத்திற்கு உள்ளானது அணியின் பின்னடைவுக்கு முக்கிய காரணிகளில் ஒன்றாகும். முன்னாள் அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ், குசல் பெரேரா என்று முன்னணி வீரர்கள் காயத்திற்கு உள்ளாகினர்.

“இந்தியாவுடன் இந்திய மண்ணில் விளையாடுவது எந்த ஒரு அணிக்கும் சவாலானதாகும். அந்த அணியே அனைத்து துறைகளிலும் தற்போது உலகில் முதல் நிலையில் உள்ளது. என்றாலும் எமது அனைத்து வீரர்களது திறமையையும் ஒருவர் ஒருவராக ஒப்பிட்டு பார்த்தால் இந்தியா கூட எம்மிடம் இரண்டாவதாகிவிடும். எமது வீரர்கள் அனைவருக்கும் அதிக திறமை இருக்கிறது என்பது எனது தனிப்பட்ட நம்பிக்கை.

இந்த திட்டம் சரியான முறையில் செயற்பட்டால் எமக்கு தொடரை வெல்ல முடியும். என்றாலும் ஆரம்பத்தில் ஒரு போட்டியில் வென்று அதில் இருந்து தொடர்ந்து செயற்படுவதே எனது ஒரே நோக்கம்” என்று திசர பெரேரா கூறினார்.

இலங்கை ஒருநாள் அணி இந்த ஆண்டு பெரும் பின்னடைவை சந்தித்தது. ஜிம்பாப்வே அணியிடம் முதல் முறை தொடர் தோல்வி ஒன்றை சந்தித்ததை அடுத்து அணித் தலைவராக இருந்த மெதிவ்ஸ் இராஜினாமா செய்தார். தொடர்ந்து உபுல் தரங்க தலைவராக நியமிக்கப்பட்டார். என்றாலும் அவரது தலைமையின் கீழ் இலங்கை அணி சொந்த மண்ணில் இந்தியாவிடம் தொடரை 5-0 என முழுமையாக தோற்றதோடு வெளிநாட்டில் பாகிஸ்தானிடமும் ஒருநாள் தொடரை 5-0 என முழுமையாக பறிகொடுத்தது.

உபுல் தரங்க தலைமை பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது குறித்து ஆஷ்லி டி சில்வாவிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர்,

“உபுல் தரங்க தலைமை பொறுப்பில் இருந்ததை விட அவர் தலைமையில் இல்லாதபோது அதிக திறமைகளை வெளிப்படுத்தினார். அது தவிர அவர் தலைவராக இருந்த போது நாம் பெற்ற வெற்றி, தோல்விகள் பற்றி சாதாரண ஆய்வொன்றை செய்து பார்த்தால் அதிக வெற்றிதருவதாக காண முடியவில்லை. அவரது திறமையில் எந்தக் குறைவும் இல்லை. ஆனால் தலைவராக தனது திறமையை காட்டவில்லை” என்றார்.

எதிர்வரும் காலங்களில் போட்டி தொடர்களுக்கே தலைவர்கள் தேர்வு செய்யப்படுவதாகவும் ஆஷ்லி டி சில்வா குறிப்பிட்டார். 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...