அழிவுச் சின்னமாகிறது தஞ்சை பெரிய கோயில்! | தினகரன்

அழிவுச் சின்னமாகிறது தஞ்சை பெரிய கோயில்!

தமிழ்நாட்டிலுள்ள தஞ்சை பெரியகோயில் தமிழர்களின் சிற்பக்கலை மற்றும் கட்டடக்கலை அறிவுக்கு ஒரு உன்னத எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. உலக மக்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி, ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றளவும் கம்பீரமாய் உறுதியுடன் நிற்கிறது தஞ்சைப் பெரிய கோயில். இதன் உறுதித்தன்மையில்தான் தற்போது பலருக்கும் கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன.

மிகப் பெரிய நிலப்பரப்பில் அமைந்திருப்பது தஞ்சைப் பெரிய கோயில். அக்காலத்தில் தஞ்சை மக்களின் மாலைநேர சரணாலயமாகத் திகழ்ந்தது பெரிய கோயில். சந்தியாகால பூஜையின் போது பெருவுடையாரை தரிசித்து விட்டு, பரந்த புல்வெளியில் அமர்ந்தபடி நெடுநேரம் இறைவனை தியானித்து விட்டு எழும் போது, அவர்களின் மனங்கள் பரவசத்தால் நிறைந்திருக்கும். பின்னர், இரவு உணவு முடித்து உறங்கச் செல்லும் அவர்களின் மறுநாள் விடியல் அத்தனை உற்சாகமாகத் தொடங்கும்.

ஆனால்... இன்று..?

பெரிய கோயிலும் இருக்கவே செய்கிறது. நாளும் பக்தர்கள் வருவதும் வாடிக்கையாகவே இருக்கிறது. ஆனால், நாளை பெரிய கோயிலின் நிலை? கோயிலுக்குச் சென்று பார்த்த போது இந்தக் கேள்வி ஏற்படவே செய்கிறது. காரணம் பெரிய கோயிலைச் சுற்றி நிற்கும் சர்ச்சைகள்தான்.

சோகத்தில் முடிந்த கும்பாபிஷேகம்:

தஞ்சைக் கோயிலில் நடைபெறும் விழாக்களில் கலந்து கொள்ளும் ஆட்சியாளர்களின் பதவி நிலைக்காது என்று ஒரு தவறான நம்பிக்கை காலம்காலமாகவே நிலவி வருவது பலரும் அறிந்த விஷயம்தான். அதேபோல், 1997-ம் வருடம் தஞ்சைப் பெரிய கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது, யாகசாலை பூஜை வேளையில் பந்தலில் பற்றிய தீ கோயில் முழுவதும் பரவி, 48 பேர் உயிரிழந்ததும், பலரும் படுகாயம் அடைந்ததும் இடம்பெற்றன.

இதனால், தஞ்சைப் பெரிய கோயில் பற்றிய விஷயங்களில் ஆட்சியாளர்கள் போதிய கவனம் செலுத்துவதில்லை. அதன் காரணமாகவே, தஞ்சைப் பெரிய கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடைபெற்று 20 வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருக்கிறது. அதற்கான முயற்சிகள் கூட மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.

கேள்விக்குள்ளாகும் உறுதித்தன்மை:

பொதுவாக 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி 2009 -ம் ஆண்டு நடைபெற்றிருக்க வேண்டிய பெரியகோயில் கும்பாபிஷேகமானது 20 ஆண்டுகள் ஆகியும் நடத்தப்படாமல் இருக்கிறது.

தற்போது கோயிலின் ஒருசில இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பெரியகோயிலின் வழிபாட்டுமுறைகள் திட்டமிட்டு மாற்றப்படுவதாகவும், கோயில் கட்டுமானங்கள் சிதைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் போடப்பட்ட ஆழ்துளைக் கிணறு பற்றி தொன்ம கட்டடக்கலை நிபுணர்கள் குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்திய தொல்லியல் துறை இயக்குநர் (பராமரிப்பு) ஆர்.எஸ்.ஜாம்வால் தலைமையில் வந்த ஆய்வுக்குழுவும் கோயிலின் உள்ளே ஒரு சில இடங்களில் விரிசல்கள் விழுந்துள்ளதை உறுதி செய்துள்ளது. இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “இந்தக் கோயில் சேதம் அடைந்து விடும் என்று அஞ்ச வேண்டாம். கோயில் உறுதியாக இருக்கிறது. விரிசல் ஏற்பட்டுள்ள இடங்களை சீர்செய்யும் பணிகள் முன்னெச்சரிக்கையாக தொடங்கப்படும்” என்று கூறினார்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகின்ற கருத்துகள் வருமாறு:

கே.எம்.நாராயணன் (ஓய்வுபெற்ற இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர்) கூறியதாவது:

“தமிழர்களோட பாரம்பரிய அடையாளச் சின்னமாக இருக்கற இந்த பெரிய கோயில நல்லபடியா பராமரிச்சு, அதுக்கு சீக்கிரம் கும்பாபிஷேகம் நடத்தனுங்றதுதான் இங்க வர்ற எல்லா பக்தர்களோட விருப்பம். மறுபடியும் இதே மாதிரியான ஒரு கோயிலை நம்மால கண்டிப்பா கட்டமுடியாது. அதனால இருக்குற இந்தக் கோயிலையும் அதோட சிறப்பையும் அடுத்தடுத்த தலைமுறைகளும் பார்க்கணும்ங்கறதுக்காக, அந்தக் கோயிலைப் பாதுகாக்க வேண்டியது நம் எல்லாருடைய கடமை” என்றார்.

முனைவர் சுப்பிரமணியன் (ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வர்) கூறுகையில்,

“ஆட்சியாளர்கள் இந்த கோயிலுக்கு ஏதாவது செய்தால், தங்களோட பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோன்னு நினைக்குற சென்டிமென்ட முதல்ல விடணும். முன்னாடிய விட இப்ப இந்தக் கோயிலுக்கு வர்ற பக்தர்கள் கூட்டம் அதிகமாத்தான் இருக்குது. பிரதோஷம் போதெல்லாம் நிறைய பக்தர்கள் வர்றாங்க. இதெல்லாம் மனசுல வச்சு ஆட்சியாளர்களும், கோயில் அதிகாரிகளும், தொல்லியல் துறையும் இணைந்து கும்பாபிஷேகத்தை நடத்தணும். அதுதான் எல்லாருடைய விருப்பமும்” என்று கூறினார்.

தொல்லியல் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “1000 வருஷங்களாக புயல், மழை எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு இந்தக் கோயில் உறுதியோடு இருப்பதே பெரிய அதிசயம். இதில் சில இடங்களில் விரிசல்கள் வந்திருப்பது சாதாரணமான ஒன்றுதான். இருந்தாலும் அதையெல்லாம் சரிசெய்யும் பணிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. மேலும் கும்பாபிஷேகம் நடத்துவது சம்பந்தமான முயற்சி எடுக்க வேண்டியது தொல்லியல் துறையின் பணியில்லை. அது கோயில் நிர்வாகத்தின் கடமை. அதற்கான அனுமதி கொடுப்பது மட்டும் தான் எங்கள் வேலை” என்றார்.

கோயில் நிர்வாகத்தினரிடம் இதுகுறித்து கேட்ட போது, “கும்பாபிஷேகம் நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்வது குறித்து சமீபத்தில் தொல்லியல் துறை அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. கூடிய விரைவில் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும்” என்று மட்டும் கூறி முடித்துக் கொண்டனர்.

பக்தர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும் வகையில், தஞ்சை பெரியகோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற உரிய ஏற்பாடுகள் செய்ய முன்வருவார்களா என்பதுதான் தமிழர்களின் ஆதங்கம். 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...