பிணைமுறி விசாரணையில் வெளிப்படைத்தன்மை | தினகரன்

பிணைமுறி விசாரணையில் வெளிப்படைத்தன்மை

இலங்கை மத்திய வங்கி 2015.02.27 ஆம் திகதி அன்று மேற்கொண்ட பிணைமுறி ஏலவிற்பனையானது, இலங்கையின் அண்மைக் கால வரலாற்றில் இடம்பெற்ற மிக மோசமான ஒரு நடவடிக்கையாகப் பூதாகரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஏலவிற்பனையில் முறைகேடுகளும் மோசடிகளும் நிகழ்ந்துள்ளதாகக் குற்றச்சாட்டுக்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பின்புலத்தில் இவ்விடயம் இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு, பொதுநிறுவனங்கள் தொடர்பான ஆணைக்குழு (கோப்) என்றபடி கொண்டு செல்லப்பட்டது. இவ்வாறான நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிணைமுறி வழங்கல் சர்ச்சை தொடர்பாக ஆராய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து அதனூடாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளும் தற்போது நிறைவுற்றுள்ளன.

இப்பிணைமுறி ஏலவிற்பனை தொடர்பில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் குறித்து கடந்த காலங்களைப் போலன்றி வெளிப்படைத்தன்மையோடு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. அவ்விசாரணைகளுக்கு அரசாங்கம் பாரிய ஒத்துழைப்புகளை நல்கி வருகின்றது. இவ்விவகாரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எவ்வித கட்டாயப்படுத்தலும் இன்றி சுயமாக ஆணைக்குழு முன்பாக ஆஜராகி சாட்சியமளித்துள்ளார். இவை நீண்ட காலமாக ஜனநாயக பாரம்பரியத்தைப் பின்பற்றும் இலங்கையில் இடம்பெற்றிருக்கும் முன்னுதாரணம் மிக்க செயற்பாடுகளாகும்.

ஆனால், கடந்த ஆட்சிக் காலத்தில் ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. அவை தொடர்பில் அன்றைய ஆட்சியாளர்கள் எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. அத்தோடு அக்குற்றச்சாட்டுகளை நீதித்துறையும், ஆட்சியாளர்களும் கண்டு கொள்ளவுமில்லை. அன்று நீதித்துறையைத் தம் விருப்பத்திற்கு ஏற்ப நடத்தவே ஆட்சியாளர்கள் முயற்சி செய்தனர்.

என்றாலும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நாட்டில் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றத்தோடு நீதித்துறை சுதந்திரமும் அதன் சுயாதீனத்தன்மையும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டன. அவை இன்று மிகவும் சிறப்பான நிலையில் காணப்படுகின்றன. இதன் விளைவாக முன்னொரு போதும் இல்லாதபடி பிரதமர் கூட ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக ஆஜராகி சாட்சியமளிக்கும் நிலைமை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

அந்தளவுக்கு இந்நாட்டில் ஜனநாயக விழுமியங்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு மத்திய வங்கி பிணைமுறி ஏலவிற்பனை தொடர்பில் எழுப்பப்படும் சர்ச்சை தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகளும் நகர்வுகளும் மிகவும் சிறந்த எடுத்துக்காட்டுக்களாகும்.

இருந்தும் இப்பிணைமுறி வழங்கல் சர்ச்சை தொடர்பில் விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு 2017 நவம்பர் மாதம் 16 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தயாரித்த குற்றப்புலனாய்வு அறிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. பொதுநிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழுவில் (கோப்) அங்கம் வகிக்கும் 28 பாராளுமன்ற உறுப்பினர்களின் தொலைபேசி அழைப்புகள் குறித்த விபரங்கள் அவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அந்த அறிக்கையில் அர்ஜுன் அலோசியஸ் தொடர்பு கொண்ட உறுப்பினர்களின் பெயர்கள், அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகள் போன்றன உள்ளடக்கப்பட்டுள்ளன. பாராளுமன்ற சபை முதல்வரும், அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வறிக்கையை கடந்த திங்களன்று சபையில் சமர்ப்பித்து, 'இந்நடவடிக்கையின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியம்' எனச் சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

இதேவேளை, கடந்த சனியன்று ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்தியாளர் மாநாடொன்றைக் கூட்டி, 'நீதிமன்றத் தேவைக்காக மாத்திரம் பாராளுமன்ற உறுப்பினர்களின் தொலைபேசி உரையாடல் பதிவுகளைப் பெறலாம். ஆனாலும் அதனை சபாநாயகரின் அனுமதியைப் பெற்றுத்தான் பெற்றிருக்க வேண்டும். அந்நடைமுறை இங்கு பின்பற்றப்படவில்லை. அத்தோடு இவை ஊடகங்களுக்கும் சென்றிருக்கின்றன. இவற்றின் ஊடாக 225 பாராளுமன்ற உறுப்பினர்களினதும் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது' என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

'ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். எனினும் விசாரணைகள் முடிவுறும் வரை சகலரும் சந்தேக நபரே என்று சட்டம் குறிப்பிடுகின்றது. அவ்வாறு இருக்கையில் ஒரு சிலரது பெயர்களை மாத்திரம் ஊடகங்களில் வெளியிட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியமை பாரியதொரு குற்றச்செயல் என்று பாராளுமன்ற உறுப்பினரான ஜே.சி. அளவத்துவல குறிப்பிட்டிருக்கிறார்.

இவ்வாறான சூழ்நிலையில் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய, பிணைமுறி சர்ச்சை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களின் தொலைபேசி உரையாடல் விபரங்கள் வெளியானமை பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதா? என்பது குறித்து பாராளுமன்ற சிறப்புரிமை குழுவின் ஊடாக ஆராயப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

இருந்த போதிலும் கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற மோசடிகள் முறைகேடுகள் குறித்து தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் விமர்சனங்கள் குறித்து இவ்வாறு வெளிப்படைத்தன்மையோடு எந்தவொரு விசாரணையும் மு-ன்னெடுக்கப்படவும் இல்லை. அதற்கு இடமளிக்கப்படவும் இல்லை என்பதை மக்கள் இன்றும் நினைவுகூரவே செய்கின்றனர். அதுதான் உண்மையும் கூட.


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...