வடகிழக்கு தமிழருக்காக மட்டுமே பேசுகின்ற தமிழக அரசியல்வாதிகள்! | தினகரன்

வடகிழக்கு தமிழருக்காக மட்டுமே பேசுகின்ற தமிழக அரசியல்வாதிகள்!

இலங்கையில் வசிக்கும் மலையகத் தமிழர்கள் பற்றி கருத்துத் தெரிவிப்பதற்கு முன்பாக தமிழக அரசியல் தலைவர்கள் இலங்கைக்கு வந்து அவர்களது நிலைமையை நேரில் பார்க்க வேண்டும் என்று மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு, சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

மலையக புதிய கிராமங்கள் உள்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தித் துறை அமைச்சர் பழனி திகாம்பரம் தமிழ்நாடு 'இந்து' பத்திரிகையிடம் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.

“தமிழக அரசியல்வாதிகள் வடக்கு, கிழக்கு பகுதிகளில் வசிக்கும் ஈழத் தமிழர்களுக்காக மட்டுமே பேசுகிறார்கள். ஆனால் இங்கு வசிக்கும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் பிரச்சினைகள் பற்றி மிக அரிதாகவே பேசுகின்றனர்’’ என்றார் திகாம்பரம்.

பிரபல அரசியல் தலைவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவருமான, மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயர் இலங்கை அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மூன்றில் இருந்து நீக்கப்பட்டதற்கு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.

மலையகத் தமிழர்களுக்கு எதிரான இதுபோன்ற நடவடிக்கையை தடுத்து நிறுத்த மத்திய அரசு தலையிட வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மாவுக்கு ட்விட்டர் மூலம் ஸ்டாலின் கோரிக்கை முன்வைத்தார்.

இதுகுறித்து இலங்கை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என சுஷ்மாவும் பதில் அளித்திருந்தார்.

இது குறித்து திகாம்பரம் கூறும்போது, “இந்த விவகாரத்தில் இலங்கை அரசினால் எதுவும் செய்ய முடியாது. அதேநேரம் முந்திய ஆட்சியாளர்களோடு ஒப்பிடும் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு தமிழர்களின் நலனுக்காக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது” என்று திகாம்பரம் மேலும் கூறினார்.

அமைச்சர் திகாம்பரம் மேலும் கூறும் போது, “அரசு நிறுவனங்களின் பெயர்கள், வரலாற்று பின்னணியைப் பிரதிபலிக்கவேண்டும். தொண்டமான் மட்டுமல்ல, நடேச அய்யர் உட்பட பல தலைவர்கள் மலையக தமிழர்களுக்காகப் பாடுபட்டுள்ளனர். அவர்களையும் கண்டிப்பாக அங்கீகரிக்க வேண்டும். தமிழக அரசியல் தலைவர்கள் உண்மைகளை அறியாமல் கருத்துத் தெரிவிக்கக் கூடாது.

இதனால் சிங்கள மக்களுடனான எங்களது உறவு பாதிக்கப்படும். அவர்கள் இங்கு வந்து மலையகத் தமிழர்களின் அவல நிலையை பார்க்க வேண்டும். இன்றும் கூட மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவளி மக்களில் சுமார் 40 ஆயிரம் குடும்பங்களுக்கு கழிவறை இல்லை” என்றார் அமைச்சர் திகாம்பரம்.

(ஹிந்து)


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...