சட்ட மாஅதிபரின் ஆலோசனையை பெற்றே சர்வேஸ் மீது உரிய நடவடிக்கை | தினகரன்

சட்ட மாஅதிபரின் ஆலோசனையை பெற்றே சர்வேஸ் மீது உரிய நடவடிக்கை

முழு நாட்டினதும் கவனத்தை ஈர்த்து பெரும் விமர்சனங்களுக்கு உட்பட்டுள்ள வட மாகாண சபை அமைச்சர் சர்வேஸ்வரனின், விவகாரம் தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைத்த பின்பே உரிய நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.அவர் தொடர்பில் தம்மால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அத்துடன் முடிந்து விடப்போவதில்லை என்பதைக் கருத்திற்கொண்டே சட்ட மா அதிபரின் ஆலோசனையைப் பெற தீர்மானித்ததாகவும் சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கிணங்கவே அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். பத்தரமுல்லையிலுள்ள வட மாகாண ஆளுநர் செயலத்தில் நேற்று (20) இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்; மாகாண அமைச்சர் சர்வேசுவரனின் செயற்பாடு தொடர்பில் கூறுவதற்கு எனக்கும் கருத்துக்கள் உள்ளன. எனினும் நேரடியாக நான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த விடயத்தில் நான் நேரடியாகவே சட்ட மா அதிபரைச் சந்திக்கவுள்ளேன். இந்த விவகாரம் தொடர்பில் ஊடகங்களில் வெளியான விடயங்கள் அமைச்சர் சர்வேஸ்வரனால் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் சட்ட மா அதிபரிடம் கையளிக்கவுள்ளேன். இதற்கிணங்க சட்ட மா அதிபர் வழங்கும் ஆலோசனைக் கிணங்கவே இந்த விவகாரம் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வேன். நான் அவ்வாறு செயற்பட நினைப்பதற்குக் காரணமுண்டு. இந்த விடயம் இத்தோடு முடிந்துவிடப்போவதில்லை. இதனோடிணைந்ததான மேலும் சட்ட ரீதியான செயற்பாடுகள் பற்றியும் கவனத்திற்கொள்ள வேண்டியுள்ளது. அதன்போது காத்திரமாக அதற்கு முகங்கொடுப்பதற்கு ஏதுவாகவே இந்த விவகாரம் தொடர்பில் நான் சட்ட மா அதிபரின் ஆலோசனையைப் பெறவுள்ளேன்.

அதேபோன்று இது தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானம் அரசியலமைப்பு ரீதியிலும் மாகாண சபை மற்றும் ஏனைய வகையிலும் முக்கிய தீர்மானமாக அமையும். இதனால் சட்ட மா அதிபர் மூலமாக இதனை அணுகுகின்றேன். வவுனியா பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் மாகாண அமைச்சர் சர்வேஸ்வரன் தேசிய கொடியை ஏற்றுவதற்கு மறுத்துவிட்டார். இது முழு நாட்டினதும் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் பெரும் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது. (ஸ) 

லோரன்ஸ் செல்வநாயகம், லக்ஷ்மி பரசுராமன்


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...