சபரிமலையில் புதிதாக ஒலிக்கும் ஜேசுதாஸின் 'ஹரிவராசனம்' பாடல் | தினகரன்

சபரிமலையில் புதிதாக ஒலிக்கும் ஜேசுதாஸின் 'ஹரிவராசனம்' பாடல்

சபரிமலை என்றதும் ஐயப்ப பக்தர்களுக்கு நினைவு வரும் அம்சங்களில் முக்கியமான ஒன்று, சந்நிதானத்தில் நடைசாத்தும் நேரத்தில் ஒலிபரப்பாகும் ‘ஹரிவராசனம்’ பாடல்.

இதை பிரபல பாடகரும், இசைமேதையுமான ஜேசுதாஸின் குரலில் மீண்டும் ஒலிப்பதிவு செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

சபரிமலையில் வழக்கமாக, அதிகாலையில் நடை திறக்கும் போது, ‘வந்தே விக்னேஸ்வரம்...’ என்ற திருப்பள்ளியெழுச்சிப் பாடல், கே.ஜே.ஜேசுதாஸின் இனிய குரலில் ஒலிக்கும். மாலையில் நடை திறக்கும் போது, பிரபல கேரளப் பாடகர் ஜெயனின் (ஜெய-விஜயன்) ‘ஸ்ரீகோவில் நடை துறன்னு’ என்ற மலையாளப் பாடல் ஒலிக்கும். அதேபோல, இரவில் கோயில் நடை அடைப்பதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியதும் ‘ஹரிவராசனம்’ பாடல் ஒலிக்கத் தொடங்கும்.

‘ஹரிவராசனம் விஸ்வமோகனம்’ என்று தொடங்கும் இப்பாடல் சமஸ்கிருதத்தில் அமைந்தது.எட்டு பந்திகள் கொண்டது. 'ஹரிஹரசுதாஷ்டகம்' என்றும் அழைக்கப்படுகிறது. இப்பாடலை பல ஆண்டுகளுக்கு முன்பு பெரிய குருசாமியாக இருந்த கம்பக்குடி குளத்தூர் சீனிவாசய்யர் இயற்றியதாகக் கூறப்பட்டுகிறது. ஆனால், கொன்னகத்து ஜானகி அம்மா என்பவர் இதை இயற்றியதாக அவரது வம்சாவளியினர் கூறுகின்றனர். இதுபற்றிய விபரம் உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், ‘ஹரிவராசனம்’ பாடல் 1920-களில் எழுதப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

ஆரம்பத்தில் இப்பாடலை அத்தாழ பூஜையின் போது பாடி வந்தனர். 1951- இல் சபரிமலை கோயில் புதுப்பித்துக் கட்டிய பிறகு, மேல்சாந்தி ஈஸ்வரன் நம்பூதிரியின் முயற்சியால், நடைசாத்தும் பாடலாக மாற்றப்பட்டது என்று கூறப்படுகிறது.

ஹரிவராசனம் பாடலை பலரது இசையமைப்பில், பலர் பாடியிருந்தாலும், கேரளாவின் புகழ் பெற்ற இசை அமைப்பாளர் ஜி.தேவராஜன் இசை அமைத்து, கே.ஜே.ஜேசுதாஸ் பாடிய ஹரிவராசனம்தான் சபரிமலையில் இன்றளவும் ஒலிக்கிறது.

நடை அடைக்கும்போது, சுவாமி சந்நிதானத்தில் இருந்து ஒவ்வொரு தந்திரிகளாக வெளியேறுவார்கள். ‘ஹரிவராசனம்’ பாடல் ஒலித்து முடிக்கும் நேரத்தில், கதவை மெதுவாக சாத்தி விட்டு அனைவரும் வெளியே வந்து விடுவார்கள். சுவாமியைத் தூங்க வைக்கிற தாலாட்டுப் பாடல் போல இருப்பதால் மலையாளத்தில் இதை ‘உறக்குப் பாட்டு’ என்கிறார்கள்.

தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் 1975- இல் வெளிவந்த ‘சுவாமி ஐயப்பன்’ படத்தில்தான் ஹரிவராசனம் பாடலை ஜேசுதாஸ் முதன்முதலில் பாடியிருந்தார். எம்.என்.நம்பியார், ஜெமினிகணேசன், பாலாஜி உட்பட பலரும் நடித்த அந்தப் படம் தமிழகம், கேரளாவில் பெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, அந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஜி.தேவராஜனின் இசையமைப்பில், ஜேசுதாஸைப் பாடச் செய்து, ஒலிப்பதிவு செய்யப்பட்ட இந்தப் பாடல்தான் தற்போதுவரை நடைசாத்தும் போது சந்நிதானத்தில் ஒலிக்கப்படுகிறது.

இந்த நிலையில், சில திருத்தங்களோடு ஹரிவராசனம் பாடலை மீண்டும் ஒலிப்பதிவு செய்ய திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்திருக்கிறது. தேவசம் சபையின் தலைவராக ஒரு வாரம் முன்பு பொறுப்பேற்றுள்ள பத்மகுமாரிடம் இதுகுறித்து கேட்டபோது, அவர் கூறியதாவது: ‘ஹரிவராசனம்’ பாடல் வரிகளில் ‘ஹரிவராசனம் ஸ்வாமி விஸ்வமோகனம்’ என்பது போல ஒவ்வொரு வார்த்தைக்கு நடுவிலும் ‘ஸ்வாமி’ என்ற சொல் இடம்பெறும். ஆனால், ஜேசுதாஸின் குரலில் சந்நிதானத்தில் ஒலிக்கும் பாடலில் ‘ஸ்வாமி’ என்பது இடம்பெறவில்லை. எனவே, ‘ஸ்வாமி’ என்பதையும் சேர்த்து ஜேசுதாஸ் குரலில் மீண்டும் ஒலிப்பதிவு செய்ய இருக்கிறோம். தவிர, பாட்டின் நடுவில் ‘அரிவிமர்த்தனம்’ என்று ஜேசுதாஸ் சேர்த்துப் பாடியிருப்பார்.

‘அரி’ என்றால் எதிரிகள். ‘விமர்த்தனம்’ என்றால் அழிப்பது. எனவே, இது தனித்தனி வார்த்தைகளாகத்தான் வர வேண்டும். இதுகுறித்து ஜேசுதாஸிடமும் பேசி விட்டோம். எதிர்வரும் 30-ம் திகதி எர்ணாகுளத்தில் ஒரு திருமணத்துக்காக அவர் வருகிறார்.

அன்று அவரை நேரில் சந்தித்து இதுகுறித்துப் பேசி, அவரைத்தான் மீண்டும் பாட வைக்க உள்ளோம். மகரவிளக்குக்கு முன்பு இப்பணி முடிந்து விடும் என நம்புகிறோம். அவரை சந்நிதானத்துக்கே அழைத்து வந்து பாடச் செய்வது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.

அதுவரை தற்போது உள்ள பாடலே வழக்கம் போல ஒலிக்கும்.

கோயில் நடைசாத்தும் நேரத்தில், ஒலிக்கும் இந்தப் பாடல், வெளியில் இருக்கும் பக்தர்களுக்குத்தான் கேட்கும். சந்நிதானக் கோயிலுக்குள் ஸ்லோகமாக தந்திரி இதைப் பாடுவார். கடைசி 4 வரிகள் பாடுவதற்குள் ஒவ்வொரு விளக்குகளாக அணைத்து, கடைசியில் நடை சாத்தப்படுகிறது".

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் திருவிதாங்கூர் தேவசம் சபைத் தலைவர் பிரேயார் கோபாலகிருஷ்ணனிடம் கேட்டதற்கு, ‘‘இதுபற்றி இப்போது கருத்துச் சொல்ல விரும்பவில்லை. நான் தேவசம் சபைத் தலைவராக இருந்த போதும், இதுகுறித்து ஜேசுதாஸிடம் பேசியிருந்தோம். அவர் எதுவும் கூறவில்லை. தற்போது அவர் என்ன சொல்கிறார் என தெரிந்த பிறகே கருத்துச் சொல்ல முடியும்’’ என்றார்.


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...