சசிகலா உறவினரின் சொத்து ஆவணங்கள் வெளிநாடுகளில் பதுக்கல் | தினகரன்

சசிகலா உறவினரின் சொத்து ஆவணங்கள் வெளிநாடுகளில் பதுக்கல்

சசிகலா உறவினர்கள் வாங்கிக் குவித்த சொத்துகள் தொடர்பான பல ஆவணங்கள் நான்கு மரப்பெட்டிகளில் அடைக்கப்பட்டு பிரபல தனியார் கூரியர் நிறுவனம் வாயிலாக சிங்கப்பூர் மற்றும் துபாய்க்கு கடத்தப்பட்ட விபரம் தெரிய வந்துள்ளது. வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையின் போது இது தொடர்பான ரசீது சிக்கியதால், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதனால் மத்திய அரசிடம் முறையான அனுமதி பெற்று சிங்கப்பூர் மற்றும் துபாயில் உள்ள மன்னார்குடி உறவுகளின் வீடுகளில் வருமான வரித்துறையினர் விரைவில் சோதனை நடத்தலாம் என கூறப்படுகிறது.

சசிகலாவின் மன்னார்குடி சொந்தங்கள் கடந்த பல ஆண்டுகளாக பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வாங்கிக் குவித்தது வருமான வரித்துறையினருக்கு தெரிய வந்தது.

இது தொடர்பாக சில மாதங்களாக ரகசிய கண்காணிப்பு மற்றும் ஆய்வை வருமான வரி அதிகாரிகள் நடத்தினர்.

பின் நவ. 9ஆம் திகதி தினகரன், திவாகரன், விவேக், கிருஷ்ணபிரியா உட்பட சசிகலா குடும்பத்தினர் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் 'பினாமி'களின் வீடுகள், அலுவலகங்கள் என 215 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை ஐந்து நாட்களாக நீடித்தது.

இதில், 1,430 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வரி ஏய்ப்பு நடந்துள்ளது கண்டறியப்பட்டது.

ஏராளமான தங்க, வைர நகைகளும் சொத்து ஆவணங்களும் சிக்கின. இதில் தொடர்புடைய பலரிடமும் வரித்துறை அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்திலும் வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

ஜெ. உதவியாளர் பூங்குன்றன் மற்றும் சசிகலா அறைகளில் நடந்த சோதனையில் கம்ப்யூட்டர்கள், லேப் -டொப், பென் டிரைவ் மற்றும் ஏராளமான ஆவணங்கள் சிக்கின. போயஸ் கார்டனில் பதுக்கி வைத்திருந்த ஆவணங்களை இரகசியமாக இடம் மாற்றம் செய்ய சசிகலா கும்பல் திட்டமிட்டிருப்பதாக வருமான வரித் துறைக்கு, 'ஸ்லீப்பர் செல்'களாக செயல்படும் சசிகலாவின் உறவினர்கள் சிலர் கொடுத்த தகவலை அடுத்து இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்பட்டது.

இந்நிலையில் வருமான வரித்துறையிடம் சிக்கியது தவிர சசிகலாவின் உறவுகள் வாங்கிக் குவித்த சொத்துகள் தொடர்பான ஏராளமான முக்கிய ஆவணங்கள் வெளி நாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ள தகவலும் தெரிய வந்து உள்ளது.

வருமான வரித்துறையினர் கடந்த சில நாட்களாக நடத்திய சோதனையின் போது இது தொடர்பான ரசீது கிடைத்துள்ளதால் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக 'ஸ்லீப்பர் செல்' வட்டாரங்கள் கூறியதாவது: நாட்டிலேயே மிகப்பெரிய அளவிலான வருமான வரி சோதனை சசிகலா குடும்பத்தில் தான் நடந்து உள்ளது. ஆனால் 'சோதனை தோல்வியில் முடிந்து உள்ளது' என திவாகரன் ஜம்பமாக கூறியுள்ளார்.

அவர் திருச்சியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு செல்லஉள்ளார். இதுவரை சசிகலா குடும்பத்தினரின் 84 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுஉள்ளன. அத்துடன், பல வங்கிகளில் அவர்களின் பெயரில் உள்ள லொக்கர்களும் 'சீல்' வைக்கப்பட்டுள்ளன. அவற்றை விரைவில் திறந்து ஆய்வு செய்யவும் வரித்துறையினர் திட்டமிட்டு உள்ளனர்.

ஆனால் சசிகலா உறவினர்கள் வாங்கிக் குவித்த சொத்துகள் தொடர்பான பல அசல் ஆவணங்கள், சிங்கப்பூர் மற்றும் துபாயில் உள்ள சிலருக்கு நான்கு மரப்பெட்டிகளில் தனியார் கூரியர் நிறுவனம் வாயிலாக விமானத்தில் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தினகரனும், திவாகரனும் தான் இந்த வேலையை செய்தனர். சிங்கப்பூரில் தினகரனுக்கு நெருக்கமான பலரின் வீடுகள் உள்ளன. அது போல துபாயில், சசி அண்ணன் மனைவி இளவரசிக்கு வேண்டியவர்களின் வீடுகள் உள்ளன. அங்கு தான் இந்த ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான கூரியர் நிறுவன ரசீதுகள், வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கி உள்ளன. அதனால் மத்திய அரசு மற்றும் வெளியுறவுத் துறையின் அனுமதி பெற்று துபாய் மற்றும் சிங்கப்பூர் சென்று ஆவணங்கள் அனுப்பப்பட்ட முகவரியில் உள்ளவர்களிடம், வருமான வரித்துறை அதிகாரிகள் விரைவில் விசாரணை நடத்த உள்ளனர். அத்துடன் போயஸ் கார்டனில் உள்ள ஜெ. அறைகளிலும் சோதனை நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...