Home » காசாவில் வான் தாக்குதல்களுடன் தரைவழியாகவும் மோதல் உக்கிரம்

காசாவில் வான் தாக்குதல்களுடன் தரைவழியாகவும் மோதல் உக்கிரம்

-இஸ்ரேலிய டாங்கிகள் பல முனைகளால் முன்னேற்றம்: உயிரிழப்பு 8,306 ஆக உயர்வு

by sachintha
October 31, 2023 5:58 am 0 comment

டாங்கிகளின் உதவியோடு இஸ்ரேலிய துருப்புகள் காசாவில் தரைவழியாக முன்னேறி வரும் நிலையில் அந்தப் பகுதி மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் மற்றும் பீரங்கிகள் நேற்று தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருந்தது. இது பொதுமக்களை பாதுகாப்பதற்கான சர்வதேச அழுத்தத்தை அதிகரித்துள்ளது.

காசா மீது தனது தரைவழி நடவடிக்கையை விரிவுபடுத்தி வரும் இஸ்ரேல் கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 600க்கும் அதிகமான இலக்குகளை தாக்கியதாக குறிப்பிட்டுள்ளது. இந்தப் போர் நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில் காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவரும் அதேநேரம், மக்கள் உணவு, சுத்தமான நீர் மற்றும் எரிபொருள் இன்றி தவிக்கின்றனர்.

“கட்டடங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளில் தடுப்புகளை அமைத்து துருப்புகள் மீது தாக்குதல் நடத்த முயன்ற பல டஜன் பயங்கரவாதிகளை இஸ்ரேலிய துருப்பினர் கொன்றனர்” என்று இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காசாவில் உள்ள அல் ஷிபா மற்றும் அல் குத்ஸ் மருத்துவமனைகளுக்கு அருகில் இஸ்ரேல் வான் தாக்குதல்களை நடத்தியதோடு கான் யூனிஸ் நகரின் கிழக்காக எல்லைப் பகுதி ஒன்றில் பலஸ்தீன போராளிகள் இஸ்ரேலிய படைகளுடன் மோதலில் ஈடுபட்டதாக பலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

பல்வேறு திசைகளில் இருந்து காசா பகுதிக்கு இஸ்ரேலிய துருப்புகள் தரைவழியாக முன்னேறிவரும் சூழலில் குறைந்தது 20 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மற்றும் பல டஜன்பேர் பேர் காயமடைந்திருப்பதாக காசா மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் மற்றும் வெடிப்புச் சத்தங்களை இரவு முழுவதும் கேட்டதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். காசா மற்றும் மேற்குக் கரை நகரமான ஜெனினில் தமது போராளிகள் இஸ்ரேலிய படைகளுடன் சண்டையிட்டு வருவதாக ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

காசாவின் மேற்குக் கரை பகுதியில் போர் டாங்கிகள் இருக்கும் படங்களை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. தரைவழியாக ஆக்கிமிப்புக்கு இஸ்ரேல் அரசு உத்தரவிட்ட நிலையில் காசாவின் பிரதான நகரை சுற்றிவளைக்க இஸ்ரேலிய இராணுவம் முயலும் சாத்தியம் இருப்பதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர். இணையத்தில் வெளியாகி இருக்கும் சில படங்களில் இஸ்ரேலிய படை காசாவுக்குள் இஸ்ரேல் கொடியை நடுவது தெரிகிறது. எனினும் இதனை உறுதி செய்ய முடியவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இஸ்ரேலிய டாங்கிகள் நேற்று காசா நகரின் புறநகர் பகுதியை எட்டி இருப்பதோடு காசா பகுதியின் வடக்கில் இருந்து தெற்கு நோக்கிச் செல்லும் பிரதான வீதி ஒன்று துண்டிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

காசா எல்லை வேலியில் இருந்து சுமார் 3 கிலோமீற்றர் தொலைவில் காசா நகர நிர்வாகத்தின் மத்தியில் உள்ள சலாஹ் அல் தீன் வீதியை நோக்கி இஸ்ரேலிய டாங்கிகள் ஊடுருவியதாக பலஸ்தீன தரப்புகளை மேற்கோள்காட்டி அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தப் பகுதியில் கடும் மோதல் இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

காசா போரின் இரண்டாம் கட்டத்தை எட்டி இருப்பதாக இஸ்ரேல் கடந்த சனிக்கிழமை (28) அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து காசாவுக்குள் இஸ்ரேலிய துருப்புகள் முன்னேறியதோடு அந்தப் பகுதிக்கான தொடர்புகள் முடக்கப்பட்டன.

துண்டிக்கப்பட்ட தொலைபேசிகள் மற்றும் இணையதள இணைப்புகள் நேற்று முன்தினம் வழமைக்கு திரும்பியபோதும் இஸ்ரேலிய வான் தாக்குதல்களால் காசாவின் வடக்கு பகுதியின் தொலைபேசி மற்றும் இணையதள சேவைகள் மீண்டும் துண்டிக்கப்பட்டதாக தொலைத்தொடர்பு வழங்குநரான பால்டெல் தெரிவித்துள்ளது. இங்கேயே ஹமாஸ் அமைப்பின் கட்டளை மையம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொலைத்தொடர்பு செயலிழப்பினால் இஸ்ரேலிய குண்டு பழையால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

கான் யூனிஸில் நேற்று இடம்பெற்ற தாக்குதல்களில் 97 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதன்படி கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி தொடக்கம் இஸ்ரேலிய தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,306 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 3,457 சிறுவர்கள், 2,136 பெண்கள் மற்றும் 480 வயோதிபர்கள் அடங்குகின்றனர். மேலும் குறைந்தது 21,048 பேர் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேலிய இராணுவம் மேற்குக் கரையிலும் சுற்றிவளைப்புகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதில் ஜெனின் நகரில் நேற்று மேலும் நான்கு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதன்படி போர் ஆரம்பித்தது தொடக்கம் மேற்குக் கரையில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 114 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோன்று ஜெரூசலத்தில் இஸ்ரேலிய பொலிஸார் ஒருவர் நேற்று கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாக்குதல் நடத்திய சந்தேச நபர் சுடப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

போர் நிறுத்த முயற்சி

இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரம் அடைந்திருக்கும் அதேநேரம் உதவிகளை அனுமதிக்கும் வகையில் மனிதாபிமான போர் நிறுத்தம் ஒன்றுக்கான அழைப்பு சர்வதேச அளவில் அதிகரித்து வருகிறது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புடனான மத்தியஸ்த முயற்சியில் கட்டார் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதில் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான சாத்தியங்கள் பற்றியும் பேசப்படுவதாக நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிப்பதற்கு பகரமாக முற்றுகையில் இருக்கும் காசாவுக்கு உதவிகள் மற்றும் எரிபொருட்களை அனுமதிக்கும் வகையில் ஐந்து நாள் மனிதாபிமான போர் நிறுத்தம் ஒன்றை ஹமாஸ் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.

ஹமாஸ் பிடித்து வைத்திருக்கும் பாதிக்கும் அதிகமான பணயக்கைதிகள் 25 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றவர்களாவர். இதில் 54 தாய்லாந்து நாட்டவர்கள் இருப்பதாக இஸ்ரேலிய அரசு தெரிவித்துள்ளது.

காசா மனிதாபிமான நிலை குறித்து ஐ.நா பாதுகாப்புச் சபை நேற்று மீண்டும் ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்தி இருந்தது. எனினும் இந்தப் போர் தொடர்பில் கடந்த இரு வாரங்களில் பாதுகாப்புச் சபையில் கொண்டுவரப்பட்ட நான்கு தீர்மானங்கள் தோல்வி அடைந்திருந்தன. எனினும் கடந்த வெள்ளிக்கிழமை அவசர மனிதாபிமான போர் நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்புவிடுத்து ஐ.நா பொதுச்சபையில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் அதிகப் பெரும்பான்மையான நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கடந்த ஞாயிறன்று தொலைபேசியில் அழைத்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், காசாவில் உள்ள பொதுமக்களை பாதுகாக்கும்படியும் அந்தப் பகுதிக்கு விரைவாக மற்றும் கணிசமான அளவு மனிதாபிமான உதவிகளை அதிகரிக்கும்படியும் கோரியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

காசா மற்றும் இஸ்ரேல் போர் பிராந்தியத்திற்கு பரவும் அச்சத்துக்கு மத்தியில் இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லையில் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்புக்கு இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் தற்போது ஹிஸ்புல்லா வீசும் ரொக்கெட்டுகள் இஸ்ரேலிய எல்லையைத் தாண்டி ஆழ ஊடுருவ ஆரம்பித்திருப்பதோடு இஸ்ரேலும் லெபனானின் தூரப் பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதல்களை ஆரம்பித்துள்ளன.

மறுபுறம் சிரியாவின் டராவில் இரு இராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் நேற்று வான் தாக்குதல் நடத்தியதாக சிரிய அரச தொலைக்கட்சி செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் பொருட்சேதங்கள் ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த மோதல் உலகெங்கும் பாரிய ஆர்ப்பாட்டங்களையும் தூண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

காசாவில் சிறுவர்கள் பலி உலகிலேயே மிக அதிகம்

காசாவில் மூன்று வாரங்களுக்குள் கொல்லப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 2019 தொடக்கம் உலகெங்கும் உள்ள போர் வலயங்களில் வருடாந்தம் கொல்லப்படும் சிறுவர்களின் எண்ணிக்கையை தாண்டி இருப்பதாக சிறுவர்களை பாதுகாப்போம் அமைப்பு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய வான் தாக்குதல்களில் காசாவில் குறைந்தது 3,195 சிறுவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது முந்தைய மூன்று ஆண்டுகளில் வருடம் முழுவதும் உலகெங்கும் சுமார் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் போர்களில் கொல்லப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கையை தாண்டியுள்ளது.

காசாவில் இதுவரை கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 40 வீதத்துக்கும் அதிகமானவர்கள் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர கட்டட இடிபாடுகளில் சிக்கிய நிலையில் மேலும் 1,000 க்கு மேற்பட்ட சிறுவர்கள் அங்கு காணாமல்போயிருக்கும் நிலையில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. காசாவில் மேலும் 6,360 சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.

 

இஸ்ரேல் விமானத்தின் வருகையால் ரஷ்ய விமானநிலையத்தை முற்றுகை

இஸ்ரேலில் இருந்து விமானம் ஒன்று தரையிறங்கியதை அடுத்து ரஷ்யாவின் டஜஸ்தான் மாகாணத் தலைநகரில் உள்ள விமானநிலையத்தை நூற்றுக்கணக்கான பலஸ்தீன ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் (29) முற்றுகையிட்டுள்ளனர்.

இதனை அடுத்து அந்த விமானநிலையம் மூடப்பட்டதாக உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன்போது பலரும் காயமடைந்திருப்பதோடு எவரும் கைது செய்யப்படவில்லை.

பெரும் எண்ணிக்கையானவர்கள் பலஸ்தீன கொடியுடன் விமான நிலையத்தின் ஓடுபாதைக்குள் நுழைந்திருப்பதும் சிலர் விமானநிலைத்தில் இருப்பவர்களின் கடவுச்சீட்டுகளை சோதிப்பதும் சமூக ஊடகத்தில் வெளியான வீடியோக்களில் தெரிகிறது. நிலைமை கட்டுப்பாட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக ரஷ்ய நிர்வாகம் பின்னர் அறிவித்தது.

ரஷ்யாவின் வடக்கு காகசஸில் உள்ள டஜஸ்தான், செச்னியா போன்று முஸ்லிம் பெரும்பான்மை பிராந்தியமாகும்.

அனைத்து யூதர்கள் மற்றும் தமது பிரஜைகளை பாதுகாக்கும்படி ரஷ்யாவிடம் இஸ்ரேல் கேட்டுள்ளது.

 

47 பள்ளிவாசல்கள் தகர்ப்பு

காசா மீதான இஸ்ரேலின் வான் தாக்குதல்களில் இதுவரை 47 பள்ளிவாசல்கள் மற்றும் 7 தேவாலயங்கள் தகர்க்கப்பட்டிருப்பதாக காசா அரசு தெரிவித்துள்ளது. மூன்று வாரங்களாக நீடிக்கும் இந்தத் தாக்குதல்களில் மேலும் 203 பாடசாலைகள் மற்றும் 80 அரச அலுவலகங்களும் அழிக்கப்பட்டுள்ளன.

இதில் இஸ்ரேலின் சரமாரி குண்டு தாக்குதல்களில் 220,000 வீட்டு அலகுகள் சேதமடைந்திருப்பதாகவும் 32,000 கட்டடங்கள் முற்றாக அழிக்கப்பட்டிருப்பதாகவும் காசா அரச ஊடக அலுவலக பணிப்பாளர் சலாமா மாரூப், அல் ஜசீரா தொலைக்காட்சிக்குத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக 1,500க்கும் அதிகமான மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் ஓர்தடொக்ஸ் கலாசார மையம் மற்றும் பாடசாலை ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்போவதாக இஸ்ரேல் எச்சரித்துள்ளதாக காசா அரச ஊடகம் குறிப்பிட்டிருந்தது.

இஸ்ரேலிய தாக்குதல்களால் காசாவில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 8000ஐ தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT