Saturday, April 27, 2024
Home » செபிக்கும் நாளெல்லாம் சுபநாள் நிறைவு பெறும் செபமாலை மாதம்

செபிக்கும் நாளெல்லாம் சுபநாள் நிறைவு பெறும் செபமாலை மாதம்

by sachintha
October 31, 2023 11:33 am 0 comment

ஒக்டோபர் மாதத்தின் தொட க்கத்தில் இருந்து இன்று வரை நாம் செபமாலை மாதாவை மகிமைப்படுத்தும் வகையில் செபமாலை மாதத்தை சிறப்பித்துள்ளோம்.

செபமாலையின் தொடக்க வரலாறே புதுமையில்தான் துவங்குகின்றது. சுவாமிநாதர் என்ற புனிதர் மிகப்பெரிய திருவுரையாளர்.

ஆல்பிஜென்சியம், அதாவது மனித உடல் தீயது அது சாத்தானிடமிருந்து வருகிறது. மனித ஆத்துமம் நல்லது அது கடவுளிடமிருந்து வருகின்றது.

ஆகவே இயேசுவின் மனித அவதாரம் ஏற்புடையதல்ல. ஏனெனில் கடவுள் பாவமான மனித உரு எடுக்க இயலாது என்ற தப்பறைக் கொள்கையை எதிர்த்து பிரான்ஸ் நாடெங்கும் அவர் போதித்தார்.

ஆனால் இவரால் எவரையும் மனமாற்றமடையச் செய்ய இயலவில்லை. மனமுடைந்தவர்க்கு அன்னை காட்சி கொடுத்து, “நீர் போதனை செய்யும் போது மக்கள் செபமாலை செபிக்கும்படி சொல்லும். அதன் வழியாகத்தான் உன் வார்த்தைகள் ஆன்மாக்களில் விழுந்து மிகுந்த பலனைக் கொடுக்கும்” என்று சொல்லி அவரைத் திடப்படுத்தினார்.

அதன் பின் அவர் எங்கெல்லாம் மறையுரையாற்ற சென்றாரோ அங்கெல்லாம் தனது மறையுரைக்கு முன் செபமாலை செபித்துவிட்டு மறையுரையாற்றினார். இதனால் எண்ணற்ற மக்கள் தங்கள் தப்பறைகளை விட்டு மனம் மாறி கத்தோலிக்கத் திரு அவையில் இணைந்தனர்.

நம் நிகழ்வுகளில், திருவழிபாடுகளில் செபமாலையை செபித்துவிட்டு நிகழ்வுகளைத் தொடங்குவதன் பொருள் இப்போது புரிகிறதா?

பல சூழல்களில் செபமாலை மக்கள் வந்து சேர்வற்கு செய்யப்படும் சடங்காக மாறுகிறது. பல வழிபாடுகளில் செபமாலையின் துவக்கத்தில் குறைவான ஆடகள் பங்கெடுப்பது, அல்லது செபமாலை நேரத்தில் மற்ற தயாரிப்பு பணிகளைச் செய்வது, ஒழுங்குபடுத்தும் பணிகளை மேற்கொள்வது செபமாலை செபிக்கும் வழிபாட்டிற்கு நாம் செய்யும் அவசங்கையாகும்.

மரியாளின் பிள்ளைகள் நாம் எந்த ஒரு நிகழ்வை ஆரம்பிப்பதற்கும் முன்பாக செபமாலை செபித்து தொடங்குவோம். அதில் எல்லாரும் பக்தியுடன் செபிக்கும் வழிமுறைகளை உருவாக்குவோம். நாம் பங்கெடுக்கும் வழிபாடுகளில் செபமாலையின்; துவக்கத்தில் இருந்தே பங்கெடுத்து மரியன்னையின் புகழ் பரவிடச் செய்வோம்.

நற்செய்தியின் மணிச்சுருக்கமான செபமாலையை, இயேசுவின் பாஸ்கா மறைபொருளை தன்னுள்ளே மிகப்பெரிய செல்வமாகக் கொண்டிருக்கும் அற்புதமான செபத்தை நாம் தினமும் செபிப்போம். இறைஆசீர் பெற்றுக்கொள்வோம்.

அருட்பணி பென்சிகர் லூசன்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT