Saturday, April 20, 2024
Home » நவம்பர் 06 – 11 : பயனாளிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க ‘அஸ்வெசும வாரம்’

நவம்பர் 06 – 11 : பயனாளிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க ‘அஸ்வெசும வாரம்’

- ஜூலை முதல் டிசம்பர் வரை கொடுப்பனவுகள் டிசம்பருக்குள் வழங்க எதிர்பார்ப்பு

by Rizwan Segu Mohideen
October 30, 2023 8:03 pm 0 comment

அஸ்வெசும நன்மைகள் திட்டத்தில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, நவம்பர் 06 ஆம் முதல் 11 வரை அஸ்வெசும வாரமொன்றை நடைமுறைப்படுத்த நிதியமைச்சு திட்டமிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் ஊடாக அஸ்வெசும நிவாரணப் பயனாளிகளாகத் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நன்மைகள் தாமதமான குடும்பங்களுக்கும், உடனடியாக நன்மைகளை வழங்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (30) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இந்தத் தகவல்களைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகம், நிதியமைச்சு, பொது நிர்வாக அமைச்சு, பிரதேச செயலகங்கள் ஆகியன இணைந்து அஸ்வெசும வாரத்திற்குள் நிவாரணப் பயனாளிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண திட்டமிட்டுள்ளதாக இராஜாங்க நிதியமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, ஜூலை மாதத்திற்கான அனைத்து கொடுப்பனவுகளும் நிவாரண பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், ஒகஸ்ட் மாதத்திற்கான கொடுப்பனவுகள் வழங்கும் பணி எதிர்வரும் புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க,

”அஸ்வெசும தொடர்பில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அஸ்வெசும பயனாளிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க அஸ்வெசும வாரமொன்றை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் இருக்கும், தீர்க்கப்படாத பிரச்சினைகள் இந்த வாரத்தில் தீர்க்க எதிர்பார்க்கப்படுகிறது.

இது அடுத்த ஆண்டுக்கான விண்ணப்ப கோரலல்ல. இதுகுறித்து அனைத்து பிரதேச செயலகங்களையும் தெளிவுபடுத்த நலன்புரி நன்மைகள் செயலகம் நடவடிக்கை எடுத்துவருகிறது . இப்பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்பட்ட பின், அடுத்த ஆண்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்படும்.

இன்றும் நாளையும் 1365,000 பயனாளிகளுக்கு 8.5 பில்லியன் ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் புதன்கிழமை முதல் பயனாளிகள் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். அதன்பிறகு, செப்டம்பர் மாதத்துக்கான கொடுப்பனவு, அடுத்த மாத இறுதிக்குள் செலுத்த எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவு 07 கட்டங்களாக வழங்கப்பட்டன. நிவாரணம் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம். அஸ்வெசும கொடுப்பனவுகளைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட தரப்பினருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

அஸ்வெசும கொடுப்பனவுகளுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பில் பிரச்சினைகள் எதுவும் இல்லை. ஆனால் பணம் கொடுப்பதில் தொழில்நுட்ப சிக்கல்கள் எழுந்துள்ளன. அவற்றைத் தீர்த்து, பணம் செலுத்துவதை துரிதப்படுத்த திட்டமிட்டுள்ளோம். வங்கிக் கணக்குகள் தொடர்பில் பிரச்சினைகள் இருந்தன. இந்த வாரத்திற்குள் அவற்றைத் தீர்க்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையில், வறிய மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு மிகப்பெரியது என்பதை அரசு நன்கு உணர்ந்துள்ளது. எனவே, பணம் வழங்குவதைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஜூலை முதல் டிசம்பர் வரையிலான கொடுப்பனவுகள் டிசம்பர் மாதத்திற்குள் வழங்க எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணப்பம் கோரும் போது பல்வேறு பிரிவுகள் குறித்தும் கவனம் செலுத்த எதிர்பார்க்கிறோம்.

பொருளாதாரம் தொடர்பில் ஜனாதிபதியும் அரசாங்கமும் எடுத்துள்ள தீர்மானங்கள் பிரபல்யமானதாக இல்லாவிட்டாலும், இதுவரை எட்டப்பட்டுள்ள பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அது பெரிதும் உதவியாக அமைந்துள்ளது. அரசு ஊழியர்கள் மட்டுமின்றி ஏனைய மக்களும் இதன் பலனைப் பெறுகின்றனர். அரசாங்கம் என்ற வகையில், நாட்டை வலுவான பொருளாதாரத்திற்கு இட்டுச் செல்லும் சூழலை உருவாக்கி வருகிறோம்.” என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT