Saturday, April 20, 2024
Home » இஸ்ரேலிய தரைப் படைகளுக்காக காத்திருப்பதாக ஹமாஸ் அறிவிப்பு!

இஸ்ரேலிய தரைப் படைகளுக்காக காத்திருப்பதாக ஹமாஸ் அறிவிப்பு!

by Rizwan Segu Mohideen
October 30, 2023 3:16 pm 0 comment

இஸ்ரேல் காசாவில் தரைவழி தாக்குதலை ஆரம்பித்திருக்கும் நிலையில் அவர்களுக்காக காத்திருப்பதாக ஹமாஸ் ஆயுதப் பிரிவான அல் கஸ்ஸாம் படையின் பேச்சாளர் அபூ ஒபைதா தெரிவித்துள்ளார்.

வீடியோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுப் பேசிய அவர், போதுமான மனிதாபிமான உதவிகளை அளிக்கத் தவறியிருப்பதற்கு சாடியதோடு கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கை ஒன்றை செய்துகொள்ள தவறியதற்கு இஸ்ரேல் மீது குற்றம்சாட்டினார்.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த சனிக்கிழமை (28) வெளியிட்ட அறிவிப்பில், போரின் இரண்டாம் கட்டம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும், காசாவுக்கு தரைவழி நடவடிக்கை விரிவுபடுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த அபூ ஒபைதா, “அவர்களை நாம் தொடர்ந்து எதிர்பார்த்து வருகிறோம்” என்றார்.

“இறைவனின் பலத்தினால், அவர்களை நாம் சோதனைக்கு உட்படுத்துவோம். எதிர்பார்க்கப்படும் அல்லது பயப்படுவதை விடவும் மிகப்பெரிய தோல்வி ஒன்றை ஏற்படுத்துவோம்” என்றார்.

இதன்போது காசாவில் உள்ள பொதுமக்களுக்கு போதுமான மனிதாபிமான உதவிகளை வழங்காதது தொடர்பில் அரபு உலகையும் அவர் சாடினார்.

“அரபு நாடுகளின் தலைவர்களே நாம் உங்களுக்கு உங்களது படைகள் மற்றும் டாங்கிகளை அணிதிரட்ட கூறவில்லை, இறைவன் பாதுகாக்க, காசாவில் உள்ள அரபு மற்றும் இஸ்லாமிய சிறுவர்களை பாதுகாக்கவே கூறுகிறோம்” என்றார்.

“ஆனால், நிவாரண மற்றும் மனிதாபிமான உதவிகளை அனுப்ப முடியாத நிலையை அடைந்துவிட்டீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

ஐக்கிய அரபு இராச்சியம், ஜோர்தான் மற்றும் துனீஷியா உட்பட பல அரபு நாடுகளும் காசாவுக்கு அனுப்புவதற்காக எகிப்துக்கு உதவிப் பொருட்களை அனுப்பியுள்ளன. எனினும், ராப எல்லையை கடப்பதற்கு மட்டுப்படுத்தப்பட்ட உதவிகளுக்கே அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று, ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கு கைதிகள் விவகாரம் குறித்து பல்வேறு தொடர்புளை ஏற்படுத்தியதாக அபூ ஒபைதா குறிப்பிட்டார். எவ்வாறாயினும் இஸ்ரேல் உடன்பாட்டுக்கு வர முன்வராத நிலையில் அது தோல்வி அடைவதற்கு இஸ்ரேலே காரணம் என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT