Home » வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் சாத்தியமாகும் நாள் வருமா?

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் சாத்தியமாகும் நாள் வருமா?

- சொந்த மண்ணிலிருந்து இடம்பெயர்ந்து 33 ஆண்டுகள் பூர்த்தி

by Rizwan Segu Mohideen
October 30, 2023 10:05 am 0 comment

யாழ் மண்ணில் இருந்து புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதியான இன்று 33 ஆண்டுகளாகின்றன. 33 ஆண்டுகள் கடந்த நிலையிலும்கூட அந்த துரதிர்ஷ்டமான கோரச் சம்பவம் யாழ் முஸ்லிம் மக்களின் மனதில் அழியாத வடுக்களாக என்றுமே நிலைத்திருக்கின்றது.

1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி துரதிர்ஷ்ட நாள். சுமார் காலை 8 மணியளவில் 1000 இற்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய புலிகள் யாழ்ப்பாணம் சோனகத் தெருவை சுற்றி வளைத்தனர். முஸ்லிம் மக்கள் செறிவாக வாழும் பகுதிதான் சோனகத் தெரு. புலிகளின் திட்டத்தை அறியாத முஸ்லிம்கள் அனைவரும் வெ ளியேற்றப்பட்டனர்.

ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் என அனைவரும் வெ ளியேற்றப்பட்டனர்.

அனைவரும் பிறந்த மண்ணை விட்டு புறப்பட்டனர். பெண் புலி உறுப்பினர்கள் பெண்களையும் ஆண் புலி உறுப்பினர்கள் ஆண்களையும் உடல் பரிசோதனை செய்தனர்.

இப்படியான ஓர் அவலநிலை இனி இந்த நாட்டில் யாருக்குமே வரக்கூடாது. சொந்த ஊரில் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு பெருமிதமாக வாழ்ந்துகொண்டிருந்த எம்மை வெளியூர்களில் அகதி எனும் பட்டத்தோடு கூனிக்குறுகி நாலாபுறமும் சிதறி வாழ வைத்துவிட்டார்கள்.

வடக்கில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதற்கும் தமிழ் மக்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அவர்கள் வெளியேற்றப்பட்டமைக்கு புலிகள் மாத்திரமே காரணம். முஸ்லிம்களை வெளியேற்றும்போது தமிழ் மக்களின் முக்கியமானவர்கள், இந்து சமய குருக்கள், கிறிஸ்தவ பாதிரிமார்கள் முஸ்லிம்களின் வெளியேற்றத்தினை தடுத்து நிறுத்த புலிகளிடம் உடனடி அவசரப் பேச்சுவார்த்தைகளை நடாத்தியும்கூட அவை தோல்வியிலேயே முடிவடைந்தன. 2002 ஆம் ஆண்டு வட்டக்கச்சியில் நடந்த புலிகள் இயக்கத் தலைவர் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் பங்குபற்றிய மதியுரைஞரான அன்டன் பாலசிங்கம் முஸ்லிம்களின் வெளியேற்றம் ஒரு துன்பியல் சம்பவம் என்று மட்டும் கூறி இதுதொடர்பில் முஸ்லிம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.

காலம் தாழ்த்தியாவது வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியமை தவறு என உணர்ந்தனர் புலிகள். இது எமக்கு ஓரளவு ஆறுதலளித்தது.

முஸ்லிம் மக்களை மீளக் குடியமர்த்த காத்திரமான, அர்த்தபுஷ்டியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

33 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ் முஸ்லிம்களாகிய நாங்கள் உற்றார், உறவினர், நண்பர்கள் என்று எவ்வாறு ஒன்றாக இருந்தோமோ அந்நிலைமை ஏற்பட வேண்டும்.

தற்போது வடக்கில் முஸ்லிம்கள் தன்மானத்துடனும் சுயமரியாதையுடனும் பாதுகாப்புடனும் எமது சமய, கலாசாரத்துடனும் வாழ நல்ல சூழல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் காத்திரமான, அர்த்தபுஷ்டியான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டுகிறோம்.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரசியல் பேதமின்றி ஒற்றுமையுடன் செயற்பட்டு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற திட்டத்தில் கூடிய கவனம் எடுக்குமாறு வேண்டுகிறோம்.

கலாபூஷணம் பரீட் இக்பால்
யாழ்ப்பாணம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT