Friday, March 29, 2024
Home » முக்கிய வெற்றியை எதிர்பார்த்து ஆப்கானை எதிர்கொள்ளும் இலங்கை

முக்கிய வெற்றியை எதிர்பார்த்து ஆப்கானை எதிர்கொள்ளும் இலங்கை

- நாணயச் சுழற்சியில் ஆப்கான் வெற்றி; களத்தடுப்புக்கு தீர்மானம்

by Rizwan Segu Mohideen
October 30, 2023 1:42 pm 0 comment

– லஹிரு குமாரவின் இடத்திற்கு துஷ்மந்த சமீர; குசல் ஜனித் பெரேராவுக்கு பதில் திமுத் கருணாரத்ன

உலகக் கிண்ண தொடரில் அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக இலங்கை அணி இன்று மற்றொரு முக்கியமான போட்டியில் பூனேவில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.

புனே – மஹாராஷ்டிரா மைதானத்தில் இடம்பெறும் இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.

உலகக் கிண்ணத் தொடரில் இந்த இரு அணிகளும் இதுவரை ஆடிய ஐந்து போட்டிகளில் 3 தோல்வி 2 வெற்றிகளோடு தலா 4 புள்ளிகளுடன் காணப்படுகின்றன. எனவே எந்தத் தயவும் இன்றி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொள்வதற்கு இன்றைய வெற்றி இரு அணிகளுக்கும் கட்டாயமாகும்.

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்திருக்கும் ஆப்கானிஸ்தான் அணி எதிரணிகளுக்கு கடும் சவாலாக இருந்து வருகிறது. முதல் மூன்று போட்டிகளிலும் தோற்ற பின்னர் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் வென்ற உற்சாகத்துடனேயே இலங்கை இன்றைய ஆட்டத்தில் மோதவுள்ளது.

இன்றைய போட்டியில் ஆரம்ப வரிசையில் மாற்றங்கள் நிகழ வாய்ப்பு இருப்பதாக அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆரம்ப வீரர் குசல் ஜனித் பெரேரா போதுமான அளவு சோபிக்காத நிலையில் டெஸ்ட் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன அழைக்கப்பட்டுள்ளார்.

புனே அரங்கில் அவர் நீண்ட நேரம் துடுப்பாட்ட பயிற்சியில் ஈடுபட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, பெத்தும் நிசங்க, சதீர சமரவிக்ரமவுடன் குசல் மெண்டிஸும் சோபித்துவரும் நிலையில் அஞ்சலோ மத்தியூஸின் வருகை மத்திய வரிசையை பலப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பத்துவீச்சில் சோபித்த லஹிரு குமார உபாதையால் நீக்கப்பட்டுள்ள சூழலில் அவருக்கு பதில் இணைக்கப்பட்டிருக்கும் துஷ்மந்த சமீர இன்றைய தினம் களமிறக்கப்பட்டுள்ளார்.

இன்றைய போட்டி நடைபெறும் புனே அரங்கு துடுப்பாட்டத்திற்கு சாதகமானது. முதல் இன்னிங்ஸில் அதிக ஓட்டங்கள் குவிக்கும் அணிகளுக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது.

இங்கு நடைபெற்றிருக்கும் எட்டு ஒருநாள் சர்வதேச போட்டிகளில் முதலில் துடுப்பெடுத்தாடிய அணிகள் நான்கு ஆட்டங்களில் வெற்றியீட்டியுள்ளன. இங்கு முதல் இன்னிங்ஸில் பெறப்பட்ட சராசரி ஓட்டங்கள் 300 ஆகும். 2017 இல் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா 351 ஓட்டங்களை துரத்தியதே அதிகமாகும். இங்கு 280 அல்லது அதற்குக் குறைவான ஓட்டங்களை முதல் இன்னிஸில் பெற்ற அணி இதுவரை வெற்றியீட்டியதில்லை. எனினும் இங்கு இலங்கை அல்லது ஆப்கானிஸ்தான் இதற்கு முன் ஒருநாள் சர்வதேச போட்டியில் ஆடியதில்லை என்பது குறிப்பித்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT