மின்சாரத்தை ஏப்பமிடும் குளிர்சாதனப் பெட்டிகள் | தினகரன்

மின்சாரத்தை ஏப்பமிடும் குளிர்சாதனப் பெட்டிகள்

குளிர்சாதனப் பெட்டி உங்கள் வீட்டுக்கு அத்தியாவசியமானதா? சிறிது சிந்தியுங்கள். குளிர்சாதனப் பெட்டி காரணமாக உங்களின் மின்சாரக் கட்டணம் இரு மடங்காக அதிகரிக்கின்றது. அவ்வாறு அதிகரிக்கும் கட்டணத்துக்கு ஏற்றவாறு நீங்கள் குளிர்சாதன பெட்டியின் மூலம் நன்மை அடைகின்றீர்களா?

நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி இலங்கையில் அநேகமான வீடுகளில் குளிர்சாதனப் பெட்டியில் தண்ணீர் போத்தல், மென்பானங்கள், கீரை போன்ற பொருட்களே காணப்பட்டன. ஆனால் அவர்கள் அதற்காக 500 ரூபா தொடக்கம் 750 ரூபா வரை மின்சாரப் பட்டியலில் மேலதிகமாகச் செலுத்துகின்றார்கள்.

குளிர்சாதனப் பெட்டியை வாங்குவது எவ்வாறு?

குளிர்சாதனப் பெட்டியொன்றை விலைக்கு வாங்க முற்படும் போதுஅதன் தேவை வீட்டிற்கு எந்தளவு அத்தியாவசியம் என ஆராய்ந்து பாருங்கள் அதற்கேற்றபடி குளிர்சாதனப் பெட்டியை கொள்வனவு செய்யுங்கள்.

தனிக் கதவு குளிர்சாதனப் பெட்டி 70 – 100 வோற்றாகும். அதற்கு 38 – 54 அலகு மின்சாரம் செலவாகின்றது. இரண்டு கதவு குளிர்சாதனப் பெட்டிக்கு 125 – 140 வோற்றாகும். அதற்கு 67 – 75 அலகு மின்சாரம் தேவை. மூன்று கதவுடனான குளிர்சாதனப் பெட்டி 140 – 180 வோற்றாகும். 79 – 97 அலகு மின்சாரம் அவசியமாகும்.

நீங்கள் குளிர்சாதனப் பெட்டியை விலைக்கு வாங்கும் போது தேவைக்கேற்ப குறைந்த வோற் அளவிலான குளிர்சாதனப் பெட்டியையே விலைக்கு வாங்குங்கள். அதேவேளை தானியங்கி பனி உருகும் குளிர்சாதனப் பெடடிக்கு அதிகளவு மின்சாரம் தேவை. ஆனால் இன்வெர்டர் உபயோகிக்கப்படும் குளிர்சாதனப் பெட்டி 45 சதவீத அளவிலான மின்சாரத்தை சேமிக்கின்றது. சூழல் வெப்பநிலையும் குளிர்சாதனப் பெட்டியின் செயல்திறனை குறைக்கின்றது.

குளிர்சாதனப் பெடடியை வைக்குமிடத்தில் குளிர்சாதனப் பெட்டிக்கும் சுவருக்குமிடையே 10 அங்குல இடைவெளி காணப்பட வேண்டும் குளிர்சாதனப் பெட்டிக்கு அருகில் சூடாக்கும் உபகரணங்களையோ சமையல் வாயு அடுப்புகளையோ வைக்க வேண்டாம். சூரிய ஒளி சேரடியாகப் படுமிடத்தில் குளிர்சாதனப் பெட்டியை வைக்க வேண்டாம். சூடான பொருட்களை ஆறிய பின் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.

குளிர்சாதனப் பெட்டியில் பொருட்களை களஞ்சியப்படுத்தும் போது வெவ்வேறு இடங்களில் பொருட்களை களஞ்சியப்படுத்தவும். ஈரமான பொருட்களை வைக்கும் போது பொலித்தீன் உறைகளிலிடடு வைக்கவும். நெருக்கடி இல்லாமல் பொருட்களை களஞ்சியப்படுத்துங்கள். அவற்றை குளிர்சாதனப் பெடியின் கீழ் பகுதியில் வைப்பதனால் பனிக்கட்டி உருகி வெப்பத்தை உறிஞ்சுவதால் குளிர்சாதனப் பெட்டியில் செலவிடப்படும் வலுவைக் குறைக்கலாம்.

குளிர்சாதனப் பெட்டியிலுள்ள பொருட்களை படடியலிட்டு கதவில் ஒட்டுவதன் மூலமோ அல்லது ஞாபகத்தில் வைத்திருப்பதன் மூலமோ அடிக்கடி கதவைத் திறந்து பொருட்களை தேடும் நேரம் சேமிக்கப்படும். அதனாலும் மின்னை சேமிக்கலாம்.

குளிர்பதனப்படுத்த பொருட்கள் இல்லாத நேரம் குளி்ரசாதனப் பெட்டியின் மின் இணைப்பை துண்டிப்பதன் மூலம் மின்சாரத்தை சேமிக்கலாம்.

குளிர்சாதனப் பெட்டியின் பராமரிப்பு மிக மிக அத்தியாவசியமான ஒன்றாகும். குளிர்சாதனப் பெட்டியின் இறப்பர் சட்டம் பழுதடைந்திருந்தால் அல்லது கடினமாக இருந்தால் அதனை மாற்றவும். குளிர்சாதனப் பெட்டியின் பின்புறமுள்ள நீர் நிறையும் பாத்திரத்திலுள்ள நீரை வாரமொருமுறை அகற்றி நன்றாக சுத்தம் செய்யவும் அது டெங்கு பாதிப்பில் இருந்து எம்மை பாதுகாக்கும்.

வீ. ஆர். வயலட்


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...