Thursday, March 28, 2024
Home » நாட்டின் முன்னேற்றத்துக்கு ஒன்றுபட்ட பயணம் அவசியம்

நாட்டின் முன்னேற்றத்துக்கு ஒன்றுபட்ட பயணம் அவசியம்

by Rizwan Segu Mohideen
October 30, 2023 6:07 am 0 comment

சுமார் 445 வருடங்கள் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்திற்கு உள்ளாகி இருந்த இலங்கை சுதந்திரமடைந்து 75 வருடங்கள் கடந்து விட்டன. இருந்தும் இந்நாடு இன்னும் வளர்முக நாடாகவும் மூன்றாம் மண்டல நாடாகவுமே அடையாளப்படுத்தப்படுகிறது. நாட்டின் பொருளாதார நிலைமை அவ்வாறுதான் காணப்படுகிறது.

1948 இல் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து இந்நாடு சுதந்திரம் பெற்றுக் கொண்டது. அச்சமயம் இந்நாடு பொருளாதார ரீதியில் ஆசியாவில் ஜப்பானுக்கு அடுத்த இடத்தில் இருந்தது. ஆசியாவின் ஏனைய நாடுகள் எல்லாம் இலங்கைக்கு கீழ்மட்டத்தில்தான் காணப்பட்டன.

அந்த வகையில் கடந்த 75 வருட காலப்பகுதியின் பொருளாதாரப் பயணப் பாதையை எடுத்து நோக்கினால், இலங்கைக்கு கீழ்மட்டத்தில் காணப்பட்ட பெரும்பாலான நாடுகள் இந்நாட்டை விடவும் பல மடங்கு முன்னேற்றமடைந்துள்ளன. இந்நாட்டுக்குக் கீழ்மட்டத்தில் இருந்த பல நாடுகளின் உற்பத்திகளை இறக்குமதி செய்யக்கூடிய நிலைக்கு இலங்கை உள்ளாகியுள்ளது. அந்தளவுக்கு அந்நாடுகளின் உற்பத்திகள் இந்நாட்டுச் சந்தையில் இடம்பிடித்திருக்கின்றன.

இந்நாடு நாலாபுறமும் கடலால் சூழப்பட்ட தீவு நாடாக இருந்த போதிலும், ஆரம்பகாலம் முதல் உணவு பொருளாதார ரீதியில் தன்னிறைவு அடைந்ததாகவே காணப்பட்டுள்ளது. அக்காலப்பகுதியில் எந்தவொரு பொருளுக்காகவும் வெளிநாடுகளில் இந்நாடு தங்கி இருந்ததாகத் தெரியவில்லை.

மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அவசியமான அனைத்து வளங்களும் இந்நாட்டின் நிலத்திலும் நாட்டைச் சூழவுள்ள கடலிலும் நிறையவே காணப்படுகின்றன. அவற்றைப் பயன்படுத்தி மக்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்தளவுக்கு இயற்கை வளங்கள் நிறைந்த பூமி இது.

இருந்த போதிலும் ஐரோப்பிய ஏகாதிபத்தியம் இந்நாட்டை கைப்பற்றிய பின்னர் முன்னெடுத்த தவறானதும் பிழையானதுமான கொள்கைகள், அறிமுக வேலைத்திட்டங்கள் என்பன காரணமாக நாட்டின் சுதேச விவசாய பொருளாதார ஒழுங்குகளில் மாற்றங்களும் பாதிப்புக்களும் ஏற்பட்டன. அவை சமூக, பொருளாதார ஒழுங்கமைப்புகளிலும் தாக்கங்களைச் செலுத்தலாயின. அந்தத் தாக்கங்கள் நாடு சுதந்திரம் பெற்றுக்கொண்டதோடு முடிவுக்கு வரவில்லை. மாறாக அவை நீடிக்கலாயின. அதற்கு சுதந்திரத்திற்கு பின்வந்த சில ஆட்சியாளர்கள் முன்னெடுத்த கொள்கைகளும் வேலைத்திட்டங்களும் துணைபுரிந்தன.

இவற்றின் விளைவாக தொடர்ந்தும் வளர்முக மற்றும் மூன்றாம் மண்டல நாடாக இருந்து வருகிறது இலங்கை. இப்பின்னடைவுகள் கட்டம்கட்டமாக வளர்ச்சி பெற்றவேயொழிய அவை வீழ்ச்சியடையவில்லை. அதற்கு நாட்டில் முன்னெடுக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கைகள் வழிவகை செய்தன. இதன் விளைவாக கடந்த வருடத்தின் (2022) ஆரம்பப்பகுதியில் கடும் பொருளாதார நெருக்கடிக்கும் நாடு முகம்கொடுத்தது. அதனால் நாடும் மக்களும் எதிர்கொண்ட அசௌகரியங்களும் தாக்கங்களும் பாதிப்புகளும் கொஞ்சநஞ்சமல்ல. அவை வரலாற்றில் அழியாத்தடம் பதித்து விட்டன.

இச்சூழலில் நாட்டின் தலைமையைப் பொறுப்பெடுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொருளாதார ரீதியில் நாட்டைக் கட்டியெழுப்புவதை இலக்காகக் கொண்டு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கலானார். அதன் பிரதிபலன்களை குறுகிய காலப்பகுதிக்குள் நாட்டு மக்களால் அடைந்து கொள்ள முடிந்துள்ளது. இதன் விளைவாக கடந்த வருடத்தின் ஆரம்ப காலப்பகுதியில் நிலவிய பொருளாதார நெருக்கடியின் தாக்கங்களும் பாதிப்புகளும் நீங்கியுள்ளன. பொருளாதாரம் மறுமலர்ச்சிப் பாதையில் பிரவேசித்திருக்கிறது. ஆனால் பொருளாதார ரீதியில் நாட்டை முழுமையாகக் கட்டியெழுப்ப வேண்டும். அதற்காக அனைத்துத் தரப்பினரும் ஆதரவும் பங்களிப்பும் நல்குவது அவசியம். இதன் முக்கியத்துவமும் உணரப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழலில் கொழும்பு றோயல் கல்லூரியின் பிரதான மண்டபத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘ரீட் மாவத்தையின் நூற்றாண்டு விழா’ நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ‘அனைவரும் ஒன்றுபட்டு புதிய நாட்டைக் கட்டியெழுப்புவோம். பாராளுமன்றத்திலும் அனைவரும் ஒற்றுமையாகச் செயற்படுவோம். கட்சி ஜனநாயக அரசியல் வேறுபாடுகளை அவ்வண்ணமே தக்க வைத்துக்கொண்டு அனைவரும் ஒன்றுபடுவோம்’ என அழைப்பு விடுத்துள்ளார்.

இது காலத்திற்கு அவசியமான அழைப்பு என்பதுதான் மக்களின் கருத்தாகும். அதனால் ஜனாதிபதியின் இவ்வழைப்பை சாதமாகப் பயன்படுத்திக் கொண்டு நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக அனைவரும் பங்களிக்க வேண்டும் என்பதே இன்றைய தேவையாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT