சசிகலா கும்பலின் சொத்துக்களை பறிமுதல் செய்ய முடிவு | தினகரன்

சசிகலா கும்பலின் சொத்துக்களை பறிமுதல் செய்ய முடிவு

*மன்னார்குடியினரின் கோடிகள் புழங்கிய கணக்குகளை முடக்க திட்டம்

*திவாகரன், விவேக் உட்பட  20 பேருக்கு அழைப்பாணை

சசிகலா குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில், நேற்று ஐந்தாவது நாளாக சோதனை நடந்தது. இதில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் சசிகலா கும்பலின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் கோடிக்கணக்கில் புழங்கிய வங்கி கணக்குகளை முடக்கவும் வருமான வரித்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக திவாகரன், விவேக் உட்பட 20 பேருக்கு விரைவில் அழைப்பாணை அனுப்பப்பட உள்ளது. சோதனை தொடர்வதால் சசி ஆதரவாளர்கள் உதறல் அடைந்துள்ளனர்.

கறுப்பு பண புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சட்டவிரோதமாக பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்ட 2.17 இலட்சம் போலி நிறுவனங்களின் அங்கீகாரத்தை மத்திய கம்பெனிகள் விவகாரத்துறை அமைச்சு ரத்து செய்தது. இதில் சசிகுலா குடும்பத்திற்கு சொந்தமான நான்கு நிறுவனங்களும் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் சிக்கி, சசிகலா சிறையில் இருந்தாலும் அவர்களது குடும்பத்தினர் குவித்து உள்ள சொத்துக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது.

அதனால் வருமான வரித்துறையின் கண்காணிப்பில் மன்னார்குடி கும்பல் மொத்தமும் இருந்தது. அத்துடன் போலி நிறுவனங்கள் மூலம் சசி கும்பல் பல கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனை செய்ததையும் வரித்துறை மோப்பம் பிடித்தது.

அதைத் தொடர்ந்து நவ. 9ல் தினகரன், திவாகரன் சிறையில் இருக்கும் இளவரசியின் வாரிசான 'ஜாஸ் சினிமாஸ்' சாம்ராஜ்ஜியத்தின் தலைமை நிர்வாகி விவேக், அவரது சகோதரி கிருஷ்ணபிரியா, சசிகலாவின் கணவர் நடராஜனின், அவரது சகோதரர் ராமச்சந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள், ஜெயா 'டிவி' மற்றும் நமது எம்.ஜி.ஆர். அலுவலகம் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ள கட்டுமான நிறுவனம் என தமிழகம் முழுவதும் 187 இடங்களில் சோதனை துவங்கியது.

பின் அது 215 ஆக உயர்ந்தது. இந்த சோதனை நேற்று முன்தினம் பல இடங்களில் முடிந்தது.

ஆனாலும் சோதனையின் போது தோண்ட தோண்ட மோசடி ஆவணங்கள் சிக்கியபடி இருந்ததால் சென்னையில் நேற்று முன்தினம் விவேக், கிருஷ்ணபிரியா, திவாகரன் வீடுகள், ஜெயா 'டிவி' அலுவலகம் உட்பட 60 இடங்கள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 'மிடாஸ்' மதுபான ஆலை, நீலகிரி கர்சன் எஸ்டேட் என 120 இடங்களில் நான்காவது நாளாக சோதனை தொடர்ந்தது. திவாகரன் விவேக் உள்ளிட்டோரிடம் பல மணி நேரம் விசாரணையும் நடத்தப்பட்டது.

இந்த நடவடிக்கைகளில், பினாமி பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் மற்றும் போலி நிறுவனங்களின் முறைகேடான வங்கிக் கணக்குகள் கிலோ கணக்கில் தங்க நகைகள் சிக்கி உள்ளன. இதனால் நேற்று 5 -வது நாளாகவும் சோதனை தொடர்ந்தது.

இதுவரை நடந்த சோதனைகளில் 1,000கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்துக்கள் மற்றும் முறைகேடான பரிவர்த்தனைகள் குறித்த விபரங்கள் சிக்கி உள்ளன. அவற்றை பினாமி பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யவும் கோடிகளில் புழங்கிய சசி கும்பலின் வங்கி கணக்குகள் அனைத்தையும் முடக்கவும் வருமான வரித்துறையினர் திட்டமிட்டுள்ளர். அதற்காக வங்கி அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகின்றனர்.இதுவரை சிக்கிய ஆவணங்களை மதிப்பீடு செய்யும் பணியும் துவங்கி உள்ளது.

இந்த சோதனை தொடர்பாக திவாகரன், விவேக், கிருஷ்ணபிரியா, நாமக்கல் செந்தில், கோவை ஆறுமுகசாமி உட்பட 20க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பாணை அனுப்ப முடிவெடுக்கப்பட்டு உள்ளது. அவர்கள் இந்த வாரத்தில் விசாரணைக்கு அழைக்கப்படுவர் என தெரிகிறது.


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...