தொண்டா பெயர் மாற்றம்; மீளமைக்காவிடின் அரசுக்கே அவப்பெயர் | தினகரன்

தொண்டா பெயர் மாற்றம்; மீளமைக்காவிடின் அரசுக்கே அவப்பெயர்

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரையோ, படத்தையோ நீக்குவதால், அரசாங்கத்திற்கே அபகீர்த்தி ஏற்படும். எனவே அவரின் பெயரையும், படங்களையும் உடனடியாக மீளமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நேற்று (08) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தொண்டமானின் பெயர் நீக்க விவகாரம் உலகளாவிய ரீதியில் கோடிக்கணக்கான மக்களின் கவனத்தை ஈர்த்திருப்பதால், ஜனாதிபதியும், பிரதமரும் இது தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுத்து இந் நிறுவனங்களுக்கு மீண்டும் அமரர் தொண்டமானின் பெயரைச் சூட்ட உத்தரவிட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் காங்கிரஸ் தலைமையகமான சௌமிய பவனில் நேற்று (08) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில், காங்கிரஸின் உப தலைவரும், மத்திய மாகாண சபை உறுப்பினருமான கணபதி கனகராஜ், காங்கிரஸின் சார்பில் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்: இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களின் வாழ்வுரிமையை நிலைநாட்ட தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த தலைவர் அமரர் செளமியமூர்த்தி தொண்டமான். அவரது சேவையும், நாட்டுக்கு அவர் செய்த தியாகத்தையும் அவமதிக்கும் விதத்தில் ஹற்றன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்திலிருந்த அவரது பெயர் அகற்றப்பட்டுள்ளது. இதை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது.

தொண்டமான் ஒரு இனத்துக்கு மட்டுமல்ல, முழு நாட்டுக்கும் சேவையாற்றியவர்.இதை அனைவரும் தரப்பினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். மறைந்த தொண்டமானின் சேவையை மதித்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜ பழைய பாராளுமன்றத்தில் அன்னாருக்கு சிலை வைத்து கெளரவப்படுத்தியுள்ளார். அதுபோல தற்போதைய பாராளுமன்றத்தில் அவரது புகைப்படமும் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

அவரது சேவையை மதிக்கும் விதத்தில் அரசாங்கத்தில் பல்வேறு நிலையங்களுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. ஹற்றன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம், நோர்வூட் தொண்டமான் விளையாட்டரங்கு, ரம்பொடையில் தொண்டமான் கலாசார நிலையம் போன்ற நிறுவனங்களுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. இன்று அனைத்து பெயர்களும் நீக்கப்பட்டு, அந்த ஊர்களின் பெயரை வைத்து தொண்டமானை மட்டுமல்ல முழு சமூகத்தையும் அவமானப்படுத்தியுள்ளனர். இதனை அறிந்த மக்கள் கவன ஈர்ப்பு போராட்டங்களில் இறங்கினர். அவ்வாறு நடக்கும் சூழ்நிலையில் அரசாங்கம் இவ்விடயத்தில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். இந்த அநியாயத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

பி. வீரசிங்கம்

 

 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...