Friday, March 29, 2024
Home » வருடாந்த பொதுக் கூட்டத்தில் இலங்கையின் ஏற்றுமதி பொருளாதாரத்தில் கவனம் செலுத்தும் இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம்

வருடாந்த பொதுக் கூட்டத்தில் இலங்கையின் ஏற்றுமதி பொருளாதாரத்தில் கவனம் செலுத்தும் இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம்

by Rizwan Segu Mohideen
October 24, 2023 11:28 am 0 comment

இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA) அதன் 21ஆவது வருடாந்த பொதுக்கூட்டத்தை அண்மையில் கொழும்பில் நடாத்தியிருந்தது. அதன் தலைவராக மீண்டும் தெரிவான அஜ்வார்ட் டீன், இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழில்துறையை பலப்படுத்தவும், மேம்படுத்தவும் தனது குழுவுடன் கடந்த வருடத்தில் அயராது உழைத்துள்ளார்.

கொவிட்-19 தொற்றுநோயின் காரணமாக நீடித்த தாக்கங்கள் முதல், நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் சவால்கள் வரை பலவிதமான தடைகளைத் தாண்டி இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் கைத்தொழில் துறையானது, தனது பயணத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் SLGJA ஒரு முக்கியமான வருடத்தை அடையவுள்ளது. தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை (NGJA) மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) ஆகியவற்றுடன் இணைந்து FACETS Sri Lanka 2024 கண்காட்சி தொடர்பான அறிவிப்பை SLGJA அண்மையில் வெளியிட்டிருந்தது. இது 2024 ஜனவரி 06 ஆம் திகதி முதல் 08 ஆம் திகதி வரை கொழும்பிலுள்ள Cinnamon Grand ஹோட்டலில் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த வருடாந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய SLGJA இன் தலைவர் அஜ்வார்ட் டீன், “கடந்த வருடத்தில் எமது சங்கம் ஒரு சில பாராட்டத்தக்க சாதனைகளைப் பெற்றுள்ளது. இத்தொழில்துறையை மேம்படுத்தவும் அதனை முன்னேற்றும் நோக்கத்துடனும் தொடர்ச்சியான மூலோபாய முன்முயற்சிகளை செயற்படுத்த, அதிகளவான முயற்சிகள் மூலம் நாம் அர்ப்பணிபாக செயற்பட்டு வந்துள்ளோம். நெறிமுறையான சுரங்கத் தரநிலைகளை உறுதியாகக் கடைப்பிடிப்பதன் மூலம், சுரங்கத் தொழிலாளர்கள் இரத்தின உற்பத்தியை அதிகரிக்கவும், புதிய சுரங்கங்களை நிலைபேறான வகையிலும் பொறுப்பான முறையில் மேற்கொள்ளவும் அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.” என்றார்.

நமது நாட்டின் வரலாற்றிலும் அதன் எதிர்காலத்தை வடிவமைப்பதிலும் இரத்தினக்கல் ஆபரணத் துறையின் ஆழமான முக்கியத்துவத்தை குறைவாக மதிப்பிட முடியாது. எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக இந்தத் தொழில்துறையைப் பாதுகாப்பது எமது கூட்டுப் பொறுப்பாகும். நாட்டின் கனிய உரிமைகளின் கீழ் வரும், உள்ளூர் இரத்தினச் சுரங்க நடவடிக்கைகளைப் பாதுகாப்பதும் இதில் உள்ளடங்கும்.
உலகளாவிய ரீதியில் எழுந்துள்ள சமீபத்திய மோதல்களைக் கருத்தில் கொண்டு, உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு அமைதி மிகவும் விலைமதிப்பற்ற பொக்கிஷம் என்பது உறுதியாகின்றது.
எமது நீண்ட கால அணுகுமுறையானது, எமது தொழில்துறையின் நிலைபேறான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, விலைமதிப்பற்ற கற்களுக்கான உலகளாவிய தேவையை எப்போதும் பூர்த்தி செய்ய அது உதவுகிறது. நெறிப்படுத்தப்பட்ட ஏற்றுமதிச் செயன்முறைகள் மற்றும் இரத்தின ஏற்றுமதி தொடர்பான மிகவும் நெகிழ்ச்சியான விதிமுறைகள் போன்ற அவசியமான மேம்பாடுகள் மூலம், எமது உள்ளூர் பொருளாதாரத்தில் கணிசமான பங்களிப்பாளர் எனும் வகையில், தனது முக்கிய பங்கை மீண்டும் உறுதிப்படுத்தி, இத்தொழில்துறையை புத்துயிர் பெறச் செய்ய சங்கம் தயாராக உள்ளது.

இத்தொழில்துறையின் தொடர்ச்சியான வலுவான வளர்ச்சியை உறுதி செய்யும் நோக்கத்துடன், எதிர்வரும் வருடத்திலும் கணிசமான முன்னேற்றங்களைக் கொண்டுவருவதற்கான தனது முயற்சிகளை SLGJA தொடர்ந்தும் முன்னெடுக்கும். இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையில் இலங்கை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதன்மையான நிறுவனம் எனும் வகையில், இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA) இந்தத் தொழிற்துறையின் அனைத்து அம்சங்களுக்கும் கூட்டான குரலாக திகழ்கிறது. சுரங்கத் தொழிலாளர்கள் முதல் உற்பத்தியாளர்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், ஏற்றுமதியாளர்கள், பட்டை தீட்டுபவர்கள் உள்ளிட்ட இத்துறையில் உள்ள அனைவரினதும், முழு வர்த்தகத்தின் உரிமைகள் மற்றும் நலன்களுக்காக அயராது பாடுபட SLGJA உறுதிபூண்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT