இலங்கையின் வரைபடத்தை புதிதாக உருவாக்க வேண்டியுள்ளது | தினகரன்

இலங்கையின் வரைபடத்தை புதிதாக உருவாக்க வேண்டியுள்ளது

கூட்டு எதிர்க்கட்சியினரும், சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது எனக் கருதப்படும் சில விமர்சகர்களும் இந்த அரசாங்கத்தின் கீழ் எவ்வித அபிவிருத்திப் பணிகளும் இடம்பெறவில்லை என்று குற்றம் சுமத்துகின்றனர். கடந்த அரசாங்க காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளும் கூட இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். இவ்விடயம் தொடர்பில் மேல் மாகாண மற்றும் மாநகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்த கருத்துக்கள் இவையாகும்.

கேள்வி: -கூட்டு எதிர்க்கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்களோடு சில விமர்சகர்களும் எழுப்புகின்ற நாட்டின் அபிவிருத்திப் பணிகள் தடைப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு தொடர்பில் என்ன கூறுகின்றீர்கள்?

பதில்: -தற்போது நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பது என்பதை எந்த ஒருவராலும் பார்த்துக் கொள்ள முடியும். அதிக தூரம் போகத் தேவையில்லை, காலிமுகத்திடலுக்கு வந்து பார்த்தாலே நன்றாகத் தெரியும். நாட்டில் அபிவிருத்திப் பணிகள் நடக்கின்றதா இல்லையா என்று. துறைமுகநகருக்கான நிரப்பும் பணிகள் ஐம்பது வீதமளவில் நிறைவடைந்திருக்கின்றன.

கேள்வி: -போர்ட் சிட்டி என்பது கடந்த அரசாங்க காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கை. அப்போது எதிர்க்கட்சியில் இருந்த நீங்கள் உள்ளிட்ட அனேகமானோர் இத்திட்டத்திற்கு எதிர்ப்பைத் தெரிவித்தீர்கள். தற்போது அந்தப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றதே?

பதில்: -நாம் ஏதேனும் விடயத்திற்கு எதிர்ப்பைக் காட்டினால் அதற்கு நியாயமான காரணங்கள் இருக்கும். போட் சிட்டி நிர்மாணத்தின் நோக்கமாக கடந்த அரசாங்கம் தெரிவித்த விடயங்கள் என்ன? கசினோ, கார் ஓட்டப் போட்டி போன்ற மோசமான விடயங்கள் இந்நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்யும் காரியங்களா? அடுத்தது, 2014ம் ஆண்டில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை எடுத்துப் பாருங்கள்.

துறைமுக நகரில் சீன நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கும் காணியில் 20 ஹெக்டயர் அளவு சீனா நிறுவனத்திற்கு உறுதி மூலம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. நாம் 2016ம் ஆண்டில் அந்த ஒப்பந்தத்தை திருத்தி அனைத்து காணியும் 99 வருட குத்தகை அடிப்படையில் மாத்திரமே வழங்கியுள்ளோம்.

குத்தகை கால இறுதியில் குறித்த காணியின் ஒரு பகுதி இலங்கை அரசுக்கும், மீதி (20 ஹெக்டேயர்) சீனாவின் திட்ட நிறுவனத்திற்கு சொந்தமாக இருக்கும் வகையிலேயே 2014ம் ஆண்டின் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. குத்தகைக் காலம் முடிந்ததும் மொத்த காணியும் இலங்கை அரசுக்குச் சொந்தமாகும் வகையில் நாம் அதனையும் திருத்தினோம். அதே போன்று துறைமுக நகரின் பராமரிப்பு நடவடிக்கைகள் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றே கடந்த அரசாங்கம் செய்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதனையும் நாம் திருத்தினோம். அரசாங்கமும், வேலைத்திட்ட சீன நிறுவனமும் இணைந்து இதற்கான கூட்டு நிறுவனம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று. இவ்வாறு செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் ஒன்பது பிரிவுகளை இலங்கை அரசாங்கத்திற்கு சாதகமானவாறு நாம் திருத்தினோம். நாம் விமர்சித்தது நாட்டுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பிலேயே தவிற அபிவிருத்தி நடவடிக்கை தொடர்பில் அல்ல.

கேள்வி: -கடந்த அரசாங்கம் கசினோ, கார் ஓட்டப் போட்டிகளை ஆரம்பிப்பதற்கு துறைமுக நகரைப் பயன்படுத்த திட்டமிட்டதாக நீங்கள் குறிப்பிட்டீர்கள். இந்த துறைமுக நகரை தேசிய அரசாங்கம் நாட்டின் அபிவிருத்திக்காக எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளப் போகிறது?

பதில்: -துறைமுக நகரை முதலீட்டு நகராகவே நாம் பயன்படுத்துவோம். வெளிநாட்டு முதலீட்டாளர்களை இதற்கு இழுத்துக் கொள்வதே நோக்கம். விஷேடமாக ஒன்றைக் குறிப்பிட வேண்டும். தற்போது உலகின் நாடுகளை விட நகரம் முன்னணியில் இருக்கின்றது. நகரை மையப்படுத்திக் கொண்டே வர்த்தகம் இடம்பெறுகின்றது. அதாவது முதலீட்டாளர்கள் பார்ப்பது எந்த நகரின் முதலீட்டில் தமக்கு இலாபம் கிட்டும், இலாபத்தை அதிகரித்துக் கொள்ளலாம் என்றேயாகும்.

கேள்வி: -துறைமுக நகரை நிதி நகராக அபிவிருத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக நீங்கள் குறிப்பிட்டீர்கள். எனினும் நிதி நகர எண்ணக்கரு எமக்கு புதிய விடயம். அதே போன்று உலக நாடுகளில் இவ்வாறான திட்டங்கள் தோல்வியடைந்த சந்தர்ப்பங்கள் உள்ளன. இது ஒரு நாட்டின் பொருளாதாரம் சரிவடைவதற்கு பாரியளவில் தாக்கத்தைச் செலுத்தும் ஒன்றாகவும் அமையலாம்தானே!

பதில்: -அந்தக் கதை உண்மையானதுதான். முதலாவது உலகப் புரட்சியின் பின்னர் முதல் நிதி நகராக உலகில் எழுந்து நின்றது சுவிட்சர்லாந்தாகும். பின்னர் அவ்வாறான நகரம் மற்றும் நாடுகள் நூற்றுக்கணக்கில் கடந்த 6,7 தசாப்தங்களினுள் முன்னேறி வருவதற்கு முயற்சித்தன. எனினும் அவற்றுள் வெற்றி கண்டது துபாய், கொங்கொங், சிங்கப்பூர் போன்ற நாடுகளேயாகும். அதே போன்று பலமிக்க நாடாக இருந்த அயர்லாந்து போன்ற நாடுகள் பின்னடைவைச் சந்தித்தன. நாம் செய்வது பலமடைந்த மற்றும் சரிவடைந்த நாடுகளின் அனுபவங்களைப் பெற்றுக் கொண்டு இந்த வேலைத் திட்டத்தை வெற்றிகரமாக்கிக் கொள்வதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வதாகும்.

கேள்வி: -துறைமுக நகரம் சீனாவுடன் இணைந்து அமைக்கப்படுகின்றது. இது முன்னணி செல்வந்தர்களுக்கு மாத்திரம் ஒதுக்கப்படுமா?

பதில்: -இந்த நகரில் முதலில் அமைக்கப்படுவது விகாரமகாதேவி பூங்காவை விட பத்து மடங்கு பெரிய பூங்காவாகும். இது அனைவருக்கும் திறக்கப்படும் ஒரு பூங்காவாகும். அதே போன்று ஏனைய அனைத்தும் எவருக்கும் திறந்தே இருக்கும். சிறந்த வைத்தியசாலை மற்றும் சிறந்த பாடசாலையும் அமைக்கப்படுகின்றது. இதனை இந்து சமுத்திரத்தில் பிராந்திய வர்த்தக மத்திய நிலையமாக ஆக்கப்படும்.

கேள்வி: -இந்த நகரில் பெரும் பிரச்சினையாக அமையப் போவது குப்பை கழிவுகள் பிரச்சினைதானா?

பதில்: -கழிவு முகாமைத்துவம் இந்த நகர் நிர்மாணத்தின் ஒரு அங்கமாகும். இதற்காக தற்போது தீர்வு வழங்கப்பட்டு முடிந்து விட்டது. கொழும்பு நகர சபைக்கு இந்தச் சுமையினை சுமத்தப் போவதில்லை. சீன நிறுவனத்துடன் இணைந்து இதற்காக தனியான நிர்வாக நிறுவனம் ஒன்று அமைக்கப்படும். தற்போது அதற்கான அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது.

கேள்வி: -நீர் மற்றும் மின்சாரப் பிரச்சினைகள் எவ்வாறு தீர்க்கப்படப் போகின்றன?

பதில்: -இதற்காக இரண்டு நீர்த்தேக்க வேலைத் திட்டங்களை நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசன அமைச்சும், நீர்வள சபையும் இணைந்து 'வீ ஓயா' மற்றும் 'யட்டிமஹன' என்ற பெயரில் புதிய இரண்டு நீர்த்தேக்கங்களை நிர்மாணித்தே இந்நகரத்தின் நீர்த் தேவை பூரணப்படுத்தப்படும். மின்சார விநியோகத்திற்காக 300 மெகா வோட் இயற்கை வாயு மின்உற்பத்தி நிலையம் ஒன்று துறைமுக நகரத்தினுள்ளேயே அமைக்கப்படும்.

கேள்வி: -துறைமுக நகரம் இலங்கையில் இணைக்கப்படும் புதிய நிலப்பரப்பாகும். இலங்கை வரைபடத்தையும் மாற்ற வேண்டும்தானே?

பதில்: -கண்டிப்பாக, இலங்கை வரைபடத்தை புதிதாக உருவாக்க வேண்டி வரும். புதிய நிர்வாக நகரமாகவே இந்நகரம் உருவாகின்றது.

கேள்வி: -அதாவது கொழும்பு நகர சபைக்கு வெளியேயான நிர்வாக கட்டமைப்பாகவா இது செயற்படும்?

பதில்: -ஆம். இலங்கைக்குரிய வேறான நிர்வாக நகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கே நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

கேள்வி: -இந்த நிர்வாக நகரின் கட்டமைப்பின் மதிப்பீடுகள், வரிகள் போன்றன கொழும்பு நகர சபைக்கு உரித்தாகாவிட்டால் அதற்கேற்ற நடைமுறைகள் என்ன?

பதில்: -தனியான வரி முறையொன்று இந்த நிர்வாக நகருக்காக மேற்கொள்ளப்படும். சுற்றுலாத் துறைக்காக முன்னுரிமை வழங்கப்படும்.

கேள்வி: -சீன நிறுவனத்தின் உரிமை இல்லையா?

பதில்: -ஜனாதிபதியிடமே காணி அதிகாரங்கள் உள்ளன. எந்த ஒரு நாட்டிலும் கடலில் 12 மைல் தூர கடல் பரப்பானது அந்த நாட்டிற்கே சொந்தமாகும். ஜனாதிபதி விஷேட அனுமதிப்பத்திரத்துடன் இந்த அபிவிருத்திக்கான அனுமதியை வழங்கினார். நாம் அந்த அனுமதியினை சீன நிறுவனத்திற்கு அபிவிருத்திற்காக வழங்கினோம். நகரம் உருவாக்கப்பட்ட பின்னர் மீண்டும் அனுமதியைப் பெற வேண்டும்.

கேள்வி: -துறைமுக நகரம் நிர்மாணிக்கப்படும் நேரத்தில் கொழும்பு நகரில் ஆங்காங்கே அனேகமான அகழ்வுகள் இடம்பெறுகின்றன. இது துறைமுக நகரின் பக்க விளைவா அல்லது உமாஓயா போன்று மற்றொரு நெருக்கடிக்கான முன்னுரையா?

பதில்: -இந்த துறைமுக நகர நிர்மாணப் பணிகள் கடலை மூடியே மேற்கொள்ளப்படுகின்றன. கொழும்பு நகரில் நிலத்தின் கீழான அகழ்வுப் பணிகள் நகரினுள்ளேயே இடம்பெறுகின்றன. அந்த அகழ்வுப் பணிகள் பழைய நீர்க் குழாயினை நீக்கிவிட்டு புதிய நீர்க்குழாய்களைப் பொருத்துவதற்காகவே மேற்கொள்ளப்படுகின்றது.

கேள்வி: -ஏன் திடீரென இந்த புதிய நீர்க்குழாய்கள் பொருத்துவதற்கு ஆரம்பிக்கப்பட்டன?

பதில்: -கொழும்பு நகரில் இன்னமும் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுவது பிரித்தானியர்களால் பொருத்தப்பட்ட குழாய்கள் மூலமேயாகும். கொழும்பு நகரினுள் மாத்திரம் 960 கிலோ மீற்றர் தூரத்திற்கு இந்தக் குழாய்கள் பரந்திருக்கின்றன. இந்த பழைய குழாய்களால் கொழும்பு நகரில் விநியோகிக்கப்படும் நீரில் 40 வீதமளவில் வீணாகின்றது. எனவேதான வெளிநாட்டு உதவியுடன் புதிய குழாய்களைப் பொருத்துவதற்கு ஆரம்பிக்கப்பட்டது. நாம் புதிதாக 60 கிலோ மீற்றர் குழாய்களைப் பொருத்த உள்ளோம்.

கேள்வி: -துறைமுக நகர வேலைகளுக்காக ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான லொறி கருங்கல் வருகின்றது. சுற்றாடல் பாதிப்பு, கல் உடைத்தல் போன்ற விடயங்கள் பிரச்சினையாக அமையவில்லையா?

பதில்: -இந்த அனைத்து கருங்கற்களும் மேல் மாகாணத்திலிருந்து மாத்திரமே பெறப்படுகின்றன. சுற்றாடல் ஆய்வு அறிக்கை உள்ளிட்ட அனைத்து அறிக்கைகளும் பெறப்பட்ட பின்னரே இந்த அனைத்துப் பணிகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

கேள்வி: -உங்களது அமைச்சின் தலையீட்டினால் இலகு புகையிரத சேவை கட்டமைப்பு ஒன்றை ஆரம்பிக்கப் போவதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது. இவ்விடயம் வெறும் பேச்சோடு முற்றுப் பெற்றுவிட்டதா?

பதில்: -புதிதாக ஏழு இலகு புகையிரதச் சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. கொழும்பு நகரை மையப்படுத்தி பத்தரமுல்லை வீதியின் நெரிசலைக் கவனத்தில் கொண்டே இந்த கட்டமைப்பு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இரண்டு வீதிகளை ஜைய்க்கா அமைப்பின் உதவியுடன் நாம் அடுத்த வருடத்தில் ஆரம்பிக்க உள்ளோம்.

அதில் ஒரு வீதி கொழும்பு கோட்டையிலிருந்து கடுவளை வரையிலும், மற்றைய வீதி கொழும்பு கோட்டையிலிருந்து கொம்பனி வீதி ஊடாக பம்பலப்பிட்டி வரையிலும் செல்லும்.

இதற்காக அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 2018 டிசம்பர் மாதத்தில் வேலைகள் ஆரம்பிக்கப்படும். தற்போது சுற்றாடல் ஆய்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. வீடுகளை இழப்போர் தொடர்பில் சமூக மதிப்பீட்டை மேற்கொள்ளுமாறு ஜப்பான் நிறுவனம் விஷேட அறிவித்தல் ஒன்றை விடுத்திருக்கின்றது. அந்தப் பணிகளும் தற்போது இடம்பெற்று வருகின்றன. ஏனைய ஐந்து வீதிகளுக்காகவும் தற்போது கேள்விப் பத்திரங்கள் கோரப்பட்டிருக்கின்றன. இதற்காக ஒன்பது முதலீட்டாளர்கள் முன்வந்திருக்கின்றார்கள். இந்த ஐந்து வீதிகளும் துரித மகாவலி திட்டத்தைப் போன்று ஒரே தடவையில் நடைமுறைப்படுத்தப்படும்.

கேள்வி: -நீங்கள் இந்த இலகு புகையிரத சேவை கட்டமைப்பு, துறைமுக நகரின் முக்கியத்துவங்கள் பற்றி பேசினாலும், மத்திய அதிவேக நெடுஞ்சாலை தொடர்பில் எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்படுவதாகத் தெரிகின்றதே?

பதில்: -எந்த எதிர்ப்புக்களும் இல்லை. நாம் எதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை இனங்கண்டு கொண்டு செயற்பட வேண்டும். நாம் 2011ம் ஆண்டிலிருந்து 2015ம் ஆண்டு வரையில் 170 கிலோ மீற்றர் தூர அதிவேக நெடுஞ்சாலைகளை அமைத்திருக்கின்றோம். இதற்காக 207 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டிருக்கின்றது.

பின்னர் அடுத்த மூன்று வருடங்களுக்கு இன்னும் 190 கிலோ மீற்றர் தூர அதிவேக நெடுஞ்சாலைகளை அமைப்பதற்குப் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. இதற்காக 353 பில்லியன் ரூபாய் செலவிடப்பட உள்ளது. இதற்கு மேலாக இன்னும் 260 கிலோ மீற்றர் அதிவேக நெடுஞ்சாலை கட்டமைப்போடு இணைக்கப்பட உள்ளது. இவை அனைத்திற்கும் செலவாகும் தொகை 170 பில்லியன் ரூபாய். இந்தளவு பாரிய தொகை எமது அதிவேக நெடுஞ்சாலைகளுக்குள் முடக்கப்பட்டால் நாட்டின் ஏனைய அபிவிருத்திப் பணிகளுக்கு எவ்வாறு பணத்தைத் தேடிக் கொள்வது?

கேள்வி: -அதாவது அதிவேக நெருஞ்சாலைகள் அமைக்கப்படக் கூடாது என்றா நீங்கள் கூறுகின்றீர்கள்?

பதில்: -கொழும்பு - ஹொரனை வீதியில் ஒரு நாளைக்கு 170000 வாகனங்கள் பயணிக்கின்றன. பாமன்கடையிலிருந்து டப்ளிவ். ஏ. த சில்வா மாவத்தை வரையான வீதியை அபிவிருத்தி செய்யாது நாம் கொழும்பு - கண்டி அதிவேக நெடுஞ்சாலையை அமைக்கின்றோம். அந்த வீதி கலகெதர வரையில் அமைத்தால் போதுமானது. அதற்கப்பால் வீதியை அமைப்பது பொருளாதார ரீதியிலும், பௌதீக ரீதியிலும் நல்லதல்ல. அடுத்த விடயம் கொழும்பு நகரில் தற்போது சுமார் 20000 அளவிலானோர் மலசல கூட வசதிகளின்றி இருக்கின்றார்கள்.

அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு கிலோ மீற்றருக்கான பணியினை நிறுத்தினால் அந்த பணத்தில் இந்த 20000 மலசல கூடங்களை அமைத்துக் கொடுக்கலாம். இரண்டு கிலோ மீற்றரை நிறுத்தினால் மருத்துவக் கல்லூரி ஒன்றை அமைக்க முடியும். மூன்று கிலோ மீற்றரை நிறுத்தினால் அந்தப் பணத்தில் 'வீ ஓயா' மற்றும் 'யட்டிமஹன' ஆகிய இரண்டு நீர்த்தேக்கங்களை நிர்மாணித்து விட முடியும். கொழும்பு நகரில் அதிக நெரிசல் உள்ளது. இவ்வாறான நிலைகளை வைத்துக் கொண்டு கலகெதரவிற்கு அப்பால் அதிவேக நெடுஞ்சாலையினை அமைப்பது நாம் செய்ய வேண்டிய எமது முன்னுரிமை பட்டியலைக் கடந்து செல்கின்றோம் என்பது தெளிவாகும்.

கேள்வி: -அவ்வாறிருந்தாலும் துறைமுக நகரிலிருந்து கொள்ளுபிட்டி வரையில் சுரங்கப் பாதை அமைப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றதே?

பதில்: -நகர போக்குவரத்துப் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நிதி ஒதுக்கீடுகளைச் செய்ய வேண்டும். எனினும் அதற்காக சீன நிறுவனம் 200 மில்லியனை ஒதுக்கி சுரங்கப்பாதையினை அமைத்து வருகின்றது. இது நாம் பெற்ற வெற்றி. மேல் மாகாண மற்றும் மாநகர அபிவிருத்தி அமைச்சினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் பிரகாரமே இந்தப் பணிகள் இடம்பெறுகின்றன.

கேள்வி: -பேர குளத்தை அண்மித்த அபிவிருத்தி நடவடிக்கைகள் தற்போது மந்த கதியிலேயே செல்வதைக் காண முடிகின்றதே?

பதில்: -பேர வாவியிலிருந்து டீ. ஆர். விஜயவர்தன மாவத்தை வரையிலான அனைத்து குடிசைகளும் அடுத்த வாரத்திலிருந்து அகற்றப்படும். நாம் அந்த அனைத்து மக்களுக்கும் வீடுகளை வழங்குவோம். நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழேயே இந்த வீடுகள் வழங்கப்படும். இன்னும் சிறிது காலத்தில் பேர வாவியை அண்மித்த பகுதிகள் அழகிய பிரதேசமாக மாறும். அந்தப் பணிகள் ஐம்பது வீதம் நிறைவடைந்திருக்கின்றன.

 

தாரக விக்ரமசேகர
தமிழில்: எம்.எஸ்.முஸப்பிர்
(புத்தளம் விஷேட நிருபர்)


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...