ஏறாவூர் இரட்டை கொலை சந்தேகநபர்கள் கைது, நகைகள் மீட்பு. | தினகரன்

ஏறாவூர் இரட்டை கொலை சந்தேகநபர்கள் கைது, நகைகள் மீட்பு.

 

ஏறாவூர் பொலிஸ் பிரிவின் சவுக்கடி பிரதேசத்தில் கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற தாய் மற்றும் மகன் இரட்டைக் கொலையின் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த வீட்டில் இருந்து கொள்ளையிடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவரவின் வழி காட்டலில் விஷேட விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் அப்துல் வஹாப் தலைமையில், பொலிஸ் உத்தியோகத்தர்களான ரோஹண, மனோகரன், தாஹா, பன்டார,சுரங்க, சாரதி பிரயசாந்த ஆகியோர் அடங்கிய குழுவினர் முன்னெடுத்த தொடர் விசாரணைகளை அடுத்தே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மிருசுவில் வடக்கு கொடிகாம், யாழ்ப்பாணம் எனும் முகவரியை சேர்ந்த ஒருவரையும், சவுக்கடி தன்னாமுனை எனும் முகவரியை கொண்ட ஆட்டோ சாரதி ஒருவரையும் கைது செய்த பொலிஸ் விசேட விசாரணை பிரிவினர், தொடர்ந்து முன்னெடுத்த விசாரணைகளின் பிரகாரம் யாழ்ப்பாணம் மற்றும் சாவகச்சேரி பிரதேசத்தில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் அடகு வைக்கப்பட்டிருந்த நகைகளையும் கைப்பற்றி உள்ளனர்.

விசேட பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும், கொள்ளை பொருட்களும் தற்போது ஏறாவூர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் சந்தேகநபர்களை நீதி மன்றில் ஆஜர் செய்யும் நடவடிக்கைகளை ஏறாவூர்  பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவின் சவுக்கடி பிரதேசத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதியான தீபாவளி தினத்தன்று, 23 வயதான பீதாம்பரம் மதுவந்தி அவரது மகனான பீதாம்பரம் மதுசான் (11) ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டிருந்ததனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே கொலையின் பிரதான சந்தேகநபர்கள் விஷேட விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கொலை சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரும் அம்பாறை கோமாரி பகுதியையும் வசிப்பிடமாக கொண்ட பிரதான சந்தேகநபர் அண்மைக்காலமாக சவுக்கடியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்பவராக இருந்ததாகவும் , அவருக்கும் சவுக்கடி பிரதேசத்தில் உள்ள மற்றொரு சந்தேகநபரான ஆட்டோ சாரதிக்கும் இடையில் ஏற்பட்ட நட்பினை அடுத்தே குறித்த கொலைத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபரின் ஆட்டோவிலேயே, கொலை செய்யப்பட்ட மதுவந்தி மற்றும் அவரின் மகன் மதுஷன் ஆகியோர் வழமையான பயணங்களை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுவதுடன் கொலைச் சம்பவம் இடம்பெற்ற தினம் நகையினை அடகு வைத்து விட்டு பணம் எடுத்து வந்ததும் இந்த ஆட்டோவிலேயே என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த குடும்பத்தின் நம்பிக்கையான ஆட்டோ சாரதியான அயலவரே கொலைக்கு உடந்தையாக இருந்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி நள்ளிரவு பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்ட நிலையில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது அதற்கு துணையாக நின்றவரும் கைதுசெய்யப்பட்டதாகவும் நகைகளும் யாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

(வெல்லாவெளி தினகரன் நிருபர் - க. விஜயரெத்தினம்)

 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...