Friday, March 29, 2024
Home » அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி சம்மேளன 50 ஆவது வருட பொன்விழா மாநாடு

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி சம்மேளன 50 ஆவது வருட பொன்விழா மாநாடு

by Rizwan Segu Mohideen
October 29, 2023 6:24 am 0 comment

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி சம்மேளனத்தின் ஐம்பதாவது வருட பொன்விழா மாநாடு இன்று (29) கொழும்பு 07 இல் உள்ள விளையாட்டு அமைச்சின் ‘டங்கன்ட் வைட்’ மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

சம்மேளன தேசியத் தலைவர் தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பிரதம அதிதியாகவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கௌரவ அதிதியாகவும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொஹிதீன், இந்திய லோக் சபாவின் தமிழ்நாடு உறுப்பினர் கே. நவாஸ்கனி ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கின்றனர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். எம். சுஹைர் இந்நிகழ்வில் சிறப்புரை நிகழ்த்துவார்.

பொன்விழா மாநாட்டை முன்னிட்டு தபால் அமைச்சின் முத்திரை வெளியீட்டுப் பணியகம் ரூபா 25 பெறுமதியான விஷேட ஞாபகார்த்த முத்திரையையும், விஷேட ஞாபகார்த்த கடித உறையையும் வெளியிடுகின்றது. ‘உதயக்கீற்று’ – 2023 என்ற சிறப்பு பொன்விழா மாநாட்டு மலரும் வெளியிடப்பட இருக்கிறது.

பௌத்த மதகுரு வண. தம்மானந்த தேரோ, ஜனாதிபதி சட்டத்தரணி எம். எம். சுஹைர், பேராசிரியை சுமதி சிவமோகன் ஆகியோர் அவர்களது மக்கள் சேவைக்காக விஷேட விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளனர். அத்துடன் சம்மேளனத்தின் முன்னாள் தேசிய தலைவர்களான தல்கஸ்பிட்டிய என். எம். அமீன், சிரேஷ்ட சட்டத்தரணி உடுதெனிய ரஷீத் எம். இம்தியாஸ், அக்கரைப்பற்று எம்.ஐ. உதுமாலெப்பை, பொத்துஹர கலாநிதி பி.எம். பாரூக் ஆகியோரும் கௌரவிக்கப்படுகின்றனர்.

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டதன் 30 ஆவது ஆண்டு பூர்த்தியை நினைவூட்டும் வகையில், அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் இம்மாநாட்டின் போது வழங்கப்பட இருக்கின்றன.

களுத்துறை, குருநாகல், கண்டி, புத்தளம், அனுராதபுரம், மன்னார் மாவட்டங்களில் நடத்தப்பட்ட இளைஞர்களுக்கான தலைமைத்துவ, திறன்விருத்தி பயிற்சி முகாம்களில் பங்குபற்றியவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 150 இளைஞர்களும், யுவதிகளும் இம்மாநாட்டில் பங்குபற்ற உள்ளதுடன் அவர்களில் தெரிவான சிலரது திட்ட முன்வைப்புகளும் இடம்பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT