Thursday, March 28, 2024
Home » வாசிப்பு ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமை

வாசிப்பு ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமை

by Rizwan Segu Mohideen
October 27, 2023 12:46 pm 0 comment

‘வாசிப்பீராக…, படைத்த இறைவனின் பெயரால்… அவன் பேனாவைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். அவன்தான் மனிதன் அறியாதவற்றை எல்லாம் அவனுக்குக் கற்றுக்கொடுத்தான்’.
(ஆதாரம்-: ஸூரதுல் அலக் 1-5)

இற்றைக்கு 1400 வருடங்களுக்கு முன்னர் அறியாமைச் சமூகத்தில் தனது தூதரை அனுப்பிய அல்லாஹுத்தஆலா முதன் முதலில் இறக்கியருளிய வசனங்கள் இவை. கற்றுக் கொடுத்தலையும் கற்றுக் கொள்ளுதலையுமே முதல் வசனங்களாக அல்லாஹுத்தஆலா அச்சமூகத்தின் மீது இறக்கியுள்ளான்.

அந்த வகையில் கற்றுக் கொடுப்பவனாக தன்னை எடுத்துக்காட்டுகின்ற அல்லாஹுத்தஆலா கற்றுக்கொள்பவனாக மனிதனை உருவகித்துக் காட்டுகின்றான். எனவே கற்றலும் கற்பித்தலும் என்பது இறைவனுக்கும் மனிதனுக்குமான தொடர்பாடல் என்பதாகவே இஸ்லாம் சொல்லித் தருகிறது.

உலகத்தாருக்கு வழிகாட்டியாக அருளப்பட்ட அல்குர்ஆனைப் படிப்பவர்களை மனிதர்களிலேயே சிறந்தவர்கள் என இஸ்லாம் கூறுகிறது. உங்களில் சிறந்தவர் அல்குர்ஆனைக் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுப்பவர்களே… என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இதற்கு வசதியாக அமையும் வகையில் அல்குர்ஆனை எழுத்துருவில் பாதுகாக்குமாறு நபியவர்கள் தமது தோழர்களுக்கு ஏவினார்கள். நபி(ஸல்) அவர்களுக்கு பின்னர் அல்குர்ஆன் இறங்குவது முற்றுப் பெற்றதனால், அதுவரை எழுதி வைக்கப்பட்டிருந்த அல்குர்ஆனைத் தொகுத்து முஸ்ஹப்களாக வெளியிடும் பணியை கலீபா அபூபக்கர் (ரழி) அவர்கள் மேற்கொண்டார்கள். இதிலிருந்து அல்குர்ஆன் முழுமையாக வாசிக்கும் வகையில் நூலுருப்பெற்றது. உலக முஸ்லிம்கள் அன்றாடம் இதனை ஓதுபவர்களாக…, வாசிப்பவர்களாக… இருப்பதனால் இன்று உலகில் அதிகம் வாசிக்கப்படும் நூலாக அல்குர்ஆன் விளங்குகிறது.

அல்குர்ஆனை சரளமாக ஓதவோ வாசிக்கவோ முடியாதவர்கள் கஷ்டப்பட்டேனும் அதனை ஓதுவதையும், வாசிப்பதையும் நபியவர்கள் ஊக்குவித்துள்ளார்கள். அழகிய முறையில் அல்குர்ஆனை ஓதுபவர்களுக்கு சிறந்த கூலியுண்டு. கஷ்டப்பட்டேனும் அதனை ஓதுபவர்களுக்கு இரட்டிப்பு நன்மையுண்டு எனவும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

அல்குர்ஆனை வாசிப்பது என்பது நன்மை தரும் விடயமாகும். அதனால் அதனை ஓதுவதில் இருந்தும் வாசிப்பதில் இருந்தும் யாரும் தவிர்ந்து கொள்ள முடியாது.

அதேபோன்று அல்குர்ஆன் அருளப் பெற்ற நபி (ஸல்) அவர்களது சொல், செயல், அங்கீகாரம் அனைத்தையும் தேடிப்பிடித்து அவற்றை நூலுருப்படுத்தும் பணியையும் ஹதீஸ்துறை இமாம்கள் செய்து வைத்திருக்கிறார்கள். இவை அனைத்தும் ஆறு கிரந்தங்களாகவும் இவற்றின் விளக்கங்கள் இன்னும் பல நூல்களாகவும் தொகுக்கப்பட்டிருக்கின்றன. ‘உங்கள் மத்தியில் இரண்டு விடயங்களை விட்டுச் செல்கிறேன். அதையொட்டி நீங்கள் வாழும் காலமெல்லாம் வழிதவறமாட்டீர்கள். அதுதான் அல்குர்ஆனும் ஹதீஸும்’ எனவும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

இந்த இரண்டுமே தற்போது மக்கள் வாசித்தறிந்து கொள்ளும் வகையில் நூலுருப்படுத்தப்பட்டிருக்கின்றன. அல் குர்ஆன் மற்றும் ஹதீஸினூடாக வழிகாட்டல் பெற வேண்டுமானால் இவற்றை வாசிப்பது கட்டாயமாகிறது. வாசிப்பது எவ்வளவு தூரம் முக்கியமானது என்பதை பத்ருடைய சம்பவமும் எடுத்துக்காட்டுகிறது. பத்ர் யுத்தத்தில் முஸ்லிம்களுக்கெதிராகப் போராடிய சிலர் சிறைப்பிடிக்கப்பட்ட போது அவர்களைக் கொலை செய்து விட ஆலோசனைகள் சொல்லப்பட்ட போதும், அவர்களில் கற்றவர்களை வைத்து முஸ்லிம் சமூகத்தில் கல்வி அறிவில்லாத சிலருக்கு எழுதவும் வாசிக்கவும் கற்றுக்கொடுக்க நபி(ஸல்) அவர்கள் வழிவகை செய்தார்கள்.

அல்குர்ஆனும், ‘உங்களில் அறிந்தவர்களும் அறியாதவர்களும் சமமாக மாட்டார்கள்’ என்று கூறியுள்ளது. ஒரு சமூகத்தில் அறிந்தவர்கள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அறிவுடைய சமூகத்தை உலகம் போற்றுவதோடு அச்சமூகத்தைப் பின்பற்றவும் தலைப்படுகிறது. அதனால் முஸ்லிமான ஒவ்வொரு ஆண், பெண்ணின் மீதும் கல்வி கற்பது கட்டாயக் கடமையாகிறது என்று குறிப்பிட்டுள்ள நபி (ஸல்) அவர்கள், சீனா சென்றேனும் கல்வியைத் தேடிப் படியுங்கள் என்றும் ஊக்குவித்தார்கள்.

அல்குர்ஆனும் சிந்திப்பதையும் ஆராய்ச்சி செய்வதையும் பல இடங்களில் ஊக்குவித்துள்ளது. இப்படிப் பல வகைகளிலும் கல்வி பெறுவது முஸ்லிம்கள் மீது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பிக்ஹுடைய இமாம்களின் கருத்துப்படி, ஒரு வாஜிபை நிறைவேற்றுவதற்கு எதுவெல்லாம் அவசியமோ அவையும் வாஜிபாகும். வுழு செய்வது சுன்னத்தாக இருந்தாலும் தொழுகை என்ற கடமையைச் செய்வதற்கு அது அவசியமானது என்ற வகையில் தொழுகைக்காக வுழு செய்வது வாஜிபாகும். இந்த வகையில் அறிவைப் பெற்றுக்கொள்வது ஒரு முஸ்லிமின் மீதான கடமை என்ற வகையில் அந்த அறிவைப் பெற்றுக்கொள்வதற்காக வாசிப்பது என்பதுவும் அவன் மீது கடமையாகிறது.

புத்தகங்களை வாசிப்பதைத் தவிர்ந்து கொள்ளும் இன்றைய எதிர்காலச் சந்ததிகள் தொடர்பில், பரனைட் 451 என்ற புத்தகத்தை எழுதிய ரே ப்ராட்பரி என்ற நூலாசிரியர், ‘ஒரு கலாசாரத்தை இல்லாதொழிப்பதற்கு நீங்கள் புத்தகங்களை எரிக்க வேண்டியதில்லை, அவற்றை வாசிக்கவிடாமல் செய்யுங்கள்’ என்கிறார்.

உண்மையில் முஸ்லிம் சமூகம் வாசிப்பதைக் கைவிடும் போது அது கல்வி பெறுதல் என்ற தனது கடமையில் தவறுவிட்ட சமூகமாக மாறுகிறது. இந்நிலைக்கு முஸ்லிம் சமூகம் ஆளாகுமாக இருந்தால் இந்த உலகத்தில் பின்தள்ளப்பட்ட சமூகமாக முஸ்லிம் சமூகம் மாறுவது தவிர்க்கவியலாமல் போகும்.

இந்த இழிநிலையில் இருந்து முஸ்லிம் சமூகத்தைக் காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் வாசித்தல் என்ற வாஜிபை அச்சமூகத்தில் பரவலாக்க வேண்டும். இது குறிப்பிட்ட ஒரு சிலர் வாசித்தால் நிறைவேறிவிடும் கடமையல்ல. கல்வி கற்பது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமை என்ற வகையில் இது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமையான பர்ளு ஐனாகும். கல்வி கற்பதற்கு வாசிப்பு அவசியம் என்ற வகையில் வாசிப்பையும் வாஜிபானதாகக் கொள்ளாதவரை இந்த தீன் உலகில் மிகைத்ததாக மாறுவதற்கு தடையானவர்களாக முஸ்லிம் சமூகமே மாறிவிடவும் முடியும்.

பியாஸ் முஹம்மத்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT