Saturday, April 27, 2024
Home » ஒரு வருட நிறைவு: மலையக இலக்கியம் வளர்ச்சியடைய பெரும் பங்களிப்பு வழங்கிய தெளிவத்தை ஜோசப்

ஒரு வருட நிறைவு: மலையக இலக்கியம் வளர்ச்சியடைய பெரும் பங்களிப்பு வழங்கிய தெளிவத்தை ஜோசப்

- ஈழத்து இலக்கிய ஆளுமை மறைந்து ஒரு வருட நிறைவு

by Rizwan Segu Mohideen
October 27, 2023 7:42 am 0 comment

தமிழுலகம் அறியும் எழுத்தாளராக உலாவந்தவர் தெளிவத்தை ஜோசப். அவர் தனது இயற்பெயருடன், தான் பிறந்து வாழ்ந்த மண்ணையும் கௌரவிக்கும் முகமாக மலையகத்தின் தெளிவத்தையை தன்னுடன் இணைத்து அம்மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

எழுத்தையே உயிர்மூச்சாக சுவாசித்த மலையகத்தின் மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் 21.10.2022 அன்று காலை காலமானார்.

மலையகத் தோட்டப்புற வாழ்வியல் கோலங்களை சிறுகதைகளாக படைத்து பிரதேசம் கடந்தும் சிறந்த படைப்பாளியாகக் கருதப்படுபவர் அவர்.

மலையகத்தின் பதுளை மாவட்டம் ஊவாக்கட்டவளை என்ற ஊரில் 1934- பெப்ரவரி 16 இல் அவர் பிறந்தார். இளமையில் கும்பகோணம் லிட்டில் பிளவர் உயர்நிலைப் பள்ளியில் 3 ஆண்டுகள் படித்தார். பின்னர் இலங்கை திரும்பி பதுளை சென் பீட்டர்ஸ் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார்.

ஈழத்தின் தலைசிறந்த எழுத்தாளரான தெளிவத்தை ஜோசப்பின் ‘காலங்கள் சாவதில்லை’ நாவல்,

‘நாமிருக்கும் நாடே’ சிறுகதைத் தொகுதி என்பன இவருடைய முக்கியமான படைப்புகளாகும்.

பலராலும் அறியப்படும் படைப்பாளியாக உயர்ந்த தெளிவத்தை ஜோசப் 1960-களில் தமிழ் இலக்கியத் துறையில் தடம் பதித்தார். ஆரம்பத்தில் சிறுகதைகள் எழுதினார். பிறகு குறுநாவல், நாவல், விமர்சனம், ஆய்வுக் கட்டுரைகள், தொலைக்காட்சி, வானொலி நாடகம், திரைப்படக் கதை எனப் பல தளங்களில் தடம் பதித்தார்.

அவர் ஒரு பிரபல எழுத்தாளராக இருந்தாலும் ஏனைய படைப்பாளர்களின் படைப்புகளை வெளிக்கொணர்வதிலும் தமது பங்களிப்பை வழங்கி வந்தார். வளர்ந்து வரும் எழுத்தாளர்கள் முதல், உறுதியான தடத்தைப் பதித்துக்ெகாண்டவர்கள் வரை அனைவரையும் வெளிஉலகுக்குக் கொண்டுவருவதற்கு உறுதுணையாக இருந்தார்.

தனது இலக்கியப் படைப்புகள் மூலம் மலையக எல்லையைக் கடந்து உலக அளவில் பேசப்படும் ஈழத்தின் முக்கியப் படைப்பாளியாகத் திகழ்ந்தார். பல்வேறு பத்திரிகைகளுக்காக பல புனைபெயர்களில் இலக்கியக் கட்டுரைகள், இலக்கியக் குறிப்புகள், சிறுகதைகள், கவிதைகள், இலக்கியத் தகவல்களை அவர் எழுதியுள்ளார். மலையகம் பற்றி அறியவேண்டும் என்றால், இவரது படைப்புகளைப் படித்தால் போதும் என்னும் அளவுக்கு அந்த மக்களின் சமூக, அரசியல், பொருளாதார நிலைவரங்கள் தனது படைப்புகளில் நிறைந்திருந்தன.

இலங்கையில் தயாரிக்கப்பட்ட ‘புதிய காற்று’ திரைப்படத்திற்கும் தொலைக்காட்சி நாடகமொன்றுக்குத் திரைக்கதை, வசனம் எழுதியுள்ள தெளிவத்தை ஜோசப் இதுவரை ஆறு நாவல்களையும், மூன்று சிறுகதைத் தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார்.

தெளிவத்தை ஜோசப் ‘நாமிருக்கும் நாடே’ சிறுகதைத் தொகுதிக்காக இலங்கைச் சாகித்திய விருது பெற்றுள்ளார். இவரது ‘குடை நிழல்’ என்ற புதினநூல் 2010 ஆம் ஆண்டுக்கான யாழ் இலக்கிய வட்டம் – இலங்கை இலக்கியப் பேரவை விருதைப் பெற்றுள்ளது. ‘காலங்கள் சாவதில்லை’ என்பது இவரது முக்கியமான நாவல். அவரது ஆய்வு நூல்களான ‘20- ஆம் நூற்றாண்டில் ஈழத்து இதழியல் வரலாறு’, ‘மலையக சிறுகதை வரலாறு’ ஆகியவை இவரைச் சிறந்த ஆய்வாளராக உலகுக்கு பறைசாற்றுகின்றன.

அவர் தமிழ் இலக்கிய மேம்பாட்டுக்காக பல்வேறு முனைப்புகளை மேற்கொண்டார். மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் தலைவராக பணியாற்றிய எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் மத்திய, மாகாண அரசுகளின் பல விருதுகளுக்குச் சொந்தக்காரர். ஊவா மாகாண சாகித்திய விருது, இந்து கலாசார திணைக்களத்தின் இலக்கிய செம்மல் விருது, அரசின் கலாபூசணம் விருது, தேசிய சாகித்திய விருது, பேராதனை பல்கலைக்கழகத் தமிழ் ஒன்றியத்தின் விசேட விருது, கம்பன் கழக விருது, யாழ் இலக்கிய வட்டத்தின் விருது, மட்டக்களப்பு இலக்கிய மன்றத்தின் விருது, மத்திய மாகாண சாகித்திய விருது, மேல்மாகாண சாகித்திய விருது, கொடகே வாழ்நாள் சாதனையாளர் விருது, விஷ்ணுபுரம் இலக்கிய விருது உள்ளிட்ட பல விருதுகள் அவருக்குக் கிடைத்துள்ளன.

இவர் தனது இலக்கியப் பயணத்தில் 66 சிறுகதைகள் உட்பட ஏராளமான படைப்புகளை வழங்கியுள்ளார். சென்னை இலக்கிய மாநாடு, கனடா புத்தகக் கண்காட்சி, அவுஸ்திரேலியா, பிரித்தானியா நாடுகள் உள்ளிட்டவற்றில் பேச்சாளராகவும் கலந்துகொண்டு மலையக இலக்கியத்திற்கு பெருமை சேர்த்தவர்.

மலையக இலக்கியம் வளர்ச்சியடைவதற்கு தெளிவத்தை ஜோசப்பின் பங்களிப்பு இன்றியமையாதது என்றால் மிகையில்லை.

ஐங்கரன் விக்கினேஸ்வரா
அவுஸ்திரேலியா

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT