Friday, March 29, 2024
Home » சுற்றுலாப் பயணத்துறையை மேம்படுத்த மற்றொரு திட்டம்

சுற்றுலாப் பயணத்துறையை மேம்படுத்த மற்றொரு திட்டம்

by Rizwan Segu Mohideen
October 27, 2023 6:04 am 0 comment

நாலாபுறமும் கடலால் சூழப்பட்டுள்ள இலங்கை சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கக் கூடிய எழில்மிகு கடற்கரைகளையும் கண்கவர் நீர்வீழ்ச்சிகளையும் நீரூற்றுக்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

அதேநேரம் இரண்டு மணித்தியாலய பயணங்களின் ஊடாக வித்தியாசமான சீதோஷண நிலையை அனுபவிக்கக் கூடிய நாடாக விளங்கும் இலங்கை சமய, கலாசார மரபுரிமைகளுக்கு உரிமை கொண்டாடும் தனித்துவ நாடாகவும் திகழுகிறது.

இவை மாத்திரமல்லாமல் சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய பல்வேறு சிறப்பம்சங்களையும் இந்நாடு தன்னகத்தே கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்நாட்டின் உல்லாசப் பயணத்துறையை அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் முக்கிய துறைகளில் ஒன்றாகக் கட்டியெழுப்பவது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கு சாதகமான வாய்ப்புக்கள் நிறையவே காணப்படுகின்றன.

அந்த வகையில் சுற்றுலாக் கைத்தொழில் துறையை மேலும் மேம்படுத்தும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் பயனாக உல்லாசப் பயணிகளின் வருகை கடந்த வருடத்தை விடவும் இவ்வருடம் பெரிதும் அதிகரித்துள்ளது. இதனை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகள் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

இத்தரவுகளின்படி, இவ்வருடத்தின் மே மாதம் தவிர்ந்த ஏனைய ஒவ்வொரு மாதமும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட உல்லாசப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அதுவும் ஜுலை மாதம்தான் அதிகூடிய எண்ணிக்கையானோர் இங்கு வருகை தந்த மாதமாக விளங்குகிறது.

இவ்வருடம் ஜனவரி முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதியில் 10 இலட்சத்து 16 ஆயிரத்து 256 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். ஆனால் கடந்த வருடம் 7 இலட்சத்து 19 ஆயிரத்து 978 பேரே வருகை தந்துள்ளனர். இதன்படி இவ்வருடம் நிறைவுறும் போது இந்நாட்டுக்கு வருகை தந்த உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என உறுதிபடக் கூற முடியும்.

இவ்வருடம் இலங்கைக்கு வருகை தந்துள்ள உல்லாசப் பயணிகளில் அதிகூடிய எண்ணிக்கையானோர் இந்தியாவில் இருந்தே வந்துள்ளனர். இரண்டாவது அதிகூடிய எண்ணிக்கையை ரஷ்ய உல்லாசப் பயணிகள் பெற்றுள்ளனர்.

இதன்படி, கடந்த ஒன்பது மாத காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து 2,00,310 உல்லாசப் பயணிகளும் ரஷ்யாவில் இருந்து 1,32,300 உல்லாசப் பயணிகளும் இங்கு வந்துள்ளனர்.

இந்நிலையில், இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, இவ்வருடத்தின் முதல் 08 மாதங்களிலும் 1.3 பில்லியன் அமெரிக்க டொலர்களை சுற்றுலாத் துறையின் ஊடாக இந்நாடு வருமானமாகப் பெற்றுக் கொண்டுள்ளது.

இவ்வாறான நிலையில் உல்லாசப் பயணத்துறையை மேலும் மேம்படுத்தும் மற்றொரு வேலைத்திட்டமொன்று பரீட்சார்த்தமாக அறிமுகப்படுத்தப்படுள்ளது.

இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த உல்லாசப் பயணிகள் விசா இன்றி இலங்கைக்கு வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம் எதிர்வரும் 2024 மார்ச் 31 ஆம் தகதி வரை நடைமுறையில் இருக்கும்.

சுற்றுலாக் கைத்தொழில் துறையை மேலும் மேம்படுத்தும் வகையில் சுற்றுலா அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

இது பெரிதும் வரவேற்கப்பட வேண்டிய திட்டம் என்பதுதான் சுற்றுலா கைத்தொழில் துறையினரின் கருத்தாகும். உண்மையில் இத்திட்டம் இந்நாட்டின் இக்கைத்தொழில்துறையை மேலும் மேம்படுத்த வழிவகுக்கும். இதன் பயனாக இத்துறையில் புதிய தொழில்வாய்ப்புக்கள் உருவாதோடு உட்கட்டமைப்பு வசதிகளும் மேலும் வளர்ச்சி அடையும்.

அதேநேரம் இந்நாட்டுக்கு ஏற்கனவே அதிகூடிய உல்லாசப் பயணிகள் வருகை தரும் நாடுகளாக விளங்கும் இந்தியா, ரஷ்யா இருந்து வருகை தரும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இவ்விரு நாடுகளோடு சேர்த்து சீனா, மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய ஐந்து நாடுகளும் உள்வாங்கப்பட்டுள்ளன. அந்நாடுகளில் இருந்தும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

எனவே உல்லாசப் பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த இலவச விஸா திட்டம் இலங்கையின் உல்லாசப் பயணத்துறையை மேலும் மேம்படுத்தி வலுப்படுத்துவதோடு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் பாரிய பங்களிப்பாக அமையும். அதுவே பொருளாதார நிபுணர்களின் கருத்தும் ஆகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT