Friday, March 29, 2024
Home » பிரமிட் : Onmax DT பணிப்பாளர் மூவரின் ரூ 9 கோடி சொத்து முடக்கம்

பிரமிட் : Onmax DT பணிப்பாளர் மூவரின் ரூ 9 கோடி சொத்து முடக்கம்

by Rizwan Segu Mohideen
October 27, 2023 6:39 am 0 comment

சட்ட விரோதமாக பிரமிட் முறை கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் Onmax DT தனியர் நிறுவன பணிப்பாளர் சபை உறுப்பினர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

இச்சபை உறுப்பினர்கள் மூவருக்குச் சொந்தமான ஒன்பது கோடி ரூபா பெறுமதியுடைய மாடி வீடு மற்றும் ஹோட்டல் உள்ளிட்ட சொத்துக்களை விற்பனை செய்தல் மற்றும் கை மாற்றுதல் என்பவற்றுக்கே இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸ் காணி பதிவாளர் அலுவலகத்துக்கு நேற்று இந்த தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

8 காணிகளை தடை செய்து கண்டி மற்றும் குருநாகல் காணி பதிவாளர்களுக்கு மஜிஸ்திரேட் நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். ஒன்மெக்ஸ் தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர்களான அதுல சம்பத் சேம் என்ற பிரசன்ன சதுரங்க சமரகோன் மற்றும் சாரங்க ஜயநாத் ஆகியோருக்குச் சொந்தமான சொத்துக்களே இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் சட்டவிரோதமாக சம்பாதித்துள்ள பணத்தில் இச்சொத்துக்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களம் நிதி முறைகேடு சட்டத்தின் கீழ் முன்னெடுத்து வரும் விசாரணைகளுக்கு இணங்கவே, நீதிமன்றத்திடம் இந்த உத்தரவைக் கோரியுள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் ஒன்மெக்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளரான சம்பத் சந்தருவன் என்பவருக்கு சொந்தமான 63 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை நீதிமன்றம் தடை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

20 காணிளை தடைசெய்து களுத்துறை, ஹம்பாந்தோட்டை, கடவத்தை காணிப் பதிவாளர்களுக்கு நீதவான் இதற்கான உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.

சந்தேகநபருக்கு சொந்தமான மேற்படி சொத்துக்களில், ஒரே தினத்தில் 08 காணிகளை அவரது மனைவிக்கும் மேலும் 12 காணிகளை அவரது நண்பருக்கும் வழங்கியுள்ளதாக குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களம் நீதிமன்றத்திடம் விடயங்களை சமர்ப்பித்திருந்தது. மாத்தறை பிரதேசத்தில் 6 காணிகளும், ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் 2 காணிகளும், களுத்துறை பிரதேசத்தில் 10 காணிகளும், கடவத்தை பிரதேசத்தில் 2 காணிகளும் இவ்வாறு தடை செய்யப்பட்டன.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT