Home » இங்கிலாந்துக்கு எதிரான தீர்க்கமான போட்டியில் இலங்கை இன்று களத்தில்

இங்கிலாந்துக்கு எதிரான தீர்க்கமான போட்டியில் இலங்கை இன்று களத்தில்

by Rizwan Segu Mohideen
October 26, 2023 7:32 am 0 comment

உலகக் கிண்ணத்தில் அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொள்வதற்கு இலங்கை அணி இன்று (26) தீர்க்கமான போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.

பெங்களூர், சின்னசுவாமி அரங்கில் நடைபெறவுள்ள இந்தப் போட்டி உலகக் கிண்ண புள்ளிப் பட்டியலில் கடைசி இடங்களை பிடித்துள்ள அணிகளுக்கு இடையிலான ஆட்டமாக மாறியுள்ளது. இலங்கை மற்றும் இங்கிலாந்து இரு அணிகளும் 4 போட்டிகளில் ஒன்றில் மாத்திரம் வென்று தலா இரண்டு புள்ளிகளுடன் முறையே 8 மற்றும் 9 ஆவது இடங்களில் உள்ளன.

எனவே, இந்த இரு அணிகளும் இன்றைய போட்டியில் வெல்வது கட்டாயம் என்ற நிலையிலேயே களமிங்குகின்றன. உபாதைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கை அணியில் வேகப்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன நீக்கப்பட்ட நிலையில் அவரது இடத்திற்கு அனுபவ சகலதுறை வீரரான அஞ்சலோ மத்தியூஸை இணைப்பதற்கு ஐ.சி.சி ஒப்புதல் அளித்துள்ளது.

இலங்கையின் மத்திய வரிசை துடுப்பாட்டத்தை பலப்படுத்தும் வகையிலேயே அவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். எனவே, அவர் இன்றைய போட்டியில் சாமிக்க கருணாரத்னவுக்கு பதில் களமிறங்க வாய்ப்பு உள்ளது.

இலங்கை ஒருநாள் அணியில் அனுபவம் மிக்க வீரராக 36 வயதான மத்தியூஸ் இருந்தபோதும் அவர் கடந்த இரண்டரை ஆண்டுகளில் மூன்றே மூன்று ஒருநாள் சர்வதேச போட்டிகளிலேயே ஆடியுள்ளார். அதேபோன்று பின் தொடை பகுதியில் உபாதைக்கு உள்ளான சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் களமிறங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் அணிக்கு திரும்புவது ஆறுதலான செய்தியாகும்.

நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் ஆடிய துஷான் ஹேமன்தவுக்கு பதில் துனித் வெல்லாளகே இன்றைய போட்டியில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அணித்தலைவர் குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம மற்றும் ஆரம்ப வரிசையில் சோபித்து வரும் நிலையில் அஞ்சலோ மத்தியூஸின் வருகை மத்திய வரிசையை பலப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இம்முறை உலகக் கிண்ணத்தில் நடப்புச் சம்பியனாகக் களமிறங்கிய இங்கிலாந்து அணியும் ஆதிக்கம் செலுத்தத் தவறி வருகிறது. இந்நிலையில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டொப்லி உபாதை காரணமாக உலகக் கிண்ணத்தில் இருந்து விலகி இருப்பது அந்த அணிக்கு பின்னடைவாகும்.

எனினும் உலகக் கிண்ணத்தில் மீண்டெழுவதற்கான போட்டியாக இன்றைய ஆட்டம் இருப்பதால் இங்கிலாந்து அணி அதனை இலகுவில் விட்டுக்கொடுக்காது.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் உலகக் கிண்ணத்தில் இதுவரை 11 போட்டிகளில் ஆடி இருப்பதோடு இதில் இங்கிலாந்து 6–5 என்ற வெற்றிகளால் முன்னிலையில் உள்ளது. எனினும் இரு அணிகளும் உலகக் கிண்ணத்தில் கடைசியாக சந்தித்த நான்கு போட்டிகளிலும் இலங்கை அணியே வெற்றியீட்டியுள்ளது. இதில் 2011 உலகக் கிண்ணத்தின் காலிறுதிப் போட்டியும் அடங்கும்.

இன்றைய போட்டி நடைபெறும் எம். சின்னசுவாமி அரங்கு அதிக ஓட்டங்கள் பெறப்படுவதில் பிரபலமானதாகும். கடந்த வாரம் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இங்கு ஆடியபோது 95.3 ஓவர்களில் மொத்தம் 672 ஓட்டங்கள் பெறப்பட்டன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT