Friday, March 29, 2024
Home » கர்நாடகாவில் லொறி மீது கார் மோதி விபத்து; ஒரு குழந்தை உட்பட13 பேர் பலி

கர்நாடகாவில் லொறி மீது கார் மோதி விபத்து; ஒரு குழந்தை உட்பட13 பேர் பலி

- பனிமூட்டத்தால் விபத்து நிகழ்ந்ததாக முதல்கட்ட தகவல்

by Prashahini
October 26, 2023 2:21 pm 0 comment

கர்நாடகா மாநிலம், சிக்கபல்லப்பூர் பகுதியில், இன்று (26) அதிகாலை லொறி – கார் மோதிய விபத்தில் ஒரு குழந்தை உட்பட13 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கர்நாடகா மாநிலம், சிக்கபல்லப்பூர் பகுதியில், நின்று கொண்டிருந்த லொறி மீது, டாடா சுமோ மோதிய விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்திருக்கின்றனர். தேசிய நெடுஞ்சாலை 44 இல் உள்ள சிக்கபல்லப்பூர் போக்குவரத்து பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

பனிமூட்டத்தால் இந்த விபத்து நிகழ்ந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:

ஆந்திர மாநிலத்தில் இருந்து பெங்களூருக்கு ஒரு குழந்தை மற்றும் 4 பெண்கள் உட்பட 14 பேர் காரில் சென்றுள்ளனர். பெங்களூரை சேர்ந்த இவர்கள் தசரா விடுமுறையில் தங்களது சொந்த ஊருக்கு சென்று திரும்பி கொண்டிருந்தனர். கர்நாடகா மாநிலம் சிக்கபல்லபுரம் மாவட்டத்தில் பகேபள்ளி பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் பனிமூட்டம் அதிகமாக இருந்துள்ளது. இதனால் கார் சாரதிக்கு சாலை சரியாக தெரியவில்லை. அப்போது சாலையின் ஓரம் சிமெண்ட் ஏற்றி வந்த லொறி ஒன்று நின்று கொண்டிருந்தது. இதன் மீது கார் வேகமாக பயங்கர சத்தத்துடன் மோதியது.

இந்த நிலையில், இந்த விபத்து குறித்த தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது நடத்தப்பட்ட சோதனையில், டாடா சுமோ காரில் பயணித்தவர்கள் அனைவரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது. இறந்தவர்களில் பலர் இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளனர்.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே குழந்தை உட்பட 5 பேர் பலியாகினர். மேலும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 7 பேர் இறந்தனர். இந்த கோரமான விபத்தில் மொத்தம் 13 பேர் பலியாகியுள்ளனர். ஒருவருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT