Tuesday, March 19, 2024
Home » ஜன.22 இல் அயோத்தி இராமர் கோயில் சிலை பிரதிஷ்டை; பிரதமருக்கு அழைப்பு

ஜன.22 இல் அயோத்தி இராமர் கோயில் சிலை பிரதிஷ்டை; பிரதமருக்கு அழைப்பு

- 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்கவும் அறக்கட்டளை திட்டம்

by Prashahini
October 26, 2023 11:58 am 0 comment

2024 ஜனவரி 22 ஆம் திகதி அயோத்தியில் இராமர் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளதோடு, அயோத்தி இராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழாவிற்கு ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக ஸ்ரீராமர் கோயில் தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டு, அதை உ.பி. அரசு மேற்பார்வையிடுகிறது. இராமர் கோயிலுக்கு கடந்த 2020 ஓகஸ்டில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். கட்டுமானப் பணிகளை இன்னும் இரண்டு மாதங்களில் முடித்து அடுத்த வருடம் ஜனவரி 22 ஆம் திகதி கோயில் திறப்பு விழா நடைபெற உள்ளது. அன்றைய தினம் கோயிலில் இராமர் சிலை நிறுவப்படுகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளவிருப்பதால் அதற்கான பணிகளை உத்தரபிரதேச மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் நேரடியாக கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கான அழைப்பிதழ் ஸ்ரீராமர் கோயில் தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை சார்பில் பிரதமர் நரேந்திர மோடியிடம் அளிக்கப்பட்டது.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ்(ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது: “ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் அதிகாரிகள் என்னை சந்திக்க எனது இல்லத்திற்கு வந்திருந்தனர். இராமர் கோவில் சிலை பிரதிஷ்டை விழாவையொட்டி, அயோத்திக்கு வருமாறு எனக்கு அழைப்பு விடுத்தனர். நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். இது என் வாழ்நாளில் எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுக்கு நான் சாட்சியாக இருப்பேன்.” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கோயில் திறப்பு விழாவில் 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. இதுதவிர, 10,000 சிறப்பு விருந்தினர்களும் பங்கேற்பார்கள் என்றும் அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT