தாயும் மகனும் அடித்துக் கொலை | தினகரன்

தாயும் மகனும் அடித்துக் கொலை

ஏறாவூர் சவுக்கடியில் கோரம்

மட்டக்களப்பு – ஏறாவூர் – சவுக்கடி பிரதேசத்தில் கட்டிலில் படுத்துறங்கிய நிலையில், இளம் குடும்ப பெண்ணும் அவரது மகனும் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

தன்னாமுனை முருகன் கோயில் வீதியைச் சேர்ந்த 26 வயதுடைய பீதாம்பரம் மதுவந்தி மற்றும் அவரது மகன் 11 வயதுடைய மதுசன் ஆகியோரே கொல்லப்பட்டவர்களென அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

வீட்டின் கூரை வழியாக கயிற்றைக் கட்டி இறங்கிய நபர்கள், இவர்களை தடிகளால் அடித்துக் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரவது கணவர் துபாய் நாட்டில் வேலைவாய்ப்பிற்காகச் சென்று ஆறு வருடங்களாகின்றன. அடுத்த மாதம் நாடு திரும்புவதாகவும் கணவர் அறிவித்துள்ளார். இந்நிலையில் தீபாவளி கொண்டாடுவதற்காக கடந்த (17) செவ்வாய்க்கிழமையன்று இக்குடும்பப் பெண், நகைகளை அடகு வைத்து சுமார் அறுபதாயிரம் ரூபா பணம் பெற்றுவந்துள்ளார். அத்துடன் அவரது வீட்டில் 30 பவுண்களுக்கு மேற்பட்ட நகைகளும் இருந்துள்ளன. எனினும் இவ்வீட்டில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து உடனடியாகத் தெரியவரவில்லை.

ஏறாவூர்ப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஏறாவூர் குறூப் நிருபர்

 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...