Tuesday, April 16, 2024
Home » விவசாய மற்றும் தொழில்நுட்பத் துறைகளின் புரட்சிகர மாற்றத்திற்காக பல்வேறு புதிய திட்டங்கள்

விவசாய மற்றும் தொழில்நுட்பத் துறைகளின் புரட்சிகர மாற்றத்திற்காக பல்வேறு புதிய திட்டங்கள்

– மேலதிக நிபுணத்துவத்தை பெற அமைச்சுடன் இணைந்த புத்தாக்க முயற்சிகள் ஊக்குவிக்கப்படும்

by Rizwan Segu Mohideen
October 26, 2023 9:26 am 0 comment

–  117 ஆவது இலங்கை பொறியிலாளர்கள் நிறுவகத்தின் வருடாந்த அமர்வில் ஜனாதிபதி தெரிவிப்பு

விவசாய மற்றும் தொழில்நுட்பத் துறைகளின் புரட்சிகர மாற்றத்திற்கான பல்வேறு புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் போது, பொறியியலாளர்களின் பங்களிப்பு மிக மிக்கியமானது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளின் விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சுக்களின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாகவும் மேலதிக நிபுணத்துவத் தெரிவுகளைப் பெற்றுக்கொள்வதற்கான இயலுமை தொடர்பில் தேடியறிவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (25) நடைபெற்ற 117 ஆவது இலங்கை பொறியிலாளர்கள் நிறுவனத்தின் வருடாந்த அமர்விலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொறியியலாளர் நாட்டுக்கு ஆற்றும் சேவையை கௌரவிக்கும் வகையில், வாழ்நாளில் ஒரு முறை மாத்திரம் வழங்கப்படும் “விஷ்வலிங்கம்” விருது பொறியியலாளர் கே.எல்.எஸ்.சஹாபந்துவிற்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது.

இலங்கை பொறியியல் சபையின் தலைவர் திலக் டி சில்வாவினால் “Hand book for Electricians” என்ற மும்மொழிகளிலும் பிரசுரிக்கப்பட்ட நூல் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதோடு, இலங்கை பொறியியல் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி கமல் லக்சிறியினால் ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசொன்றும் வழங்கப்பட்டது.

நிகழ்வில் மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

”தொழில்நுட்ப புத்தாக்க முயற்சிகள் மற்றும் விவசாய நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டத்துடன் இலங்கையை புதிய பொருளாதார முறைமையை நோக்கி இட்டுச் செல்வதற்கு ஒன்றுபடுமாறும் பொறியியல் நிறுவனங்களிடம் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தார்.

போட்டித்தன்மை, டிஜிட்டல் மாற்றம் மற்றும் பசுமை பொருளாதாரம் ஆகிய துறைகளில் பொறியியலாளர்கள் சிறப்பான பணியை ஆற்றி வருவதாகவும், அந்த துறைகளைப் பலப்படுத்தினால் நாட்டில் துரித பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்த முடியுமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாட்டின் பல்வேறு துறைகளிலும் பொறியியலாளர்களின் பங்களிப்பை மேம்படுத்த எதிர்பார்ப்பதாகவும், அதனை உரிய வகையில் பயன்படுத்திக் கொள்வதற்கான திட்டமிடலுடன் செயற்படுவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

மகாவலி வலயம் மற்றும் தோட்டப் பகுதிகளில் பயன்படுத்தாத 7 – 10 இலட்சம் ஏக்கர் வரையிலான காணிகள் உள்ளதாகவும், விவசாய நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டத்தின் போது அவற்றைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அதேபோல் பல்வேறுபட்ட விவசாய ஆய்வு நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து விவசாய தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் என்ற நிறுவன கட்டமைப்பின் கீழ் கொண்டுவரவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தனியார் துறையினரின் பங்களிப்பையும் பெற்றுக்கொண்டு விவசாயஆய்வுப் பணிகளை முன்னெடுக்கும் பட்சத்தில் விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளை வலுவாக முன்னெடுக்க முடியும் என எதிபார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்தோடு 1970 ஆம் ஆண்டு முதல் இரு துறைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் விவசாய மற்றும் பெருந்தோட்ட துறைகளை விரைவில் ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

கடன் நீடிப்பு மற்றும் நிலையான பொருளாதாரத்தை கட்டமைத்தல் உள்ளிட்ட இலக்குகளை அடைய அறிவுபூர்வமான மற்றும் வலுவான பிரவேசம் அவசியம் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்துரைத்தார்.

இந்நாட்டு பொருளாதாரத்தின் மைல்கல்லான பசுமை ஹைட்ரஜன் ஏற்றுமதிக்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் தேடியறிந்து, அதனை செயற்படுத்தத் தேவையான தொழில்நுட்பத்தை உருவாக்கும் வல்லமை பொறியலாளர்கள் வசமுள்ளதெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

குறுகிய காலத்தில் நிறைவு செய்யப்பட்ட கண்டி வீதி நிர்மாண பணிகள், மகாவலி வேலைத்திட்டங்கள் இந்நாட்டு பொறியியல் தொழில்நுட்பத்தின் உயர் தரத்தை உலகிற்கு காண்பிக்கும் வகையில் அமைந்திருப்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு பொறியியலாளர்கள் வழங்கிவரும் பங்களிப்புக்கும் நன்றி தெரிவித்தார்.

பொறியியல் தொழில்நுட்பத்தின் ஒத்துழைப்பு இன்றி நாட்டை முன்னேற்றுவது சவாலானது என்றும், திறன்மிக்க பொறியியலாளர்களை உருவாக்கும் திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும், தேவைப்படும் பட்சத்தில் வெளிநாட்டு பொறியியலாளர்களின் உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இந்த தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு அவசியமான மனித வள பற்றாக்குறைக்கு தீர்வு தேடும் போது, தொழில்நுட்ப கல்வி மற்றும் பொறியியல் தொழில் திறன்களின் முக்கியத்தையும் வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் அதற்கான புதிய திட்டங்களைப் பரிந்துரைக்கும் என்றும் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.எல். பீரிஸ், இலங்கை பொறியியல் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி கமல் லக்சிறி, பேராசிரியர் மைத்ரி பனாகொட உள்ளிட்டவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT