Home » நாட்டின் சுற்றுலாத்துறையின் ஊக்குவிப்பு வேலைத்திட்டங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம்

நாட்டின் சுற்றுலாத்துறையின் ஊக்குவிப்பு வேலைத்திட்டங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம்

- இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் 12 முடிவுகள்

by Prashahini
October 25, 2023 12:36 pm 0 comment

– மோட்டார் வாகன சட்டத்தைத் திருத்தம் செய்தல்
– மிதக்கும் சூரியமின்னுற்பத்தி நிலையத்தை அமைத்தல்

சுற்றுலாத்துறை ஊக்குவிப்புக்காக குறுகியகால மூலோபாயங்களை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று முன்தினம் (23) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 12 தீர்மானங்களுக்கு இவ்வாறு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்று நிலைமையால் இழக்கப்பட்ட தமது சுற்றுலாத்துறை சந்தைப்பங்குகளை மீண்டும் உரித்தாக்கிக் கொள்வதற்காக பல ஆசிய சுற்றுலாப் பயண முடிவிடங்கள் தற்போது கடுமையான போட்டிக்குள் இயங்குகின்றதுடன், பல நாடுகள் சுற்றுலாப் பயணிகளிடம் கட்டணம் அறவிடாமல் இலவசமாக வீசா வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதனால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொவிட் தொற்று, அத்துடன் பின்னர் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடியால் பின்னடைவைச் சந்தித்துள்ள எமது நாட்டின் சுற்றுலாத்துறையின் மறுமலர்ச்சிக்காக புதிய சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு வேலைத்திட்டங்கள் சிலவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 03 வருடங்களில் இலங்கைக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 05 மில்லியன்களாக அதிகரிக்கின்ற இலக்குடன் கூடியதாக பிரதமர், சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அவர்களும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கமைய கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள படிமுறைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

1. 2024.03.31 ஆம் திகதி வரை சீனா, இந்தியா, ரஷ்யா, தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து வருகை தருகின்ற சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச சுற்றுலா வீசா வழங்குவதற்கான வேலைத்திட்டத்தின் முன்னோடி செயற்றிட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்தல்.

2. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு உலக மரபுரிமை மற்றும் வரலாற்று மையங்களில் நெரிசலின்றி பிரவேசிப்பதற்காக கட்டணம் அறவிடுகின்ற அனைத்து இடங்களுக்கும் ஒரே தடவையில் கட்டணம் செலுத்துகின்ற பக்கேஜ் முறையிலான நுழைவுச்சீட்டை விமான நிலையத்தில் அல்லது இணையவழி ஊடாக கொள்வனவு செய்வதற்கான வசதிகளை ஏற்பாடு செய்தல்.

3. இலங்கை புகையிரத சேவையின் சுற்றுலாப் பயணிகள் புகையிரதக் கூடத்திற்கான தேவையான பிரயாணச் சீட்டுக்களை இணையவழி ஊடாக அல்லது ஒரே தடவை செலுத்திப் பெற்றுக்கொள்ளக்கூடிய பொது பிரயாணச் சீட்டை விமான நிலையத்தில் கொள்வனவு செய்வதற்கான வசதிகளை ஏற்பாடு செய்தல்.

2. சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்தும் நிதித்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 165 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவியுடன் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கு சலுகை வட்டி வீதத்தின் கீழ் முதலீட்டு மற்றும் நடவடிக்கை மூலதனத்தை வழங்கவதற்காக அரசு “சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கான கடன் முன்மொழிவுத் திட்டம்” நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு வங்கிகளால் நிதி வழங்குவதற்கு முன்னுரிமையளிப்பதன் மூலம் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்கள் எதிர்கொள்ள நேரிட்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வாக தேசிய கடன் பாதுகாப்பு நிறுவனத்தைத் தாபிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமது வியாபாரங்களுக்கு நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு தொடர்ந்தும் சிரமங்களை எதிர்கொள்கின்ற தொழில் முயற்சியாளர்களுக்காக ‘சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்துவதற்கான நிதித்திட்டம்’ எனும் புதிய கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அரசு திட்டமிட்டுள்ளதுடன், அதற்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய, குறித்த கடன்தொகையைப் பெற்றுக் கொள்வதற்கும், அதற்குரிய ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3. கல்வி அமைச்சு மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் பீஸ் கோர்ப்ஸ் (Pease Corps) நிறுவனத்திற்குமிடையே தற்போதுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நீடித்தல்

ஐக்கிய அமெரிக்காவின் காங்கிரசின் அனுசரணையுடன் இயங்குகின்ற பீஸ் கோர்ப்ஸ் (Pease Corps) நிறுவனத்தின் வேலைத்திட்டங்கள் 1962-1964, 1983-1998, 2004-2008 காலப்பகுதியில் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. 2018 ஆம் ஆண்டில் கல்வி அமைச்சு மற்றும் பீஸ் கோர்ப்ஸ் நிறுவனத்திற்குமிடையில் கையொப்பமிடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கமைய, ஐந்து (05) வருட காலத்திற்கு தொண்டர்களை வழங்குவதன் மூலம், எமது நாட்டில் ஆங்கில மொழிக்கல்வியை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இருதரப்பினர்களிடையே உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.

ஆனாலும், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் மற்றும் கொவிட் தொற்றுக் காரணமாக திட்டமிட்டவாறு எதிர்பார்க்கப்பட்ட காலப்பகுதியில் குறித்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பீஸ் கோர்ப்ஸ் நிறுவனத்திற்கு இயலாமல் போயுள்ளது. இவ்வேலைத்திட்டத்தை மீண்டும் எமது நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்காக பீஸ் கோர்ப்ஸ் நிறுவனம் உடன்பாடு தெரிவித்துள்ளமையால், அதற்காக இருதரப்பினர்களும் கையொப்பமிட்டுள்ள ஒப்பந்தம் 2023 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் தொடக்கம் மேலும் 05 ஆண்டுகளுக்கு நீடிப்பதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4. இலங்கை தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம் மற்றும் நெதர்லாந்து தேசிய சுவடிகள் காப்பகத்திற்கும் இடையில் ஒப்பந்தமொன்றை மேற்கொள்ளல்

ஆசிய வரலாறு மற்றும் உலக வரலாறு எனும் இரண்டு பிரிவுகளிலும் கற்கைகளுக்கு மகவும் முக்கியமானதென அங்கீகரித்து யுனெஸ்கோ நிறுவனம் உலக ஞாபகார்த்தம் பற்றிய ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள, ஒல்லாந்த கீழைத்தேய வர்த்தகக் கம்பனியால் தயாரிக்கப்பட்டுள்ள கிட்டத்தட்ட 7,500 பகுதிகளைக் கொண்ட 310 மீற்றர்கள் நீளம் கொண்ட சுவடிகள் இலங்கை தேசிய சுவடிகள் காப்பகத்தின் பொறுப்பில் உள்ளது. 2001 தொடக்கம் 2013 வரையான காலப்பகுதியில் உருவாக்கிக் கொண்டுள்ள 04 ஒருங்கிணைந்த ஒப்பந்தங்களின் கீழ் 5,066 பகுதிகளின் நுண்படச்சுருள்களின் (Microfilming) 1,701 எதிர்ப்படி நகல்கள் (Negative Copy) நெதர்லாந்திற்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், அவற்றிலிருந்து உருவாக்கப்பட்ட நுண்படச்சுருள்கள் இலங்கை தேசிய சுவடிகள் காப்பகத்தால் பாதுகாக்கப்பட்டுள்ளது.

இவ் ஒத்துழைப்புக்களைத் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துவதற்காக 2024 தொடக்கம் 2028 வரைக்கும் 05 வருட காலத்திற்கு சுவடிகள் தொடர்பான ஒத்துழைப்புக்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கை தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம் மற்றும் நெதர்லாந்து தேசிய சுவடிகள் காப்பகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

5. புலம்பெயர் கொள்கை அபிவிருத்தி சர்வதேச நிலையம் மற்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடல்

புலம்பெயர் மக்களுக்கு, மீளவும் எமது நாட்டுக்கு வருகை தருகின்ற புலம்பெயர் மக்களுக்கு மற்றும் புலம்பெயர்வதற்கு எதிர்பார்க்கின்றவர்களுக்கு வெளிநாடுகளில் பயணிக்கும் போது, தொழில் புரியும் போது மற்றும் வசிக்கும் போது எதிர்கொள்ள நேரிடுகின்ற இடர்கள் மற்றும் சவால்களைக் குறைத்துக் கொள்வதற்கு புரிதலுடன் தீர்மானமெடுப்பதற்கு இயலுமை வழங்குவதற்காக, போதியளவான, காலத்தோடு தழுவியதாகவும் மற்றும் நம்பகமான தகவல்கள் மற்றும் வழிகாட்டல்களை வழங்குவதற்காக கிழக்கு மாகாணத்தில் புலம்பெயர் வளங்கள் நிலையத்தை நிறுவுவதற்காக திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக நியூசிலாந்து அரசு தமது உடன்பாட்டை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நியூசிலாந்தின் வியாபாரம், புத்தாக்கம் மற்றும் தொழில் அமைச்சின் மூலம் புலம்பெயர் கொள்கை அபிவிருத்தி சர்வதேச நிலையத்தின் மூலம் முன்மொழியப்பட்டுள்ள செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 350,000 நியூசிலாந்து டொலர்களை வழங்குவதற்கு அந்நாட்டு அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது. முன்மொழியப்பட்டுள்ள நிலையத்தை நிறுவுவதற்காக நியூசிலாந்தின் புலம்பெயர் கொள்கை அபிவிருத்தி சர்வதேச நிலையம் மற்றும் எமது நாட்டின் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்காக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

6. சுயாதீன பாராளுமன்ற தரநியமங்கள் அதிகாரசபையை நிறுவுதல்

பாராளுமன்ற உறுப்பினர்களின் வகை கூறல், நம்பகத்தன்மை, தெளிவு மற்றும் தொழில்வாண்மை தொடர்பான உறுதிப்படுத்தல் சட்டவாக்கத்தின் வினைத்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் நீதி தொடர்பாக பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரித்தல் முக்கியமான காரணியாக அமையும். அதனால், பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தமது அதிகாரங்கள், சிறப்புரிமைகள், பணிகள் மற்றும் கடமைகள் நம்பகத்தன்மையுடனும் மற்றும் நேர்மையுடனும் செயற்பட வேண்டியுள்ளது.

உலகில் பல நாடுகளிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தை நெறிக்கோவையொன்றை நடைமுறைப்படுத்துவதற்காகவும், குறித்த செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்காகவும் பொறிமுறையொன்று காணப்படுவதைக் கருத்தில் கொண்டு, எமது நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தை நெறிக்கோவையைத் தயாரிப்பதற்காகவும், அதுதொடர்பாக விசாரணை செய்வதற்காகவும் சுயாதீன நிறுவனமொன்றைத் தாபிக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த பணிகளுக்காக அடிப்படையாகத் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலம் தொடர்பாக பாராளுமன்ற சபாநாயகம் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்கும், பின்னர் குறித்த கருத்துக்களைக் கவனத்தில் கொண்டு சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக பிரதமர் மற்றும் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

7. மோட்டார் வாகன சட்டத்தைத் திருத்தம் செய்தல்

இலத்திரனியல் மோட்டார் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல் தொடர்பான விடயங்களை ஆராய்ந்து அமைச்சரவைக்கு பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக பிரதமரின் செயலாளரின் தலைமையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக 2023.06.05 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான இடைக்கால ஏற்பாடுகளை தயாரிப்பதற்காகவும் மற்றும் விளைவாய்ந்த நடவடிக்கைகளுக்காக மோட்டார் வாகனச் சட்டத்தைப் பொருத்தமான வகையில் திருத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த பணிகளுக்காக சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக பதில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. 2006 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க இலங்கைப் போக்குவரத்து சபை சட்டத்தைத் திருத்தம் செய்தல்

இலங்கைப் போக்குவரத்து சபைக்குக் கிடைக்க வேண்டிய வருமானத்தை இழக்கச் செய்து பயணிகள் மற்றும் வேறு தரப்பினர்கள் செய்கின்ற தவறுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக போதியளவு சட்ட ஏற்பாடுகளை வகுக்க வேண்டிய தேவை மற்றும் 2006 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க இலங்கைப் போக்குவரத்து சபை சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் இடம்பெற்றுள்ள புதிய மீள்கட்டமைப்புக்கள் மற்றும் போக்குகளைக் கருத்தில் கொண்டு குறித்த சட்டத்தின் ஒருசில ஏற்பாடுகளை திருத்தம் செய்ய வேண்டிய தேவைகள் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, 2005 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க இலங்கைப் போக்குவரத்து சபை சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக பதில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. அற்றோணித்தத்துவப் பத்திரக் கட்டளைச் சட்டத்திற்கான திருத்தம்

அற்றோணித் தத்துவதாரர்களால் காணிகள் தொடர்பாக மேற்கொள்ளப்படுகின்ற மோசடிச் செயற்பாடுகளைத் தடுக்கும் நோக்கில், 2022 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க அற்றோணித்தத்துவ சட்டத்தின் மூலம் அற்றோணித்தத்துவப் பத்திரக் கட்டளைச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த திருத்தங்கள் வலுவாக்கம் செய்யப்பட்ட பின்னர், குறிப்பாக வெளிநாட்டு அற்றோணித்தத்துவ பத்திரம், அற்றோணித்தத்துவப் பத்திரத்தை செல்லுபடியற்றதாக்கல் மற்றும் இரத்துச் செய்தல் மற்றும் ஏற்புடைய திருத்தங்களை வலுவாக்கம் செய்வதற்கு முன்னர் தயாரிக்கப்பட்டுள்ள அற்றோணித்தத்துவப் பத்திரத்தைப் பதிவு செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த காலப்பகுதி போன்ற விடயங்கள் தொடர்பாக பல சட்டச் சிக்கல்கள் தோன்றியுள்ளன.

அதனால், தொடர்ந்தும் அற்றோணித்தத்துவப் பத்திரக் கட்டளைச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்காக 2023.05.08 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த அங்கீகாரத்தின் பிரகாரம் சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள அற்றோணித் தத்துவம் (திருத்தச்) சட்டமூலத்திங்காக சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது.

அதற்கமைய, குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் ; நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. காலத்திற்குப் பொருத்தமான வகையில் 1954 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க கடை காரியாலய ஊழியர்கள் தொடர்பான (ஊழியர் மற்றும் வேதனங்கள் முறைப்படுத்தல்) சட்டத்தைத் திருத்தம் செய்தல்

தகவல் தொழிநுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற நிறுவனங்கள், அறிவுச் செயன்முறையை வெளியிலிருந்து வழங்கும் நிறுவனங்கள், வியாபாரச் செயன்முறையை வெளியிலிருந்து நிறுவனங்கள் மற்றும் வேறு நாடுகளில் அமைந்துள்ள வியாபார நிறுவனங்களுக்கான கணக்கு, நிர்வாகம் மற்றும் தொழிநுட்ப நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற அலுவலகங்களில் பணிபுரிகின்ற பெண்களுக்கு இரவு வேளைகளில் பணியாற்றுவதற்கு இயலுமை கிட்டும் வகையில் 1954 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க கடை காரியாலய ஊழியர்கள் தொடர்பான (ஊழியர் மற்றும் வேதனங்கள் முறைப்படுத்தல்) சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக 2023.08.08 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள கடை காரியாலய ஊழியர்கள் தொடர்பான (ஊழியர் மற்றும் வேதனங்கள் முறைப்படுத்தல்) சட்டமூலத்திற்காக சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. மீன்பிடித்துறையை மேம்படுத்துவதற்காக ஜப்பான் அரசின் நிதிவழங்கல்

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மீனவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக கடல் உற்பத்திகளுக்கான உயர்ந்த பெறுமதி சேர்க்கையை உறுதிப்படுத்துவதற்காக குளிரூட்டி வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கும், நவீன இலத்திரனியல் உபகரணங்கள் மூலம் மீன்பிடித்துறையை வலுப்படுத்துவதற்கு ஜப்பான் அரசின் பொருளாதார, சமூக அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் 200 மில்லியன் ஜப்பான் ஜென் (கிட்டத்தட்ட 435 மில்லியன் ரூபாய்கள்) நிதி வழங்கலைப் பெற்றுத்தருவதற்கு ஜப்பான் அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது.

குறித்த நிதி வழங்கலின் கீழ் கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களத்திற்கு ஐஸ் உற்பத்தி இயந்திரம், இலங்கை மீன்பிடித் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்திற்கு டிஜிட்டல் தராசு, தேசிய நீரியல்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு மீன்பிடி வலைகள், இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்திற்கு முன் தயாரிக்கப்பட்ட குளிரூட்டி, அதிகுளிரூட்டி மற்றும் அதிகுளிரூட்டியுடன் கூடிய ட்ரக் வண்டி போன்றவற்றை விநியோகிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கமைய, குறித்த நிதி வழங்கலைப் பெற்றுக் கொள்வதற்கும், அதற்குரிய ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. சமனல வாவி நீர்த்தேக்கத்தின் மேற்பரப்பின் மீது மிதக்கும் சூரியமின்னுற்பத்தி நிலையத்தை அமைத்தல்

மிதக்கும் சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதன் மூலம் நீர்த்தேக்கத்தின் மேற்பரப்பில் சூரிய மின்னுற்பத்தி மேற்கொள்ளல், மட்டுப்படுத்தப்பட்ட இடப்பரப்பளவைக் கொண்ட நாடுகளுக்கு மிகவும் பொருத்தமான மாற்று வழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கை மின்சார சபை, இலங்கை மகாவலி அதிகாரசபையின் கட்டுப்பாட்டின் கீழுள்ள நீர்த்தேக்கங்களில் மேற்பரப்பின் மீது சூரிய மின்னுற்பத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சிறந்த ஆற்றல் வளம் காணப்படுகின்றமை அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், இலங்கை மின்சார சபையின் கீழுள்ள சமனல வாவி நீர்த்தேக்கத்தில் அண்ணளவாக 100 ஹெக்ரயார் நீர் மேற்பரப்பின் மீது 150-200 மெகாவாற்று கொள்ளவு கொண்ட மிதக்கும் சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான இயலுமை இருக்கின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, உட்கட்டமைப்பு வசதிகள் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக ஏற்புடைய தேசிய பெறுகை வழிகாட்டல்களைப் பின்பற்றி ஆர்வங் காண்டுகின்ற கருத்திட்ட முன்மொழிவாளர்களுக்கு முன்மொழியப்பட்டுள்ள சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கு முன்மொழிவுகளை கோருவதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT