சக்க போடு போடு ராஜா (TRAILER) | தினகரன்

சக்க போடு போடு ராஜா (TRAILER)

சந்தானம், வைபவி நடிக்க சேதுராமன் இயக்கும் திரைப்படம், ’சக்க போடு போடு ராஜா.’ வி.டி.வி கணேஷ் இந்தப் படத்தைத் தயாரிக்க முதல் முறையாக சிம்பு இசையமைத்திருக்கிறார்.  இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகை வைபவி மற்றும் நடிகர் ஆர்யா, இயக்குநர் ராஜேஷ் மற்றும் நகைச்சுவை நடிகர் மயில்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முழுவதையும் சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆடம்ஸ் தொகுத்து வழங்கினார். ஒவ்வொரு விருந்தினரையும் மேடைக்கு அழைக்கும் போது தனது கலாய்ப்பான வரவேற்பில் மேடைக்கு அழைத்தார் ஆடம்ஸ். ஆடம்ஸ் மேடையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது கீழேயிருந்தே நடிகர் சந்தானம் தனது ஃபேவரைட் கலாய்யில்ஆடம்ஸை வருத்து எடுத்தார். 

 சந்தானத்துக்கு 'சிவா மனசில சக்தி' படத்தின்  மூலமாக நகைச்சுவை நடிகர் என்றொரு அங்கீகாரத்தை கொடுத்த இயக்குநர் ராஜேஷ் பேசும் போது, 'இந்தப் படத்தின் ட்ரெய்லர் பார்க்கும் போது ஹாப்பியாகயிருக்கிறது. ரொம்ப நல்லா வந்திருக்கு. சந்தனாத்தை காமெடியனாக வைத்து படமெடுத்திருக்கிறேன். அடுத்து ஹீரோவாக வைத்து தேனாண்டாள் பிலிம்ஸூக்கு படம் எடுக்கின்றேன். என் அடுத்தப் படத்தின் ஹீரோ சந்தானம்தான். சந்தானம் வாழ்க்கையில் இருக்கும் சூழ்நிலை எல்லாம் பார்க்கும் போது இன்னும் இரண்டு பைட் சீக்வென்ஸ் படத்தில் சேர்க்கணும்னு நினைக்கிறேன். நான் ட்ரெய்லர் பார்த்துவிட்டுதான் சொன்னேன். வேற எதுவும் சொல்லவில்லை. 

சந்தானம்

ஒரு பெரிய மாற்றம் நடந்திருக்கு. சந்தானத்தின் தன்னபிக்கை மட்டும்தான் அவரை பெரிய ஹீரோவாக மாத்தியிருக்கு. சந்தானம் அவரை நம்பினார். அவருடைய ரசிகர்களை நம்பினார். அதனால்தான் இவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கு. அவருடைய முதல் படத்திலிருந்து சந்தானத்தின் நண்பனாய் டிராவல் பண்ணியிருக்கேன். இந்தப் படத்தின் பாடல், சில சீன்ஸ் எல்லாம் பார்த்தேன். ரொம்ப நன்றாக வந்திருக்கு. ஒளிப்பதிவு சூப்பராக வந்திருக்கு. சிம்பு நல்லா மியூசிக் கொடுத்திருக்கிறார். சந்தானத்தின் நட்புக்காக இந்தப் படத்தில் இசையமைத்திருக்கிறார் சிம்பு. இவ்வளவு பெரிய ஹீரோ இசையமைத்திருப்பது பெரிய விஷயமில்லை. 

அதே போல்தான் தயாரிப்பாளர் விடிவி கணேஷ் இந்தப் படத்துக்காக ரொம்ப மெனக்கெட்டு இருக்கிறார். விஷுவலாக இந்தப் படம் ரொம்ப கிளாஸா இருக்கணும்கிறதுக்கான நிறைய மெனக்கெட்டு இருக்கிறார். இந்தப் படத்துக்கு அப்புறம் சந்தானம் ஒரு ஹீரோவா மிகப் பெரிய இடத்துக்கு வருவார்'' என்று முடித்து கொண்டார். 

ராஜேஷை தொடர்ந்து பேசிய இயக்குநர் சேதுராமன், ''என் வாழ்க்கையில் மிகப் பெரிய நாள் இது. என் நண்பன் சந்தானத்துக்கு நன்றி தெரிவித்து கொள்கிற நாள். ஏன்னா, அவரால் மட்டும்தான் இதெல்லாம் சாத்தியம். நட்புக்கு ஒரு உதாரணம் என்றால் அது சந்தானம். எங்க படத்தோட தயாரிப்பாளர் வி.டி.வி கணேஷ். எது பண்ணினாலும் பெரிசா பண்ணணும்னு சொல்வார். ''திங் பிக் மச்சான்'னு சொல்வார். இந்தப் படத்தில் வேலை பார்த்த எல்லோரும் பெரிய டெக்னீஷியன். ஒளிப்பதிவாளர் அபிமன்யூ, ராஜூ சுந்தரம், கனல் கண்ணன்னு எல்லோரும் பெரிய டீம் இந்தப் படத்தில் ஒர்க் பண்ணியிருக்காங்க. இது எல்லாமே கணேஷ் சார்தான் ஏற்பாடு செய்து கொடுத்தார். 

சந்தானம்

படத்துக்கான இசையமைப்பாளராக சிம்பு அறிமுகமாகிறார். அவரிடம் சூழ்நிலை சொல்லி பாடல் கேட்டால், நம்மை அப்படியே உட்காரச் சொல்வார். பாடிக்கிட்டே கீ போர்ட் வாசிப்பார். அப்படியே நம்ம கேட்ட பாட்டை கொடுத்து விடுவார். ஆன் த ஸ்பாட்டில் நம்ம கேட்ட பாட்டை கொடுத்து விடுவார். ஒளிப்பதிவாளர் அபிமன்பு பத்தி சொல்லவே தேவையில்லை, அதே மாதிரிதான் கலை இயக்குநர் உமேஷ் பத்தியும்சொல்லவே தேவையில்லை''  என்று கடைசி வரை அவர்களைப் பற்றி எதுவும் சொல்லாமலே கிளம்பினார் இயக்குநர் சேதுராமன். 

அடுத்தாக கம்பீர குரலுக்கு சொந்தக்காரர் மேடைக்கு வரபோகிறார் என்று ஆடம்ஸ் சொன்னவுடன், ''டேய் போதும்டா நிறுத்து’’ என்ற சொன்னப்படியே விடிவி கணேஷ் மேடையேறினார். ‘இரண்டு வரி மட்டும் சொல்லி கொள்கிறேன்’ என்று  ஆதம்ஸ் கெஞ்சி, ‘கன்னி பெண் நெஞ்சுக்குள் கையெழுத்து போட்டவர். பெண்கள் பின்னாடி சுற்றாமல், பெண்களே சுற்றும் பேரழகன்’ என்று அஜித் படத்தின் பாடல் வரிகளை சொல்ல, அதற்கு சந்தானம் ’கணேஷ், எல்லா பெண்களிடமும் கடன் வாங்கிட்டாரா’ என்று கவுன்டர் கொடுக்க, பேச ஆரம்பித்தார் கணேஷ், 

''எப்போதும் இருக்கும் சந்தானம் படமாக இந்தப் படம் இருக்காது. ஒரு மாஸ் படம். ஸ்க்ரிப்ட் கேட்கும் போதே தோன்றியது மியூசிக் படத்துக்கு ஸ்பெஷலாக இருக்கணும்னு. அதனால் சிம்புவிடம் கேட்டேன். அவர் உடனே, ''பண்ணுறேன்’னு சொன்னார். படத்தின் பெரிய விஷயமே சிம்பு இசைதான். ''சந்தானம் ஹீரோவாக நடிக்கிறார். அதனால், பண்ணுறேன். அவர் படத்தில் மியூசிக் பெரிய ஹிட் அடித்ததில்லை. அதனால் பெரிய லெவலில் பண்ணலாம்'' என்றார். அதனால் படத்தின் பாட்டுக்காகவே ஜார்ஜியா எல்லாம் போனோம். 

படத்தோட ஷூட்டிங்கை இருபத்தி ஒரு நாளில் முடித்து விட்டோம். ஆனால், உடனே ரிலீஸ் செய்ய முடியவில்லை. காரணம் கையில் பணமில்லை. கவர்மெண்ட் ரூபாய் நோட் செல்லாதுனு சொல்லியிருச்சு. வேலைப் பார்த்தவங்களுக்கு பணம் கொடுக்க முடியவில்லை. ரொம்ப கஷட்பட்டோம். சிம்பு இசையமைத்தாலேயே இந்தப் படத்தில் யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் எல்லாம் பாடினார்கள். பாட்டுடைய மாஸ்டரிங் லண்டனில்தான் நடந்தது. அப்போது சிம்புக்கு காய்ச்சல். அவரால் போக முடியவில்லை. அதனால், அனிருத் லண்டனில் இருந்து எல்லாத்தையும் செக் பண்ணி சிம்புக்கு போனில் தெரிவித்தார். அவருக்கு பெரிய நன்றி. 

இந்தப் படத்துகாக சந்தானம் டையட் எல்லாம் இருந்து கஷ்டப்பட்டார்.  பாட்டு, டான்ஸ், சண்டை என எல்லாத்துக்கும் பயிற்சி எடுத்தார். நிறைய உழைத்தார். எனக்கு பெரிய திருப்தியாக இருக்கிறது. அதே மாதிரி சிம்புவும் ஒரே மாதத்தில் ஆறு பாடலையும் ரெக்கார்ட் செய்து கொடுத்தார். அவருடைய இசைக்காகவே ரொம்ப மெனக்கெட்டு பாட்டு எல்லாத்தையும் பார்த்து பார்த்து ஷூட் பண்ணினோம்'' என்றார். 
அன்புக்கு ஏசு நாதர், நல்ல மார்க்கத்துக்கு நபிகள் நாயகம், பக்திக்கு விவேகானந்தர், ஆசையை துறக்க புத்தர், அகிம்சைக்கு காந்தியடிகள் அதே மாதிரி உடற்பயிற்சிக்கு ஆர்யா என ஆர்யாவுக்கு ஓவர் பில்டப் கொடுத்து அவரை மேடைக்கு அழைத்தார் ஆடம்ஸ். 

''சந்தானம்கூட நடிக்கும் போது, அவர் காமெடி நடிகனாக இருந்தாலும் அதற்கே நிறைய ஸ்க்ரிப்ட் வைத்திருப்பார். இன்னைக்கு இந்த பங்கஷனுக்கு பேசுவதற்கு கூட பத்து பக்கத்தில் எழுதி வைத்திருக்கிறார். சந்தானம் ஆக்டிங் ரொம்ப பிடிக்கும். நான் அவரிடம் அடிக்கடி, 'மச்சி , நீ சொல்றதுக்கு நான் என்னடா கவுன்டர் கொடுக்க. சொல்லி கொடு டா’னு கேட்பேன். 

சந்தானம்

இப்போ ஆக்‌ஷன் ஹீரோவாக களமிறங்கி இருக்கிறார். எல்லோரும் சந்தானத்தை பார்க்கும் போது எப்படி ஆக்‌ஷன் பண்ணப் போறார்னு கேட்போம். அதற்காகவே இப்போ, ரியல் லைப் ஆக்‌ஷன் ஒண்ணு பண்ணியிருக்கார். இனிமே சந்தானத்துக்கு ஆக்‌ஷன் வருமா அப்படிங்குற டவுட் யாருக்குமே வரவேண்டாம். ஏன்னா, அடிச்ச கைப்புள்ளைக்கே கையில ஸ்ரிட்ச் போட்டியிருக்கு. அடி வாங்குவன் எப்படி இருப்பானோ. அந்த அளவுக்கு நடிப்பை உள்வாங்கி நடிச்சிருக்கார். படத்தின் போஸ்டர் எல்லாம் பார்த்தால் சட்டையை கழற்றி விட்டு நிற்கிறார். இதற்கே பெரிய தைரியம் வேணும். சந்தானம் பெரிய உழைப்பாளி. அவருக்கு பெரிய வாழ்த்துகள். படத்துக்கு சிம்பு இசையமைத்திருக்கிறார். சிம்பு , சந்தானத்தின் நட்புக்காக மட்டுமே இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறார். சந்தானம் படத்துக்கு பெரிய ரீச் கிடைக்கணும்னு பண்ணியிருக்கிறார். அவருக்கு நன்றி'' என்றார்.

இவர்கள் எல்லோரையும் தொடர்ந்து நன்றியுரையாக பேச வந்தார் நடிகர் சந்தானம், ''இன்னைக்கு படத்தோட ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடக்குதுனு ஆர்யாவிடம் சொன்னேன். அவன் ''மச்சான் நடக்குதா, கண்டிப்பா நடக்குதா'' என்று கேட்டான். இந்த மாதிரி சூழ்நிலையிலும் இந்த நிகழ்ச்சி நடக்குறது பெரிய விஷயம். எந்த தருணத்திலும் என்னை விட்டு கொடுக்காத நண்பன் ஆர்யா. ஆர்யாவுடன் நடிக்கும் போதுதான் எனக்கு ஹெல்த் பற்றிய ஒரு விழிப்புஉணர்வு  வந்தது.  'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தின் ஷூட்டிங் நடக்கும் போது அவருடன் சேர்ந்து நானும் சைக்கிளிங் எல்லாம் பண்ண ஆரம்பித்தேன். என்னுடைய உடற்பயிற்சி எல்லாத்துக்கும் ஆர்யாதான் காரணம். 

ஆர்யா ஜிம், சைக்கிளிங்க்கு செலவிடும் நேரத்தை, ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு செலவிட்டுயிருந்தால் இந்நேரம் இந்தி அளவில் பெரிய இடத்துக்கு சென்றியிருப்பார். அவருக்கு நடிக்குறது டைம்பாஸ்தான். ஷூட்டிங் ஸ்பாட்டுக்குகூட சைக்கிளில் எப்படி வரலாம் என்று யோசிப்பார். அவருக்கு நன்றி. 

அடுத்தாக இயக்குநர் ராஜேஷ் பத்தி சொல்லணும். நான் ஜெயிக்கணும் அப்படினு நினைக்குற மனுஷன். இந்தப் படம் பார்த்து விட்டு, நிறைய கரெக்‌ஷன் சொன்னார். இந்தப் படம் இன்னைக்கு இந்த அளவுக்கு பெரிய ரீச்சாக நிக்குறதுக்கு முக்கிய காரணம் என் நண்பன் சிம்பு. அவர் இல்லைன்னா, இந்த படத்தில் நான் இல்லை. அவருக்கு நன்றினு ஒரு வார்த்தை மட்டும் சொல்ல முடியாது. ஏன்னா, இந்தப் படத்துக்காக நானும், கணேஷிம் முதலில் ஹாரிஸ் ஜெயராஜைதான் பார்த்தோம். அவர் அப்போது ரொம்ப பிஸியாகயிருந்தார். அந்த நேரத்தில் கணேஷ்தான் சொன்னார், 'சிம்புவிடம் கேட்கலாம்'னு. ‘சிம்பு ரொம்ப பிஸியா இருப்பார். அவர் எப்படி பண்ணி தருவார்'னு  நான் சொன்னேன். 'உனக்குன்னா கண்டிப்பா, சிம்பு பண்ணுவார்' என்று கணேஷ் சொன்னார். 

அதன்பிறகு ஹைதராபாத்தில் 'மன்னவன் வந்தானடி' படத்தின் ஷூட்டிங்கில் இருந்தேன். கணேஷ் போன் பண்ணி 'உன் படத்துக்கு மியூசிக் யாரு தெரியுமா'னு கேட்டார். 'தெரியலை’னு சொன்னேன். போனை கட் பண்ணிட்டு, ஒரு மெசேஜ் பண்ணினார். மெசேஜில் பார்த்தால் மியூசிக் பை எஸ்.டி.ஆர்-னு இருந்தது. செம ஹாப்பி நான். இந்தப் படத்தின் பாட்டுக்காக ரொம்ப மெனக்கெட்டார். படத்தோட ட்ரெய்லர் கூட ரொம்ப கஷ்டப்பட்டார். நிறைய பேருக்கு சிம்பு மேல் பாசம், கோபம் இருக்கலாம். ஆனால், என்னை பொருத்தவரைக்கும் அவர் காட்பாதர் மாதிரி. அவருக்கு எப்போதும் உண்மையுள்ளவனாகயிருப்பேன். இந்தப் படத்தில் ஒரு  பாட்டும் எழுதினார். எனக்காக செம மாஸான பாட்டு ஒண்ணு போட்டிருக்கார். அந்தப் பாட்டுக்கு எப்படி டான்ஸ் ஆடப்போறேன்னு நினைத்தேன். ஏன்னா, அந்த அளவுக்கு ரொம்ப மாஸான பாட்டு. எனக்காக கணேஷ் இந்தப் படத்தின் இன்ட்ரோ பாட்டுக்காக முக்கியமான டான்ஸ் மாஸ்டர்ஸ் அனைவரையும் வரவழைத்தார். எல்லா மாஸ்டருக்கும் என் நன்றி. இந்தப்  படத்தில் யுவன், அனிருத், டி.ஆர், உஷா மேம், லியோன் ஜேம்ஸ் எல்லோரும் பாடியிருக்காங்க. யுவன் இசையில் சிம்பு பாடினது போய், இப்போ சிம்பு இசையில் யுவன் பாடியிருக்கார். 

சந்தானம்

சந்தானம் படத்துக்கு இவ்வளவுதான் பட்ஜெட்னு இல்லாமல், பெரிய டெக்னீஷியன்ஸ் அனைவரையும் என் படத்துக்கு கூப்பிட்டு வேலை செய்ய வைத்தார். இந்தப் படத்தில் பவர் ஸ்டார் நடித்திருக்கிறார். அவருடைய ஷூட்டிங் சமயத்தில் பவர் ஸ்டார் ஒரு பிரச்னையின் காரணமாக உள்ளே போயிட்டார். ஜாமீன் கிடைக்கவில்லை. அப்போது அவரது ஜாமீனுக்கான டெல்லி வரை போனார். அதே மாதிரி இப்போ பார்த்தால் என் பிரச்னை. முந்தா நேத்து என்கிட்ட வந்தார்.' என்னடா, பங்ஷன் பண்ண முடியுமா’னு கேட்டார். ’ஏன்’னு கேட்டேன். 'இல்லைடா ஜாமீன்'னு இழுத்தார். ’நடந்தது எல்லாம் நல்லதுக்குனு நினைச்சுக்கோங்க’னு சொன்னேன். ஏன்னா, இந்த பங்ஷன் முன்னாடியே பிளான் பண்ணினது. நடக்குமா, நடக்காதானு ஒரே டென்ஷன். பட், எல்லா நேரத்திலையும் என்கூடவே இருந்தார். 

படத்தோட இயக்குநர் சேதுராமன். லொள்ளு சபா டீமிலிருந்து என்னுடன் இருக்கிறார். நல்லா உழைத்திருக்கிறார். நான் காமெடியனாக இருந்து ஹீரோவாக நடிக்கும் போது என் வீட்டில்கூட வேண்டாம்னு சொன்னாங்க. ஆனால், ஹீரோவாக நடிக்க வாங்கனு என்னை கூப்பிட்டது என் ரசிகர்கள்தான். லொள்ளு சபா காலத்திலிருந்து என் ரசிகர்கள் என்னுடன் இருக்கிறார்கள். என் ரசிகர்கள் அனைவரும் அவர்களது வாழ்க்கையில் நிஜ ஹீரோவாக வரவேண்டும் இதுதான் என்னுடைய ஆசை’’ என்று சொல்லி முடித்து கொண்டார் சந்தானம்.

 

 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...