இலங்கை- இந்திய மீனவர் விவகாரத்தில் நம்பிக்கை அளிக்கும் டில்லிப் பேச்சு | தினகரன்

இலங்கை- இந்திய மீனவர் விவகாரத்தில் நம்பிக்கை அளிக்கும் டில்லிப் பேச்சு

இலங்கைக் கடற்பரப்புக்குள் இந்தியாவின் தமிழக மீனவர்கள் அண்மைக் காலமாக அத்துமீறிப் பிரவேசித்து சட்டவிரோதமான மீன்பிடி முறைமைகளைப் பாவித்து கடற்றொழிலில் ஈடுபடுகின்றனர். இதனூடாக இந்நாட்டுக்குரிய கடல் வளங்களையும் சேதப்படுத்தி அழிக்கின்றனர். இன்றைய காலகட்டத்தில் இலங்கை மீனவர் எதிர்கொண்டுள்ள மிக முக்கிய பிரச்சினை இதுவாகும்.

இப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இலங்கை அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் பயனாக தற்போது நல்ல சமிக்ைஞகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன. குறிப்பாக கடந்த வாரம் இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தை நம்பிக்கை தரக் கூடியவகையில் அமைந்துள்ளது. இவ்விவகாரத்திற்கு நிலைபேறான தீர்வைக் காண்பதற்கு இரு தரப்பினரும் இப்பேச்சுவார்த்தையின் போது இணக்கம் கண்டுள்ளனர்.இவ்விவகாரத்தில் இது ஒரு முக்கிய திருப்புமுனையாகும்.

இவ்விவகாரம் தொடர்பில் கடந்த வாரம் 13 ஆம், 14 ஆம் திகதிகளில் புதுடில்லியில் நடைபெற்ற அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மட்டப் பேச்சுவார்த்தைகளில் இலங்கை தரப்பில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையிலான அதிகாரிகள் குழுவினரும், இந்திய தரப்பில் அந்நாட்டின் விவசாயம் மற்றும் கமநலத்துறை மேம்பாட்டு அமைச்சர் ராதா மோகன் சிங்க் தலைமையிலான குழுவினரும் பங்குபற்றினர்.இரு நாட்களாக நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையில் முதல் நாள் அதிகாரிகள் மட்ட பேச்சும், இரண்டாம் நாள் அமைச்சர்கள் மட்டப் பேச்சும் இடம்பெற்றுள்ளது.

இப்பேச்சுவார்த்தை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை அமைச்சர் அமரவீர, 'இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து, சட்டவிரோத மீன்பிடி முறைமைகளை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபடுவதை கட்டுப்படுத்துவதற்காக இற்றையும் வரையும் இடம்பெற்று வந்த பேச்சுவார்த்தைகளை விடவும், இது ஆக்கபூர்வமானதாகவும், நம்பிக்கை அளிக்கக் கூடியதாகவும் அமைந்திருந்ததாக தெரிவித்திருக்கிறார். அது தான் உண்மையும் கூட .

இவ்விவகாரத்திற்கு தீர்வு காணும் வகையில் கடந்த காலத்தில் இரு நாட்டு மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கிடையிலும், அதிகாரிகளுக்கிடையிலும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் சில பேச்சுவார்த்தைகள் இணக்கப்பாடுகள் எட்டப்படாது இடை நடுவில் முடிவுற்றுள்ளன. அவ்வாறான அனுபவங்களின் மத்தியில் இம்முறை நடந்த இப்பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமானதாகவும் நம்பிக்கை அளிக்கும் வகையிலும் இடம்பெற்றிருக்கின்றது. குறிப்பாக இவ்விவகாரத்திற்கு நிலைபேறான தீர்வைக் காண்பதற்கு இரு தரப்பினரும் இணக்கப்பாட்டை எட்டியுள்ளனர். இது பெரிதும் வரவேற்கத்தக்க விடயமாகும்.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறிப் பிரவேசித்து கடற்றொழில் ஈடுபடுவதோடு இந்நாட்டு மீனவர்களின் மீன்பிடி உபகரணங்களையும், வலைகளையும் அவ்வப்போது அவர்கள் சேதப்படுத்தி வருகின்றனர். இலங்கை கடற்பரப்பிற்குள் காணப்படும் மீன் விருத்திக்குப் பொருத்தமான முருகைக்கல் பாறைகளும் அவர்களது சட்டவிரோத மீன்பிடி முறைமைகளால் சேதப்படுத்தப்படுகின்றன.

இப்பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு வட இலங்கை மீனவர்கள் இந்நாட்டு அரசாங்கத்திடமும் , இந்திய அதிகாரிகளிடமும் மகஜர்களை வழங்கி கோரிக்கை விடுத்து வந்தனர். அத்தோடு சில சந்தர்ப்பங்களில் கவனயீர்ப்பு ஊர்வலங்களையும் கூட நடாத்தினர். இருந்தும் இவ்விவகாரத்திற்கு தீர்வு கிடைக்கப் பெறாதுள்ளன.

இவ்வாறான நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சிவராஜ் இவ்வருடத்தின் முற்பகுதியில் இலங்கைகக்கு விஜயம் செய்திருந்த போது அமைச்சர் மஹிந்த அமரவீர அவரைச் சந்தித்து இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து கடற்றொழில் ஈடுபடுவதால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து எடுத்துக் கூறினார்.இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியிருந்தார். இவ்வாறான பின்புலத்தில் தற்போது இடம்பெற்ற அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மட்டப் பேச்சுவார்த்தையில் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாடு இவ்விவகாரத்துக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதற்கு கட்டியம் கூறுவதாக உள்ளது.

அதேநேரம், இவ்விவகாரத்திற்கு இலங்கை அரசாங்கம் அமைதி வழியில் தீர்வு காண காட்டிவரும் ஆர்வத்துக்கும் அர்ப்பணிப்புக்கும் இந்திய தரப்பில் பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை இந்திய அரசாங்கம், பொட்டம் ரோலிங்க் இழுமை முறையில் கடற்றொழிலில் ஈடுபடுவர்களை ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுமாறும், அவ்வாறு ஈடுபட முடியாதவர்களை வேறு கடற்றொழில்களில் ஈடுபடுத்தவும், அவர்களுக்குத் தேவையான பயிற்சிகள் அளிக்கவென இரண்டு துறைமுகங்களை ஒதுக்கவும் நடவடிக்கை எடுத்திருக்கிறது. அத்தோடு இந்திய மீனவக் குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கென 15 பில்லியன் இந்திய ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான நம்பிக்கை தரக்கூடிய நகர்வுகள் குறித்து இப்பேச்சுவார்த்தை போது தெரிவிக்கப்பட்டதோடு, இலங்கை -இந்திய கடல் எல்லையில் இரு தரப்பினரும் கூட்டு ரோந்து நடவடிக்கையில் ஈடுபடவும் இணக்கம் கண்டுள்ளனர்.

ஆகவே இவ்விவகாரம் தொடர்பில் இற்றை வரையும் இடம்பெற்று வந்த முன்னெடுப்புகளுக்கு இப்பேச்சுவார்த்தை ஒரு திருப்புமுனை என்பதில் சந்தேகமில்லை. அதனால் இலங்கை கடற்பரப்புக்குள் தமிழக மீனவர்கள் அத்துமீறி பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபடுவதற்கு நிலைபேறான தீர்வு காணப்படும் காலம் அண்மித்து விட்டது . இது இலங்கையின் அமைதி வழி முயற்சிகளுக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும். 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...