Saturday, April 27, 2024
Home » உலக பொருளாதாரத்தை பலப்படுத்த பிராந்திய நாடுகளிடையே உட்கட்டமைப்பு அவசியம்

உலக பொருளாதாரத்தை பலப்படுத்த பிராந்திய நாடுகளிடையே உட்கட்டமைப்பு அவசியம்

-மலேசிய மாநாட்டில் அமைச்சர் பந்துலகுணவர்தன

by sachintha
October 25, 2023 8:22 am 0 comment

“ஒன்றாகச் செயல்படுவதனூடாக நிலையான வளர்ச்சி மற்றும் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க முடியுமென ” போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துலகுணவர்த்தன தெரிவித்துள்ளார். மலேசியாவில் நடைபெறும் 15ஆவது ஆசிய பிராந்திய சுற்றுச்சூழல் நிலையான போக்குவரத்து மன்றம் மற்றும் ஆசிய பசுபிக் ரயில்வே உச்சி மாநாட்டில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இம்மாநாட்டில் பேசிய அவர் தெரிவித்ததாவது: வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்துவது தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கு இடையிலான பௌதீக தொடர்பை மேலும் மேம்படுத்தும்.

பிராந்திய நாடுகளுடனான இலங்கையின் இணைப்பு கொழும்பு பிரதான துறைமுகத்தை மையமாகக் கொண்டுள்ளது. இதுவே,தெற்காசியாவின் மீள் ஏற்றுமதி மையமாகவும் உள்ளது.இதைக் கருத்திற்கொண்டு துறைமுகத்திறனை மேம்படுத்தும் வகையில், உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பௌதீக உட்கட்டமைப்பு விடயத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்ட போதிலும், இலங்கையின் வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகள் வலுவடைவது மெதுவாகவே நிகழ்கின்றன. எனவே, தனியார் துறையின் பங்கேற்புடன் நாட்டின் நிறுவன மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பை வலுப்படுத்துவது அவசியம்.

இலங்கை, 2024 ஆம் ஆண்டை இலத்திரனியல் இயக்க ஆண்டாக பிரகடனப்படுத்த திட்டமிட்டுள்ளது. இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மற்றும் பயன்பாட்டை விரிவுபடுத்துவதுடன், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் மூலோபாய திட்டத்தையும் தயாரித்து வருகிறது. குறைந்த செலவு , அதிக செயல்திறன் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை போன்ற பல நன்மைகள் இத்திட்டத்திலுள்ளன. மின்சார வாகனங்களின் இறக்குமதி மற்றும் பாவனையை ஊக்குவிப்பதற்கு தேவையான பின்னணியை உருவாக்கும் மூலோபாய திட்டத்தை தயாரிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகார ம் கிடைத்துள்ளது.

நாட்டின் முக்கிய நகரங்களைச் சுற்றி பொதுப் போக்குவரத்து அமைப்பை மேம்படுத்தவும் இலங்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. வீதிகள், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் போன்ற துறைகளில் பௌதீக உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. தற்போது நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் மிக முக்கியமான உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டம் கொழும்பு துறைமுகத்தின் விரிவாக்கமாகும். இது இலங்கையின் துறைமுகங்கள் ஊடாக கொண்டு செல்லப்படும் சரக்குகளில் 95% க்கும் அதிகமானவற்றைக் கையாள்வதுடன் தெற்காசியப் பிராந்தியத்திற்கு சேவை செய்வதில் தனித்துவமான பங்கை வகிக்கின்றது. “திறந்த உலகளாவிய பொருளாதாரத்தின் இணைப்பு” என்ற கருப்பொருளுக்கு இணங்க, வளமான உலகப் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கு கூட்டு நாடுகளுக்கிடையே உட்கட்டமைப்பு இணைப்பு மற்றும் ஒத்துழைப்பு மேம்படுத்தப்பட வேண்டும். ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம், மேலும் நிலையான வளர்ச்சி மற்றும் மிகவும் இணைக்கப்பட்ட உலகத்தின் நன்மைகளுடன் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க முடியுமென,தாம் நம்புவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT