Home » சுகாதாரத் துறையின் சவால்களை வெற்றி கொள்ள புதிய செயற்பாடுகள்

சுகாதாரத் துறையின் சவால்களை வெற்றி கொள்ள புதிய செயற்பாடுகள்

- கொவிட் கால சவால்களை விட எதுவும் பெரிதில்லை

by sachintha
October 25, 2023 6:42 am 0 comment

எதிர்கொண்டுள்ள சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம் என புதிய சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

கொரோனா உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொண்ட சுகாதாரத்துறை, எதிர்கால சவால்களையும் வெற்றிகரமாக எதிர் கொள்வதற்கு சகலரும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டியது அவசியம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மக்கள் பிரதிநிதியாக 13 வருடங்கள், தாம் கட்டிக்காத்த நேர்மைத் தன்மையை சுகாதார அமைச்சிலும் பாதுகாத்துக் கொள்வதற்கு அதிகாரிகள் உட்பட அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயல்படப் போவதாக தெரிவித்த அமைச்சர், மருந்து கொள்வனவு, கொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் நேர்மையுடன் செயற்பட அதிக கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

புதிய சுகாதார அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் ரமேஷ் பத்திரன, நேற்றைய தினம் அமைச்சில் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

இந்த வைபவத்திலேயே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இவ்வைபவத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,

மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தின் ஊடாக சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்து தீர்மானங்களும் மேற்கொள்ளப்படும்.

நான், அரசாங்க ஆஸ்பத்திரியிலேயே பிறந்தவன். அதே போன்று ஆரம்ப கல்வி முதல் அரசாங்க பாடசாலைகளில் கல்வி கற்றவன். அந்த வகையில் சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்கு பணியாற்ற கிடைத்துள்ள சந்தர்ப்பத்திற்கு மகிழ்ச்சி தெரிவிக்கிறேன்.

நாட்டின் சுகாதாரத் துறையில் தற்போது பல்வேறு சவால்கள் காணப்படுகின்றன. அந்த சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் தற்போதைய ஜனாதிபதி மற்றும் துறை சார்ந்தவர்கள் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டே, இந்த பதவியை ஏற்றுள்ளேன்.

டாக்டர்கள்,தாதியர்கள் உட்பட அனைவரும் இணைந்து சுகாதாரத்துறை எதிர்கொண்டுள்ள சவால்களை வெற்றி கொண்டு, அந்தத் துறையை முன்னேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே, எனது முதன்மையான வேண்டுகோள்.

உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் மத்தியில் இலங்கையின் சுகாதாரத் துறைக்கு பெரும் வரவேற்புள்ளது.

அதேபோன்று கொவிட் காலத்தில் இலங்கையின் சுகாதாரத் துறை மேற்கொண்ட செயல்பாடுகளை முழு உலகமும் வரவேற்றது.2016 ஆம் ஆண்டிலிருந்து 2025ஆம் ஆண்டு வரைக்குமான நாட்டின் தேசிய சுகாதார கொள்கைக்கிணங்க, மக்களை கேந்திரமாகக் கொண்ட மற்றும் நோயாளிகளை முதன்மைப்படுத்தும் சுகாதார சேவை இந்நாட்டில் நடைமுறையில் உள்ளது.

சுகாதாரத் துறையை முன்னேற்றுவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் சிலவற்றை நான் முன்னெடுக்கவுள்ளேன். அதில் எந்த தனிப்பட்ட தீர்மானங்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படாது.

அரசியல் ரீதியிலோ அல்லது தனிப்பட்ட ரீதியிலோ, நான் இப்பதவியை எதிர்பார்த்திருக்கவில்லை. இந்தப் பதவி தற்காலிகமானது என்பதை புரிந்து கொண்டே செயற்படுவேன்.

மருந்துகளின் நிலை மற்றும் திட்டமிடல் தொடர்பில் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தையொன்றை நடத்தவுள்ளேன். இதன் போது தேவையான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும். அத்துடன் அவசர மருந்து கொள்வனவு அவசியமா இல்லையா என்பது தொடர்பிலும் தீர்மானம் மேற்கொள்ளப்படும். கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய மோசமான பொருளாதார நிலைமையால் அவசர மருந்து கொள்வனவை மேற்கொள்ள நேர்ந்தது. மருந்துகளுக்கான பணம் வழங்கப்படாததால் மருந்து விநியோகஸ்தர்கள் அந்த வலையமைப்பிலிருந்து விலகிக் கொள்ள நேர்ந்ததாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT