தினகரன் கோரிக்கையை அடுத்து இரட்டை இலை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு: தேர்தல் ஆணையம் | தினகரன்

தினகரன் கோரிக்கையை அடுத்து இரட்டை இலை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு: தேர்தல் ஆணையம்

இரட்டை இலை சின்னம் தொடர்பான இறுதி விசாரணையை வரும் 16ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 13ம் திகதி நடைபெற இருந்த விசாரணையை 16ம் திகதி ஒத்திவைத்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதிமுகவில் இரண்டு அணிகளாக பிரிந்து செயல்பட்ட எடப்பாடி, ஓபிஎஸ் அணிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் இணைந்தன. இதையடுத்து இரட்ைட இலை சின்னத்தை மீட்கும் முயற்சியில் இரு அணிகளும் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கடந்த செப்டம்பர் மாதம் 12ம் திகதி சென்னை வானகரத்தில் நடந்தது. அதில் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் ரத்து செய்யப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதைத்தொடர்ந்து டெல்லி சென்று இரண்டு அணிகளும் இணைந்ததற்காக ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்தனர். மேலும் இரண்டு அணிகளும் தனித்தனியாக இரட்டை இலை சின்னத்தை மீட்க கொடுத்த ஆவணங்களையும் திரும்ப பெற்றனர். அதிமுக (அம்மா), அதிமுக (புரட்சி தலைவி அம்மா) அணியினர் இணைந்து விட்டோம் என்றும், அதிமுக செயற்குழு, பொதுக்குழுவில் பொதுச்செயலாளராக சசிகலா நியமனத்தை ரத்து செய்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் தேர்தல் ஆணையத்திடம் அப்போது அளித்தனர்.

இந்த நிலையில், இரட்டை இலை சின்னம் யாருக்கு வழங்கப்படும் என்பது பற்றி இறுதி விசாரணை அக்டோபர் 6ம் திகதி தலைமை தேர்தல் ஆணையத்தில் நடைபெற்றது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி, சி.எஸ். வைத்தியநாதன், விஜயகுமார், குரு கிருஷணகுமார் ஆகியோர் ஆஜராகி வாதாடி வருகின்றனர். இதைபோல் டி.டி.வி. தினகரன் தரப்பில் வழக்கறிஞர் விஜய் ஹன்ஸாரியா, சேதுராமன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

முதற்கட்ட விசாரணையின் போது எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் முன் வைக்கப்பட்டது. இதையடுத்து விசாரணை முழுமையாக முடிவடையததால் 13ம் திகதி மாலை 3 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே இரட்டை இலை சின்னம் தொடர்பான இறுதி விசாரணையை ஒத்திவைக்கக்கோரி டிடிவி தினகரன் சார்பில் நேற்று தேர்தல் ஆணையத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் இறுதி விசாரணையை 21-ம் திகதி மாற்ற வேண்டும் டிடிவி தினகரன் தரப்பு கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் டிடிவி தினகரன் தரப்பு கோரிக்கையை ஏற்று விசாரணை ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...