Friday, March 29, 2024
Home » மக்கள் சேவையில் முப்பது வருடங்கள் கடந்து பயணிக்கும் மலையக கல்விமான் மாரிமுத்து

மக்கள் சேவையில் முப்பது வருடங்கள் கடந்து பயணிக்கும் மலையக கல்விமான் மாரிமுத்து

by sachintha
October 25, 2023 4:13 pm 0 comment

மக்கள் சேவையில் 30 வருடங்களைக் கடந்து பயணித்துக் கொண்டிருக்கும் ஒருவராக கல்விமான் சட்டத்தரணி கா.மாரிமுத்து திகழ்கிறார். தொழில் நேர்மை, தொழிற்சங்க ஈடுபாடு, வாதாடும் வல்லமை, பெருந்தோட்ட மக்கள் நலனுக்கான ஓயாத உழைப்பு நிறைந்தவர் அவர்.

சிறந்த சிந்தனையாளரான சட்டத்தரணி மாரிமுத்து ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பொதுநிருவாகத்திலும், திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையிலும் பட்டம் பெற்றவராவார். இலங்கை நிர்வாக சேவையில் 1971 ஆம் ஆண்டு இணைந்து அரசசேவையில் பல்வேறு உயர்பதவிகளை வகித்துள்ளார். ஆரம்பத்தில் வாழைச்சேனை பிரதேச செயலாளராக பணியாற்றினார். அதன் பின்னர் தொழில் திணைக்களத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை மாவட்டங்களில் உதவித் தொழில் ஆணையாளராகவும், சிரேஷ்ட தொழில் ஆணையாளராகவும், பணியாற்றினார். இதனைத் தொடர்ந்து தொழில் திணைக்களத்தின் தலைமைக்காரியாலயத்தில் பிரதி தொழில் ஆணையாளராக கடமை புரிந்துள்ளார்.

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் புடவைக் கைத்தொழில் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் இந்த அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளராகக் கடமையாற்றினார். அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானோடு நெருங்கிப் பழகி தோட்டப்பகுதிக்குப் பல முன்னேற்றகரமான திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்த ஏதுவாக இருந்தார்.

1994 ஆம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி தோட்டப்புற மக்களின் சமூக கலாசார பிரச்சினைகளை ஆராய்வதற்காக நியமித்த குழவில் மாரிமுத்து இடம்பெற்றிருந்தார். இந்தக் குழுவானது தோட்டப்புற மக்கள் விவகாரங்களுக்கு தனியான அமைச்சு அமைக்க வேண்டுமென சிபாரிசு செய்திருந்தது. இந்த சிபாரிசின் அடிப்படையிலேயே 1994 ஆம் ஆண்டு முதன்முதலாக தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு அமைக்கப்பட்டது.

உல்லாசத்துறை அமைச்சின் மேலதிக செயலாளராக அவர் பணியாற்றினார். 2000 ஆம் ஆண்டு அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் நியமன பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 2001 ஆம் ஆண்டு கட்சி வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்து, ஜோர்தான் நாட்டுக்கான தூதுவராக பதவியேற்றார்.

இவரது இப்பதவிக் காலத்தில் ஜோர்தான் நாட்டில் சுமார் 25,000 இலங்கை பணியாளர்கள் நலன்கருதி சேமநலத்திட்டங்களை அமுல்படுத்தினார். 2006 ஆம் ஆண்டு ஜோர்தான் நாட்டு மன்னர் அப்துல்லா உஷைன் அவர்களால், இலங்கைக்கும் ஜோர்தானுக்கும் இடையில் இருதரப்பு நட்புறவை திறம்பட செயல்படுத்தியதற்காக ‘அல் ஸ்டிக்லால்’ என்ற சிறப்புப்பட்டம் மாரிமுத்துவுக்கு வழங்கப்பட்டது.

தனது தூதுவர் பதவிக்காலம் முடிவடைந்து இலங்கை திரும்பிய பின்னர் இளைஞர் விவகாரம் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சினதும், பின்பு அமரர் ஆறுமுகன் தொண்டமானின் ஆலோசனைக்கமைவாக கால்நடை அபிவிருத்தி மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சினதும் ஆலோசகராக அமைச்சரவையால் நியமிக்கப்பட்டார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தொழிற்சங்க மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் அவர் பெரிதும் பங்காற்றியுள்ளார். 2007 ஆம் ஆண்டு நிர்வாகம் மற்றும் சட்டத்துறை நிர்வாக உபதலைவராக பணியாற்றினார். இதனோடு 2009 ஆம் ஆண்டு தொடக்கம் 2020 ஆம் ஆண்டு வரை பெருந்தோட்ட சேவையாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக இருந்து திறம்பட பணியாற்றினார்.

தேவதாஸ் சவரிமுத்து…

சிரேஷ்ட ஊடக இணைப்பாளர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT