வடமேல் மாகாண கரப்பந்தாட்டப் போட்டி | தினகரன்

வடமேல் மாகாண கரப்பந்தாட்டப் போட்டி

 

வடமேல் மாகாணத்தின் அனைத்து உள்ளுராட்சி மன்றங்கள் கலந்து கொண்ட கரப்பந்தாட்டப் போட்டி ஆராச்சிக்கட்டு சுமித் கபில விளையாட்டரங்கிலும், ஆராச்சிக்கட்டு பிரதேச சபையின் பகல் -இரவு கரப்பந்தாட்ட மைதானத்திலும் இடம்பெற்றது. இப்போட்டி நிகழ்ச்சியோடு ஆராச்சிக்கட்டு பிரதேச சபையின் பகல் இரவு கரப்பந்தாட்ட மைதானத்தின் திறப்பு விழாவும் இடம்பெற்றதுடன் இப்போட்டிகளில் 31 ஆண்கள் அணிகளும், 18 பெண்கள் அணிகளும் கலந்து கொண்டன.

இப்போட்டிகளின் அனைத்து ஆரம்ப கட்ட போட்டிகளும் சுமித் கபில விளையாட்டு மைதானத்தில் ஒன்பது இடங்களில் இடம்பெற்றதோடு இறுதிப் போட்டிகள் இரவுப் போட்டிகளாக ஆராச்சிக்கட்டு பகல் இரவு கரப்பந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்றது.

இப்போட்டியில் ஆண்களுக்கான சம்பியன் கிண்ணத்துடன் ஐம்பதாயிரம் ரூபாய் பணப்பரிசையும் புத்தளம் பிரதேச சபை அணி பெற்றுக் கொண்டது. இரண்டாமிடத்தைப் பெற்ற கிரிபாவ பிரதேச சபை அணி கிண்ணத்துடன் முப்பதாயிரம் ரூபாய் பரிசினைப் பெற்றுக் கொண்டது.

பெண்கள் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டிகளில் செம்பியன் கிண்ணத்துடன் ஐம்பதாயிரம் ரூபாய் பணப் பரிசினையும் குருநாகல் பிரதேச சபை அணி பெற்றுக் கொண்டது. இப்போட்டியில் நாத்தாண்டிய பிரதேச சபை அணி இரண்டாம் இடத்தைப் பெற்று கிண்ணத்துடன் முப்பதாயிரம் ரூபாய் பரிசினையும் பெற்றுக் கொண்டது.

போட்டியின் சிறந்த ஆண்கள் அணியின் வீரராக புத்தளம் பிரதேச சபை அணியின் மஹிந்த நாமல் தெரிவாகி அவருக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசுடன் கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டது.

சிறந்த பெண் வீராங்கனையாக குருநாகல் பிரதேச சபை அணியைச் சேர்ந்த சஜீவா பிரியதர்சனி தெரிவாகி அவருக்கும் பத்தாயிரம் ரூபாய் பரிசுடன் கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டது. இப்போட்டிகளுக்கான பங்களிப்பு ஒத்துழைப்பை ஆராச்சிக்கட்டு பிரதேச சபை வழங்கியதோடு இந்நிகழ்வில் வடமேல் மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஜே. எம். ஆர். பீ. ஜயசிங்க, உதவி ஆணையாளர் எம். தனூஜா கருணாசேன, வடமேல் மாகாண பிரதம செயலாளர் பீ. டி. எம். சிரிசேன, ஆராச்சிக்கட்டு பிரதேச சபையின் முன்னாள் செயலாளர் ஜகத் சமந்த பெரேரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

(புத்தளம் விஷேட நிருபர்) 

 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...