தோல்வியை தவிர்க்க பாகிஸ்தான் போராட்டம் | தினகரன்

தோல்வியை தவிர்க்க பாகிஸ்தான் போராட்டம்

துபாயில் நடைபெற்று வரும் பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றிக்கு 317 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை. அதன் படி தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக ஆடிய பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 198 ஓட்டங்களை பெற்று தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.இலங்கை அணி வெற்றி பெற 5 விக்கெட்டுக்களை கைப்பற்ற வேண்டும்.

பாகிஸ்தான் அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக சான் மசூட் -சமி அஸ்லம் இருவரும் களமிறங்கிய வேளை அஸ்லம் ஒரு ஓட்டத்துடன் கமகேயின் பந்து வீச்சில் வெளியேறினார்.பின்னர் மசூட்டுடன் இணைந்தார் அஷார் அலி இருவரும் நிதானமாக ஆடுவார்கள் என்ற நிலையில் அஷார் அலி 17 ஓட்டங்களுக்கு பிரதீபின் பந்தில் ஆட்டமிழந்து சென்றார். பின்னர் ஹரீஸ் சுகையில் 10 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றார்.பாபர் அஷாம் ஓட்டம் எதுவும் பெறாமலும் மசூட் 101 பந்து களை எதிர்கொண்டு நிதான ஆட்டத்தை கடைப்பிடித்தாலும் 21 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றார்.

பின்னர் அஷாட் சபீக் மற்றும் அணியின் தலைவர் சப்ராஸ் அஹமட் ஜோடி நிதான ஆட்டத்தை கடைப்பிடித்து 4 நாள் ஆட்ட முடிவில் சப்ராஸ் அஹமட் 57 ஓட்டங்களுடனும் அஷாட் சபீக் 86 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.இருவரும் இணைந்து 6 ஆவது விக்கெட்டுக்காக 146 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டமை விசேட அம்சமாகும்.

இலங்கை அணி சார்பாக பந்து வீச்சில் டில்ருவன் பெரேரா 3 விக்கெட்டையும் கமகே,பெர்ணான்டோ தலா ஒரு விக்கெட்டையும் பதம் பார்த்தனர்.

பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பகல் - இரவு ஆட்டமாக துபாயில் நடைபெற்று வருகிறது. நாணயச்சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 482 ஓட்டங்கள் குவித்து சகல விக்கெட்டையும் இழந்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 262 ஓட்டங்களுக்கு சுருண்டது.

220 ஓட்டங்கள் முன்னிலையுடன் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை அணியின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது. இதனால் 3-வது நாள் ஆட்ட முடிவில் 34 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுக்களை இழந்து திணறியது.

4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தினார்கள். இதை எதிர்கொள்ள முடியாத இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 96 ஓட்டங்களுக்கு சுருண்டது. 26 ஓவர்கள் மட்டுமே இலங்கை அணி துடுப்பெடுதாடியது. கடைசி மூன்று விக்கெட்டையும் ஒரே ஓவரில் ஹாரிஸ் சுஹைல் வீழ்த்தினார். பாகிஸ்தான் அணி சார்பில் வஹாப் ரியாஸ் 4 விக்கெட்டும், ஹாரிஸ் சுஹைல் 3 விக்கெட்டும், யாசீர் ஷா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இரண்டு இன்னிங்சையும் சேர்த்து இலங்கை அணி 316 ஓட்டங்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் பாகிஸ்தான் வெற்றிக்கு 317 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயித்தது.

இன்று போட்டியின் இறுதி நாளாகும். 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...