முதலாவது செய்மதி விண்ணுக்கு ஏவப்பட்டு 60 வருடங்கள் நிறைவு | தினகரன்

முதலாவது செய்மதி விண்ணுக்கு ஏவப்பட்டு 60 வருடங்கள் நிறைவு

 

உலக விண்வெளி வாரம் ஆண்டு தோறும் ஒக்டோபர் 4 முதல் 10 வரை கொண்டாடப்படுகிறது. உலக விண்வெளி தின நிகழ்வுகள் இன்றுடன் நிறைவு பெறுகின்றன. 1957 ஆம் ஆண்டு ஒக்டோபர் 4ஆம் திகதிதான் உலகின் முதல் செயற்கைக்கோளான ஸ்புட்னிக்_ 1 விண்ணில் செலுத்தபட்டது.

பின்னர், அக்டோபர் 10, 1967ஆம் ஆண்டு விண்வெளியை நாடுகள் பயன்படுத்திக் கொள்வதற்கான விதிமுறைகளுடன் விண்வெளி ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த இரண்டு நாட்களையும் நினைவு கூறும் வண்ணம், இரண்டு நாட்களுக்கும் இடையிலான வாரம் விண்வெளி வாரமாகக் கொண்டாடப்படும் என்று டிசம்பர் 6,1999 இல் ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.

உலகில் முதன் முறையாக செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய பெருமை அன்றைய சோவியத் யூனியனைச் சேரும். 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4 இல் சோவியத் யூனியன் ஸ்புட்னிக் 1ஐ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. அரசியல், இராணுவ, தொழில்நுட்ப மற்றும் அறிவியல் வளர்ச்சிகளுக்காக ஸ்புட்னிக் உருவாக்கப்பட்டது. விண்வெளிக்கு முதன் முதலில் மனிதனை அனுப்பியதும் சோவியத் யூனியன்தான். 1961 ஆம் ஆண்டு வாஸ்ட்டாக் விண்கலம் மூலம் விண்ணை அடைந்த முதல் மனிதன் யூரி ககாரின்.

ரஷ்யாவுக்கு எப்பொழுதும் போட்டியாகத் திகழும் அமெரிக்கா, அதற்கு அடுத்த ஆண்டே, தன் முதல் செயற்கைக்கோளான எக்ஸ்ப்ளோரர்-1 ஐ விண்ணில் செலுத்தியது. பூமியைப் போலவே விண்ணிலும் தன் இராச்சியத்தை நிறுவ நினைக்கும் அமெரிக்கா, 1984 ஆம் ஆண்டிலிருந்து 2017 ஆம் ஆண்டு வரை மட்டும் 270க்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது.

இவை அனைத்தும் நாசாவினால் உருவாக்கப்பட்டவை. கூகுள் நிறுவனம் தனது சேவையான கூகுள் வரைபடத்தை அமெரிக்க அரசின் ஜி.பி.ஸ் செயற்கைகோள்களுடன் இணைத்து உலகெங்கும் செயல்படுத்தி வருகிறது. விண்வெளிக்கு சென்ற முதல் மனிதர் ரஷ்யர் என்பதால், நிலவுக்கு முதல் மனிதனை அனுப்பும் பெருமையை அடைய அமேரிக்கா முயன்று, 1969 ஆம் ஆண்டு தன் அப்பலோ 11 மூலம் மூவரை அனுப்பி, நிலவில் கால் வைத்த முதல் மனிதனாய் நீல் ஆர்ம்ஸ்ட்​ரோங்கை ஆக்கியது. ஆனால், பிற்காலத்தில் அதன் உண்மைத் தன்மை பற்றி தொடர்ந்து சர்ச்சைகள் நிலவுகின்றன.

விண்வெளி ஆராய்ச்சியிலும், செயற்கைக்கோள்களை செலுத்துவதிலும் இந்தியாவின் இடம் முக்கியமானது. முதலில் சோவியத் யூனியனின் உதவியுடன் செயல்படுத்திய இந்தியா, தற்பொழுது முழுமையாக இந்தியாவிலேயே ஆராய்ச்சிகளையும், செயற்கைக்கோள்கள் செலுத்துவதிலும் சாதித்து வருகிறது. ஆரியபட்டா முதல் ஜி -சாட் 17 வரை 100 செயற்கை கோள்களை உருவாக்கியுள்ளது.

விண்வெளி என்றாலே அப்துல் கலாம், கல்பனா சாவ்லா ஆகியோர் நினைவிற்கு வருகின்றனர். இந்தியாவின் மிகப் பெரிய வெற்றியாகக் கருதப்படுவது மங்கள்யான் மற்றும் பி.எஸ்.எல்.வி 37 ஆகும். மங்கள்யான் செவ்வாய்க் கிரகத்திற்கு ஏவபட்டது. பி.எஸ்.எல்.வி. சி-37 விண்கலம், 107 செயற்கைக்கோள்களை சுமந்து சென்று ரஷ்யாவின் சாதனையை முறியடித்து உலக சாதனை படைத்தது.

இதற்கு முன்னர் 37 செயற்கைகோள்களை அனுப்பியதே சாதனையாக இருந்தது. மற்றோரு சிறப்பாக, தமிழகத்தை சேர்ந்த ரிபாத் ஷாரூக் எனும் பாடசாலை மாணவன் சிறிய வகை நனோ செயற்கைக் கோளை உருவாக்கினார். அதனை நாசா சென்ற ஆண்டு விண்ணில் செலுத்தி அங்கீகாரம் அளித்தது. அதற்கு 'கலாம் சாட்' என பெயரிடப்பட்டது.

உலகில் அமெரிக்கா, பிரான்ஸ், சீனா, இந்தியா, இஸ்ரேல், ரஷ்யா, உக்ரைன், ஈரான், ஜப்பான், வட கொரியா, ஐரோப்பிய நாடுகள் விண்வெளி செயல்பாடுகளில் முன்னிலையில் இருக்கின்றன. மனிதர்களின் ஆளுமை பூமியைத் தாண்டி விண்ணளவு உயர்ந்திருக்கிறது. மனிதர்கள் வாழும் பூமிதான் தன்னிலையை இழந்து கொண்டிருக்கிறது.

ஹரிஹரசுதன்...


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...