சரத் என் சில்வாவின் மனுவை தள்ளுபடி செய்யக்கோரி சுமந்திரன், ரஜிக மனு தாக்கல் | தினகரன்

சரத் என் சில்வாவின் மனுவை தள்ளுபடி செய்யக்கோரி சுமந்திரன், ரஜிக மனு தாக்கல்

 மாகாணசபை தேர்தல் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தும் வகையில் முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மனுவை தள்ளுபடி செய்வதற்காக உச்சநீதிமன்றத்தின் நியாயாதிக்கத்தைக் கோரி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் மற்றும் கொழும்பு மாவட்ட சுதந்திரக் கட்சி அமைப்பாளரும் சட்டத்தரணியுமான ரஜிக கொடிதுவக்கு ஆகியோர் நேற்று இரண்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மாகாண சபைத் தேர்தல் சட்டமூலத்தில் உட்புகுத்துவதற்கென கடந்த மாதம் 20 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற குழுநிலை விவாதத்தின்போது முன்மொழியப்பட்ட திருத்தங்களை தனது மனு மீதான இறுதி தீர்ப்பு வழங்கப்படும் வரை செயற்படுத்துவதை தடுத்து நிறுத்தும் வகையில் இடைக்கால தடையுத்தரவொன்றைக் கோரி முன்னாள் நீதியரசர் சரத் என்.சில்வா கடந்த 28 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

முன்னாள் பிரதம நீதியரசரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள், அரசியலமைப்பின் 17 மற்றும் 126 ஆம் இலக்க உறுப்புரைகளின் பிரகாரம் நிர்வாக மற்றும் நிறைவேற்று செயற்பாடுகளுக்கு பொருந்தாதவை என்றும் இந்த மனு, சட்டத்தில் தவறான அபிப்பிராயங்களைத் தோற்றுவிக்கக்கூடியதெனவும் ரஜிக கொடித்துவக்கு தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியலமைப்பிலுள்ள ஏற்பாடுகளை சவாலுக்குட்படுத்தும் வகையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டமொன்றை செல்லுபடியற்றதாக்க முன்னாள் பிரதம நிதியரசர் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நாடுகின்றார் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது மனுவில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, அரசியலமைப்பின் 80(3) சரத்தின் பிரகாரம் ஜனாதிபதி அல்லது சபாநாயகரின் சான்றுரைப்பின்படி ,சட்டமூலமொன்று சட்டமாக்கப்படும்போது இச் சட்டத்தைப் பற்றி நீதிமன்றம் எக்காரணம் கொண்டும் விசாரணை செய்யவோ அல்லது வியாக்கியானம் கூறவோ முடியாது. ஆதலால் முன்னாள் நீதியரசரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை ஏற்றுக் கொள்வதற்கான நியாயாதிக்கத்தை நீதிமன்றம் கொண்டிருக்க வில்லையெனவும் அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேற்படி அடிப்படை உரிமைகள் மனு மீதான வழக்கு விசாரணை நாளை மறுதினம் (ஒக்டோபர் 9) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...