ஆசிரியர் தொகையை அதிகரிப்பதால் மட்டும் கல்வித்தரம் உயருமென எண்ணுவது தவறு | தினகரன்

ஆசிரியர் தொகையை அதிகரிப்பதால் மட்டும் கல்வித்தரம் உயருமென எண்ணுவது தவறு

 

'குறிக்கோள் இல்லாத வாழ்க்கை முகவரி இல்லாத கடிதத்திற்குச் சமன்’ என்பர். இது போல மாணவர் சமூகமும் குறிக்கோள் இலட்சியம் இல்லாமல் இருந்தால் அவர்களின் எதிர்காலம் ஓர் இருண்ட பாதையை நோக்கி நகரும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

மண்ணில் பிறந்த மனிதனை மானிடப்பிறவியாக மாற்றும் பாரிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு இருக்கின்றது. ஆசிரியர்கள் என்போர் மாணவ சமுதாயத்தை உருவாக்குபவர்கள் அல்லர் மாறாக உயிரூட்டுபவர்கள்.

இலங்கையில் ஒக்டோபர் ௦6ம் திகதியான இன்று சர்வதேச ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் என்போர் பிள்ளைகளின் [மாணவர்களின்] இரண்டாவது பாதுகாவலர்கள் அல்லது பெற்றோர் என்றால் அது மிகையாகாது. சிறு பராயத்திலேயே பெற்றோர் தமது பிள்ளைகளை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கின்றனர். ஆசிரியர்களின் நிழலில், வழிகாட்டலில் வளர்க்கப்படும் பிள்ளைகளின் எதிர்க்காலம் சுபிட்சமானதாக அமையும் என்ற பாரிய எதிர்பார்ப்புடனேயே பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கின்றனர்.

அது மட்டுமல்லாமல் அன்பு,கருணை,இரக்கம் என்பனவும் இவர்களிடம் குறைவில்லாமல் மாணவர்களுக்குக் கிட்டும் என்பதையும் தெரிந்து வைத்திருக்கின்றனர். இந்த நிலையில் மீத்திறன் குறைந்த,கூடிய மாணவர்கள் எல்லோரும் ஒரே வகுப்பறையில் உள்வாங்கப்பட்டு எந்தவித வர்க்க வேறுபாடுமின்றி கல்வியை ஊட்டுவது ஆசியர்களின் பாரிய பணியாகும். இதுதான் உண்மையான ஆசிரியர் பணியாகும்.

கற்பித்தல் என்பது வெறுமனே தொழிலும் பார்க்க நன்மை தரும் ஒரு சேவையாகும். அறிவைப் பெற்றுக் கொள்வது மட்டுமன்றி பெற்​ேறாரின் அரவணைப்பு, உடல்உள ரீதியான பாதுகாப்பு, அன்பான வார்த்தைப்,பிரயோகம் மற்றும் வழிகாட்டல் மட்டுமன்றி தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணல் போன்ற சகல விடயங்களிலும் மாணவர்கள் பாடசாலையில் அனுபவப்படுகின்றார்கள்.

ஆசிரியர் சேவையின் வரலாறு கிறிஸ்துவுக்கு முன்பு தோன்றியதாகும். கி.மு.861 இல் வாழ்ந்த சீன நாட்டவராகிய கன்பியுசியஸ் என்பவரே முதலாவது தனியார் ஆசிரியர் என்று வரலாறு கூறுகின்றது.

கி.மு.7வது நூற்றாண்டில் ஆசிய நாட்டில் தோன்றிய உத்தமரே புத்தர் பெருமான் எனவும் புத்தர் பெருமானுக்கு முன்னர் இந்தியாவில் ஆசிரியர் தொழிலில் இடம்பெற்றதாகவும் இலக்கியச் சான்றுகள் கூறுகின்றன.

ஐ.நா சபையின் கல்வி மற்றும் விஞ்ஞானம் கலாசார அமைப்பு [UNESCO] மூலம் உலக ஆசிரியர் தினம் அறிமுகப்படுத்தப்பட்டது. உன்னதமான ஆசிரியர் சேவையை போற்றுவதற்கும் ஆசிரியர் சேவையில் உள்ளவர்களை கௌரவப்படுத்துவற்குமென இத்தினம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் ௦6ம் திகதி உலக ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. முதலாவது ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது 1994 ஒக்டோபர் மாதத்திலாகும். ஆசிரியர்கள் சமூகத்தின் சேவையின் பெறுமதியை உணர்த்துவதற்கென எல்லா உலக நாடுகளும் இத்தினத்தையொட்டி நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.

ஆபிரிக்க மற்றும் அரபுலக நாடுகளில் கல்விக்காக ஒதுக்கப்படும் வளம், முதலீடு போதாதென்பது யுனெஸ்கோ நிறுவனத்தின் நிலைப்பாடாகும்.

கல்வி கற்பது மாணவர்களின் அடிப்படை உரிமையாகும் என்றாலும் சில நாடுகள் ஆயுத உற்பத்தி போன்ற வேறு விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதையும் காணலாம். தற்கால தொழில்நுட்ப வளர்ச்சி,உலகமயமாக்கல் மூலம் குறைவான கல்வி மட்டத்துடனான சமூகமொன்றின் மூலம் ஒரு நாடு பல நூற்றாண்டுகள் வரை இருளிலே இருக்க வேண்டிய நிலை காணப்படுகிறது. தமது நாடுகளிலே பிள்ளைகளின் சிந்தனையை வளர்த்துக் கொள்ளவும் மற்றும் கல்விக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளுமாறு UNESCO நிறுவனம் இந்த நாடுகளில் கேட்டுக் கொள்கிறது.

யுனெஸ்கோ தரவுகளின்படி 2௦17ஆம் ஆண்டு ஆகும் போது பன்னிரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பற்றாக்குறை உலகு பூராகவும் காணப்படும்.பாடசாலை செல்லும் வயதை உடைய சகல பிள்ளைகளுக்கும் கல்வியைப் பெற்றுக் கொடுப்பதற்கான இலக்கை பெற்றுக் கொள்ள, இந்த ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்க இந்த ஆசிரியர் தொகையையுடன் புதிதாக ஆசிரியர்களை சேவையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தற்போது சேவையிலுள்ள ஆசிரியர்கள் ஓய்வூதியம் பெற்றதன் பின்பு ஏற்படும் வெற்றிடம் 2௦3௦ம் ஆண்டாகும் போது பதினைந்து இலட்சத்தைக் கிட்டியதாக இருக்குமென கணக்கிடப்பட்டுள்ளது .ஆசிரியர்களை சேவையில் இணைத்துக் கொள்வதன் மூலம் கல்வியை எதிர்பார்க்க முடியாது. உலகிற்கு தேவைப்படுவது குறிப்பிட்ட த​ைகமைகள் உடைய உயர் குணப்பண்புகளைக் கொண்ட ஆசிரியர்களாவர்.

மாணவர்கள் சமூக மயப்படுத்தப்படத் தேவையான பரிபூரண நிலை, பாடரீதியான அறிவு, மாணவர்களின் வெளிச்செயற்பாடுகள் பற்றிய அறிவு,நவீன முறையிலான கற்பித்தல் முறைகள் மற்றும் கல்வியற் செயற்பாடுகள் பற்றி பரந்த அறிவு இருப்பது அவசியமாகும்.இத்த​ைகமைகள் உள்ள ஆசிரியர்கள் உலகு பூராகவும் பரந்து காணப்படுவதாக யுனெஸ்கோ கருத்துரைக்கிறது.

தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் அறிவு என்பனவற்றில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. நடைமுறை பாடத்திட்டங்களுக்குப் பதிலாக மாணவ மாணவிகளின் ஆற்றலுக்கு மற்றும் அறிவு மட்டங்களுக்கு ஏற்ப கல்வித்துறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

21ம் நூற்றாண்டு அறிவின் நூற்றாண்டாகும். ஒரு நாட்டில் பிள்ளைகளுக்கு வழங்கக் கூடிய உன்னத மதிப்பிட முடியாத செல்வம் அறிவு ஆகும். மிக விரைவாக அறிவைப் பெற்றுக் கொள்ளும் சாதனங்கள் இன்று அதிகம் காணப்படுகின்றன.

மாணவர்கள் பெற்றுக் கொள்ளும் தகவல்கள் தாம் கற்றுக் கொண்ட விடயங்கள் வெளி உலகிலே பயன்படுத்த சந்தர்ப்பமாக அமைந்து விடுகின்றது.

21ம் நூற்றாண்டின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்ள புதிய மாற்றங்கள் மூலம் செயற்படுத்தப்படும் நல்ல குணப்பண்புள்ள ஆசிரியர் சமுதாயமொன்றின் தேவை சகல நாடுகளுக்கும் அவசியமானதாகும். இதற்காக நடை முறையிலுள்ள பயிற்சித் திட்டங்களுக்கு அப்பால் சென்று புதிய சிந்தனை மூலம் உருவாக்கப்பட்ட ஆசிரியர்களை பயிற்றுவிக்க வேண்டிய பொருத்தமான செயற்பாடுகளுடன் கூடிய ஆசிரிய வாண்மை விருத்தி வேலைத் திட்டங்களை அமுல்படுத்துவது அவசியமாகும்.

ஆசிரியர் மேம்பாட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது கீழே குறிப்பிடும் விடயங்களில் கவனம் செலுத்துதல் வேண்டும்.

நடைமுறையிலுள்ள உள்ள மாணவர்மயக் கல்வி ,ஆசிரியர் மையக் கல்வி என்ற வகையில் வேறுப்பட்டிருப்பதை ஆசிரியர் சமூகத்துக்கு அறிவுறுத்த வேண்டும்.ஆசிரியர்களால் வழிநடத்தப்படும் பிள்ளைகள் அறிவு ,திறன் மனப்பாங்கு என்பன காணப்பட வேண்டியதுடன் பாடசாலைக் கல்வியை நிறைவு செய்து வெளியே வரும் பிள்ளைகள் சிறந்த பொருளாதார பங்குதாரர்களாக,நல்ல சிந்தனையாளர்களாக மற்றும் சகல மத செயற்பாடுகளுக்கும் மதிப்பளிக்கும் பிரஜையாக மிளிருதல் வேண்டும்.இந்த புதிய சிந்தனைகளுக்கு ஏற்ப ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் பொறுப்பை கல்வி வலய நிலையங்கள் பொறுப்பேற்க வேண்டும்.

சகல மாணவ மாணவியர்களுக்கும் தங்களது வகுப்பறையிலே கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ள வகுப்பறைகளை ஒழுங்கு செய்வது, உலகிலுள்ள சவால்கள் பிரச்சினைகளை அறிதல்,அவற்றை ஆராய்வது மற்றும் பலவிதமான முறைகள் மூலம் அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கு மாணவர்களை தயார்படுத்தல் புதிய கற்பித்தல் முறைகயோடு பேச்சு,எழுத்து பாடல் தொடர்பாடல் மூலம் சமூக சுற்றாடல் பிரச்சினைகளை இனம் கண்டு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல், தொழில் வாய்ப்பு சந்தர்ப்பத்தை ஏற்படுத்த மாணவர்களை ஆயத்தப்படுத்தல் என்பன ஆசிரியர் வாண்மை மூலம் தயார்படுத்தப்படல் வேண்டும். மாணவர்களை நல்ல ஒழுக்கப் பண்புள்ளவர்களாக ஆக்குவதற்கு ஆசிரியர்களின் வகிபங்கு மிக முக்கியமானது என்பதை மறந்து விடல் கூடாது.

கல்வி சம்பந்தமாக கவனம் செலுத்தாத நாடுகளின் கல்வி வசதியை மேம்படுத்தவும் மற்றும் நல்ல குணமுள்ள ஆசிரியர் சமூகம் ஒன்றை உருவாக்கவும் உலக ஆசிரியர் தினத்தன்று முன்னுரிமை கொடுப்பது அவசியமாகும்.

 ஆசிரியர்களின் அறிவை மேம்படுத்துவது, புதிய சிந்தனை பற்றி அவர்களை அறிவுறுத்துவது கட்டாய தேவை ஆகும். ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் கல்வி வள நிலையங்களை பலப்படுத்துவது, ஆசிரியர் சேவைக்கு தேவையான செயற்பாடுகள், ஆராய்ச்சிகள் மூலம் ஆசிரியர் சேவையை பயனுள்ளதாக ஆக்க தேவையான அறிவை தேடி செல்லல் மற்றும் கல்வி அபிவிருத்திக்காக வேண்டி தீர்மானங்களை எடுத்தல் என்பன சகல நாடுகளிலும் அரச மட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்களாகும்.

சர்வதேச மற்றும் உதவி வழங்கும் நிறுவனங்கள் நாடுகள் இது பற்றி நாடுகளை உற்சாகப்படுத்தல் மற்றும் உதவிகள் வழங்குதல் என்பன காலத்தின் தேவை ஆகும். ஆசிரியர் சேவையை பணத்தால் மதிப்பிட முடியாது. சிறந்த ஆசிரியருக்கு நிகராக யாரும் இருக்க முடியாது.

யூ.எல்.எம். தாசிம் அதிபர், நிக/அஸ்ஸிராஜ் மு.வி.


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...