இலவசக் கல்வியை வலுப்படுத்தும் திட்டம் | தினகரன்

இலவசக் கல்வியை வலுப்படுத்தும் திட்டம்

இலங்கையின் இலவசக் கல்வித் திட்டத்தை மேலும் வலுப்படுத்தும் வகையிலான வேலைத்திட்டமொன்றை இணக்கப்பாட்டு அரசாங்கம் நேற்றுமுன்தினம் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியது. அது தான் 'சுரக்க்ஷா மாணவர் காப்புறுதி' திட்டமாகும்.

இவ்வருட (2017) உலக சிறுவர் தினமான ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ள இத்திட்டம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அலரி மாளிகையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

'தேசத்தின் பிள்ளைகளை நிதமும் பாதுகாப்போம்' என்ற தொனிப்பொருளின் கீழான இக்காப்புறுதித் திட்டத்தில் நாட்டிலுள்ள 11 ஆயிரத்து 242 அரசாங்கப் பாடசாலைகளில் கல்வி கற்கும் சுமார் 45 இலட்சம் பிள்ளைகள் கட்டாயத்தின் பேரில் உள்வாங்கப்பட்டுள்ளனர். இக்காப்புறுதித் திட்டத்திற்கு பெற்றோரோ, பிள்ளைகளோ எதுவிதக் கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை. மாறாக இந்நாட்டின் எதிர்காலச் சந்ததியினரின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இக்காப்புறுதித் திட்டத்திற்கான முழுச் செலவையும் அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளது. இதனடிப்படையில் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக 2700 மில்லியன் ரூபா முதற் கட்டமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வழிநடத்தலில், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக முன்னெடுக்கும் இத்திட்டத்தில், ஐந்து வயது- தொடக்கம் 19 வயது வரையான சகல பிள்ளைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இது 24 மணி நேரமும் செயற்படும் ஒரு காப்புறுதித் திட்டமாக உள்ளது.

இந்நாட்டிலுள்ள அரசாங்கப் பாடசாலைகளில் கல்வி கற்கும் பிள்ளைகள் மாத்திரமல்லாமல் பிரிவெனாக்களிலும், தனியார் கல்வி நிலையங்களிலும் கல்வி பயிலும் பிள்ளைகளும் இந்தக் காப்புறுதித் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் இத்திட்டத்தின் கீழ் அரசாங்க வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் பிள்ளைகளுக்கு நாளொன்றுக்கு, ஆயிரம் ரூபாப்படி முப்பது நாட்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படும். அத்தோடு வெளிப் பரிசோனைகளுக்காக பத்தாயிரம் ரூபா வரையும் வழங்கப்படவுள்ளது. மேலும் மாணவரொருவர் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றால் அவருக்கு ஒரு இலட்சம் ரூபா வரையும் கொடுப்பன வழங்கப்படும். திடீர் விபத்து காரணமாக மாணவர் ஒருவர் உயிரிழந்தால் அவருக்காக ஒரு இலட்சம் ரூபா நஷ்டஈடாக கொடுக்கப்படும். மாணவரின் பெற்றோர் உயிரிழந்தால் மாணவருக்கு 75 ஆயிரம் ரூபா உதவித் தொகையாக வழங்கப்படவுள்ளது.

இவை இவ்வாறிருக்க, இக்காப்புறுதித் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் பிள்ளைகளுக்கான வைத்தியசாலைக் கட்டணம் மற்றும் விஷேட நிபுணத்துவ வைத்தியர் கட்டணத்திலும் இருபது வீதக் கழிவும் பெற்றுக் கொடுக்கப்பட உள்ளது. அத்தோடு வைத்தியசாலைகளில் தங்கி இராது சிகிச்சை பெறுபவர்களும், வைத்தியர்களிடம் மருத்துவ ஆலோசனை பெறுவதற்கான செலவுக் கட்டணங்களைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவை தவிர, இன்னும் பலவித வசதி வாய்ப்புக்களையும் உள்ளடக்கியதாகவே இக்காப்புறுதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதுவும் உலகிலுள்ள எந்தவொரு காப்புறுதி நிறுவனத்துடன் இணைந்து காப்புறுதித் திட்டமொன்றை உருவாக்கும் போது முன்வைக்கப்படும் அடிப்படை நிபந்தனைகளுக்கு இணக்கமுடையவாறே இக்காப்புறுதித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ள சகல பாடசாலைப் பிள்ளைகளுக்கும் காப்புறுதி கூட்டுத்தாபனத்தினால் ஓர் அட்டை வழங்கப்படும். சிகிச்சை பெறச் செல்லும் போது இந்த அட்டையை வைத்தியசாலையில் சமர்ப்பிப்பது அவசியமானது. அரச வைத்தியசாலைகளையும், அரச சுகாதார சேவையையும் அடிப்படையாகக் கொண்டதாக இக்காப்புறுதித் திட்டம் விளங்கினாலும், சுகாதார அமைச்சில் பதிவு செய்துள்ள தனியார் மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலையைச் சிகிச்சைக்காகத் தெரிவு செய்யும் போது அதற்கும் காப்பீடு வழங்கப்படும்.

இவ்வாறான ஒரு புரட்சிகரத் திட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் இந்நாட்டின் இலவசக் கல்வி வரலாற்றில் முதற்தடவையாக அறிமுகப்படுத்தி இருக்கின்றது. அரை நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலம் இலவசக் கல்விக் கொள்கை நடைமுறையில் இருக்கும் இந்நாட்டில், காலத்திற்குக் காலம் பல்வேறு திட்டங்கள் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அவ்வாறான திட்டங்களில் இருந்து முற்றிலும் வித்தியாசப்பட்ட ஒரு திட்டமே இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு முற்போக்கு மிக்க ஒரு திட்டத்தை எந்தவொரு அரசாங்கமும் முன்னர் அறிமுகப்படுத்தி இருக்கவில்லை. அதேநேரம் இலங்கையில் மாத்திரமல்லாமல் தெற்காசியாவிலேயே முதன் முறையாகவே இவ்வாறான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றது. இத்திட்டமானது இலங்கையின் கல்வித் துறையில் ஒரு திருப்புமுனையாகவும், மைல் கல்லாகவும் அமைந்துள்ளதோடு இந்நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு நம்பிக்கை அளிக்கும் திட்டமாகவும் விளங்குகின்றது.

ஆகவே இந்நாட்டின் எதிர்கால சந்ததியினரின் நலன்களை அடிப்படையாகக் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தின் ஊடாக உச்ச பயன்களைப் பெற்றுக் கொள்வதோடு கல்வித் துறை முன்னேற்றத்தில் ஒரு பாரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்திட வேண்டிய பொறுப்பும் கடமையும் எதிர்காலச் சந்ததியினருக்கு உரியதாகும். 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...