Friday, March 29, 2024
Home » பத்து மில்லியன் மரக்கன்றுகள் நடுகை செய்யும் சாலையோர அபிவிருத்தித் திட்டம் ஆரம்பம்
சவூதி அரேபியாவின் பசுமைப் புரட்சி;

பத்து மில்லியன் மரக்கன்றுகள் நடுகை செய்யும் சாலையோர அபிவிருத்தித் திட்டம் ஆரம்பம்

by damith
October 24, 2023 3:47 pm 0 comment

சவூதி இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல்அஸீஸ் ஆல ஸுஊத் அவர்களால் தொடங்கப்பட்ட பசுமை சவுதி திட்டத்தின் கீழ் 10 மில்லியன் மரக்கன்றுகள் நடும் சாலையோர அபிவிருத்தித் திட்டம் ஒன்றை இன்று சவூதி அரேபியா அறிமுகப்படுத்துகிறது.

காலநிலை தொடர்பான அனைத்து சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்ளவும், காடு வளர்ப்பின் மூலம் நீண்டகால இலக்காக அடையப்படும் பொருளாதார மற்றும் சமூக நன்மைகள் ஊடாக குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவுமான சவூதி அரசின் தேசிய மற்றும் சர்வதேச கடமைப்பாடுகளின் ஒரு அங்மாக இது திகழ்கிறது.

இந்நிகழ்ச்சித் திட்டம் மத்திய கிழக்கு மற்றும் வடஆபிரிக்காவின் காலநிலை வாரத்தின் இரண்டாம் கட்ட செயல்பாடுகளுடன் இணைந்ததாக உள்ளது. இதை சவூதி அரசாங்கம் ரியாத் நகரில் முதல் முறையாக பொறுப்பேற்று தனது அனுசரணையில் நடத்துகிறது.

இயற்கையான வாழ்விடங்களின் அனைத்துப் பகுதிகளிலும் தாவரங்களை வளர்க்க வடிவமைக்கப்பட்ட ஒரு மூலோபாயத் திட்டம் இந்நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மேலும் நகரங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் பசுமையான இடங்களையும் இது உள்ளடக்குகிறது.

புதிய மரங்கள் குடிமக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கு பங்களிப்பதை உறுதிசெய்ய வேண்டிய தேவை உள்ளது. அவர்களில் பெரும்பாலோர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். நகர மையங்கள் மரங்களின் அடர்த்தி அதிகரிப்பால் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

இது வெப்பநிலையை (2.2) டிகிரி செல்சியஸ் அளவில் குறைக்க உதவும். அத்துடன் காற்றின் தரத்தை மேம்படுத்துகிறது. அதிக வெப்பநிலை மற்றும் காற்று மாசுபாடு ஆகியவை உலகெங்கிலும் உள்ள நகர்ப்புறங்களில் மிகவும் பொதுவான சுற்றுச்சூழல் அபாயங்களில் ஒன்றாகும். அவை இதயம், மற்றும் சுவாச நோய்கள் போன்ற தொற்றாத நோய்த் தொகுதி பரவலுடன் இணைக்கப்பட்டுள்ளன. நகரங்களில் தாவரங்களை வளர்ப்பதற்கான முயற்சிகள் காபனீரொ க்சைட் அளவைக் குறைக்க உதவுகின்றன. மேலும், சாலையோர திட்டவரைபை செயல்படுத்துவது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கும், மரங்கள் நடுதல், விதைகள் சேகரித்தல், விவசாய நிலங்களை தயாரித்தல் மற்றும் பராமரித்தல், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை மீண்டும் பயன்படுத்துவதற்கான இணைப்புகளை உருவாக்குதல் மற்றும் அதற்கான அடிப்படைகளை நிறுவுதல் போன்ற பணிகளையும் தேவைப்பாடுகளையும் நிவர்த்திப்பதற்கு இது உதவுகிறது.

‘பசுமை சவூதி அரேபியா’ நிகழ்ச்சித் திட்டமானது உலகின் மிகப்பெரிய காடுகளை வளர்ப்பதற்கான முயற்சிகளில் ஒன்றாகும். குறைந்த மழைவீதம், விளைநிலப் பகுதி மற்றும் வனப்பகுதிகள் உட்பட நாடு எதிர்கொள்ளும் பல்வேறு சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதில் சவூதி அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாட்டையும் அர்ப்பணிப்புடனான சேவையையும் இது பிரதிபலிக்கிறது.

10 பில்லியன் மரங்களை நடுவதாக அறிவிக்கப்பட்ட திட்டத்தின் முதன்மை இலக்கு, நாட்டின் 40 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பை மீட்டு வளப்படுத்துவதாக அது அமைவதாகும்.

திட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் இந்த இலக்கு தரம் உயர்த்தப்பட்டு, தற்போது 74.8 மில்லியன் ஹெக்டேர் நிலத்தை வளப்படுத்துவதற்கு சமமாக உள்ளது.

10 பில்லியன் மரங்களை நடுவதற்கான இலக்கு உலகளாவிய காடு வளர்ப்பின் இலக்கின் (1%) மற்றும் ‘பசுமை மத்திய கிழக்கு’ நடவடிக்கைகளால் நிர்ணயிக்கப்பட்ட 50 பில்லியன் மரங்களை நடுவதற்கான இலக்கின் 20% வீதத்தை நிவர்த்திக்கிறது.

இன்று அறிவிக்கப்பட்ட சாலையோர நிகழ்ச்சித் திட்டம் நாட்டின் காடு வளர்ப்பு முயற்சிகளின் தொடக்கத்தைக் குறிக்கவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் 2017 மற்றும் 2023 இற்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் நாடு முழுவதும் 41 மில்லியன் மரங்கள் நடப்பட்டுள்ளன.

இரண்டு ஆண்டுகளாக நீடித்த விரிவான மூலோபாய அறிவியல் சாத்தியக்கூறு ஆய்வின் அடிப்படையில் சுற்றுச்சூழல், நீர் மற்றும் விவசாய அமைச்சகம் மற்றும் தேசிய தாவர மேம்பாடு மற்றும் பாலைவனமாக்கலை எதிர்த்துப் போராடுவதற்கான தேசிய மையம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த சாலையோர அபிவிருத்தி செயற்திட்டம் செயல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பல நிபுணத்துவங்களில் மிகவும் திறமையான உள்ளூர் மற்றும் சர்வதேச நிபுணர்களின் உயரடுக்கு குழு 10 பில்லியன் மரங்களை நடும் இலக்கை அடைய நாட்டை நகர்த்திச் செல்வதில் கவனம் செலுத்துகிறது. இது தொடர்பான களஆய்வுகளும் பரிசோதனைச் செயன்முறைகளும் விருத்தியடைந்து செல்வது குறிப்பிடத்தக்கது.

காடுவளர்ப்பு நடவடிக்கைகளில் பயன்படுத்தக்கூடிய நிலையான நீர்ப்பாசன முறைகளை அடையாளம் காண்பதும் அவற்றை அடைந்து கொள்வதும் தேர்ந்தெடுக்கப்பட்ட மர இனங்கள் தாவரங்களுடன் இணக்கமாக இருப்பதை உறுதிசெய்தல் மற்றும் நாட்டின் காலநிலைக்கு ஏற்ப அவற்றின் திறனை உறுதிப்படுத்துதல் என்பன முக்கியமானவை. இந்த ஆய்வில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 1,150 இற்கும் மேற்பட்ட களஆய்வுகள் அடங்கும்.

பல்வேறு சுற்றுச்சூழல் நிலைமைகளின் அடிப்படையில் மரங்களை நடுவதற்கு மிகவும் பொருத்தமான புவியியல் இடங்களைத் தீர்மானிக்க மண், நீர், வெப்பநிலை, காற்று மற்றும் கடல் மட்டத்திலிருந்து உயரம் உட்பட விஞ்ஞானப் பரிந்துரைகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, தொடர்புடைய துறைகளின் விரிவான மதிப்பீடும் இந்த ஆய்வில் அடங்கும். அங்கீகரிக்கப்பட்ட சாலையோர அபிவிருத்தி செயற்திட்டத்தை இரண்டு கட்டங்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டம் 2024 முதல் 2030 வரை நீண்டுசெல்கிறது, இது இயற்கை அடிப்படையிலான அணுகுமுறையைப் பின்பற்றுகிறது.

இரண்டாம் கட்டம் 2030 இல் தொடங்கும் அதேவேளையில், சுற்றுச்சூழல் மறுவாழ்வில் மனித முயற்சிகளின் அடிப்படையில் ஒரு விரிவான அணுகுமுறையை உருவாக்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

சதுப்புநிலக் காடுகள், சதுப்பு நிலங்கள், மலைக்காடுகள், மேய்ச்சல் நிலங்கள், தேசியப் பூங்காக்கள் மற்றும் பள்ளத்தாக்குகள் உள்ளிட்ட பல்வேறு இயற்கை வாழ்விடங்களில் செழித்து வளரும் 2,000 இற்கும் மேற்பட்ட தாவர இனங்கள் சவுதி அரேபியா இராச்சியத்தில் உள்ளன. 2030 ஆம் ஆண்டளவில் 600 மில்லியனுக்கும் அதிகமான மரங்கள் நடப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது,

இது 3.8 மில்லியன் ஹெக்டேர் நிலத்தை மீட்டு வளப்படுத்துவதற்கு சமம் ஆகும். பல்லுயிர் பெருக்கத்தை மீட்டெடுப்பது மற்றும் பாதுகாப்பது என்பது 10 பில்லியன் மரங்களை நடும் இலக்கு கவனம் செலுத்தும் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும்.

அஷ்ஷெய்க் அஷ்ரப் ஆப்தீன் (ரியாதி) விரிவுரையாளர், தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா கலாபீடம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT