Saturday, April 27, 2024
Home » ஐக்கிய நாடுகள் சபையுடன் சவூதியின் ஆதரவுப் பயணம்

ஐக்கிய நாடுகள் சபையுடன் சவூதியின் ஆதரவுப் பயணம்

- இன்று ஐ.நா. தினம்

by damith
October 24, 2023 9:46 am 0 comment

ஐக்கிய நாடுகள் சபை அதன் 78 ஆவது ஆண்டு நிறைவை இன்று 24ஆம் திகதி கொண்டாடுகிறது. ஐ.நாவினால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு செயற்பாடுகளில் பங்கேற்ற சர்வதேச நாடுகளுக்கு மத்தியில் சவூதி அரேபியாவின் பங்களிப்பு சுட்டிக்காட்டத்தக்கது.

சவூதி அரேபியா 1945 ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் திகதியன்று ஐ.நாவின் உத்தியோகபூர்வ உறுப்பினராக இணைந்து கொண்டது. சர்வதேச சமூகத்தின் முயற்சிகளுக்கு ஐ.நா சபையில் உறுப்புரிமை பெற்ற நாள் தொடக்கம் சவூதி அரேபியா தொடர்ந்தும் ஆதரவளித்து வருகிறது.

ஆக்கபூர்வமான உரையாடல், மனிதாபிமான மற்றும் நிவாரண உதவிகளை வழங்குதல், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுதல் போன்ற செயற்பாடுகள் மூலம் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண அந்நாடு உழைத்து வருகிறது.

அரபு, இஸ்லாமிய மற்றும் சர்வதேச நாடுகளுடைய பிரச்சினைகள் மற்றும் விவகாரங்கள் தொடர்பாக ஐ.நா மேடைகளில் சவூதி அரேபியத் தலைவர்கள் குரலெழுப்பி இருக்கிறார்கள். மேலும் சர்வதேச பாதுகாப்பு, சமாதானம், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், மனிதாபிமான நிவாரண நடவடிக்கைகள், நாகரிகங்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை முன்னெடுப்புகள் போன்றவை தொடர்பாக சவூதி தலைமைகள் தொடர்ச்சியாக ஆர்வம் காட்டியுள்ளதோடு சர்வதேச ரீதியாகவும் இது தொடர்பாக குரலெழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது. உலக மக்களிடையே உண்மை, சகோதரத்துவம், நீதி ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் மனித உறவுகளை வலுப்படுத்தும் நோக்கிலும் சவூதி அரசாங்கம் செயற்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சவூதியின் செயற்பாடுகள் ஐ.நா சபையின் கொண்டாட்டங்கள் மற்றும் கூட்டங்களில் வருடாந்த பங்கேற்புடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை. மாறாக ஐக்கிய நாடுகள் சபை அதன் நிறுவனங்கள், குழுக்கள் மற்றும் அதனுடன் இணைந்த அமைப்புகளுக்கு நிதி, தளவாட மற்றும் பல வகையான முறைமைகளின் மூலம் ஆதரவளிப்பதற்கான அதன் ஆர்வத்தையும் முயற்சியையும் சவூதி எப்போதும் மேற்கொண்டுள்ளது.

சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு மையத்தை நிறுவுவதற்கான முன்மொழிவு சமர்ப்பித்தமையை ஐக்கிய நாடுகள் சபையை ஆதரிப்பதில் சவூதியின் மிக முக்கியமான முயற்சிகளில் ஒன்றாகக் குறிப்பிட முடியும். ஐக்கிய நாடுகள் சபையின் பயங்கரவாத எதிர்ப்பு மையம் செப்டம்பர் 2011 இல் தொடங்கப்பட்ட போது சவூதி அரேபியா தனது பங்களிப்பாக பத்து மில்லியன் அமெரிக்க டொலர்களை அவ்வமைப்பின் மூன்று ஆண்டுகளுக்கான செலவுகளுக்காக வழங்குவதாக அறிவித்தது.

ஐ.நா சபையின் பணிகளில் சவூதி வழங்கிய ஆதரவுகளில் மிக முக்கிய அம்சமாக, 2011 ஒக்டோபர் 13 அன்று மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் உலகளாவிய பேச்சுவார்த்தை மையத்தை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டமையை சுட்டிக் காட்டலாம்.

உலக உணவுத் திட்டம், பலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி நிறுவனம் (யு.என்.ஆர்.டப்ளியூ.ஏ) மற்றும் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் (ஒ.சி.எச்.ஏ) உட்பட பல ஐக்கிய நாடுகளின் நிதியங்களுக்கு நன்கொடை வழங்குவதன் மூலம் இயற்கைப் பேரழிவுகளின் விளைவுகளைக் குறைத்தல், வறுமை மற்றும் நோய்களை எதிர்த்துப் போராடுதல் உள்ளிட்ட பல அம்சங்களில் ஐ.நா சபைக்கு சவூதி அரேபிய இராச்சியம் பக்கபலமாக இருந்துள்ளது.

பல்வேறு துறைகளில் ஐ.நாவின் முக்கிய ஆதரவாளர்களில் ஒன்றாக சவூதி அரேபியா இருந்து வந்துள்ளது. சவூதி அரேபியா, ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல சர்வதேச நிறுவனங்கள் மற்றும் கூட்டமைப்புகளுக்கு அதன் ஆதரவை வழங்கும் நோக்கோடு பல நன்கொடைகளை அளித்துள்ளது. 439,583,602 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரையான நிதிப் பங்களிப்பை ஐக்கிய நாடுகள் சபைக்கு சவூதி அரேபிய இராச்சியம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காலித் ஹமூத் அல் கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர், கொழும்பு

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT