Friday, April 19, 2024
Home » காசாவில் தரைவழித் தாக்குதலை தாமதப்படுத்த இஸ்ரேல் இணக்கம்
அமெரிக்க துருப்புகள் வரும்வரை

காசாவில் தரைவழித் தாக்குதலை தாமதப்படுத்த இஸ்ரேல் இணக்கம்

by damith
October 24, 2023 9:11 am 0 comment

அமெரிக்க மேலதிக துருப்புகள் பிராந்தியத்திற்கு வரும் வரை காசா மீதான தரைவழி தாக்குதலை தாமதப்படுத்தும் அமெரிக்காவின் கோரிக்கைக்கு இஸ்ரேல் இணங்கியுள்ளது.

இஸ்ரேல் மற்றும் காசா மோதல் வெடித்த விரைவில் இஸ்ரேலுக்கு ஆதரவாக மத்திய கிழக்கில் இரு விமானதாங்கி கப்பல்களை நிலைநிறுத்திய அமெரிக்கா 2000 கடற்படையினரை அங்கு அனுப்புவதாகவும் அறிவித்தது.

இந்நிலையில் பிராந்தியத்திற்கு அமெரிக்காவின் மேலதிக இராணுவ தளபாடங்கள் மற்றும் துருப்புகள் செல்லும்வரையும், ஹமாஸ் பேராளிகளால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக இராஜதந்திர முயற்சிகளுக்கு வழிவிடும் வகையிலும் தரைவழித் தாக்குதலை தாமதப்படுத்தும்படி அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்டின் இஸ்ரேலை வலியுறுத்தி இருப்பதாக நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை இரு அமெரிக்க பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பணயக்கைதிகளை விடுவிக்க அனைத்து இராஜதந்திர வாயில்களையும் பயன்படுத்தி முயற்சி மேற்கொள்ளப்படும் என்று கடந்த வாரம் இஸ்ரேல் சென்றிருந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குறிப்பிட்டிருந்தார்.

தரைவழி போர் வெடித்தால் பணயக்கைதிகளை விடுவிப்பதில் சிக்கல் ஏற்படும் என்று நம்பப்படுகிறது.

தமது பிடியில் இருக்கும் இஸ்ரேலியர் அல்லாத அனைவரையும் விடுவிக்க எதிர்பார்ப்பதாக ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது. எனினும் காசா மீதான தொடர்ச்சியான தாக்குதல்களால் அந்தத் திட்டம் தடைப்பட்டிருப்பதாக அது தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT